இல்லற வாழ்வில் பொன்விழா கண்ட ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் பா.கிருஷ்ணமூர்த்தி-டோரதி இணையரின் திருமண நாளை முன்னிட்டு அவர்களுக்கு புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை புறநகர் பகுதியான திருக்கோகர்ணம் அருகே பழனியப்பா நகரில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் நூலகமாகத் திகழ்கிறது இந்த ஞானாலயா ஆய்வு நூலகம்.
இந்நூலகம் 1959 ஆம் ஆண்டு நூறு புத்தகங்களுடன் தொடங்கப்பட்டது. இந்நூலகத்தில் தற்சமயம் சுமார் 100,000 புத்தகங்கள் உள்ளன. இவை தவிர முக்கிய ஆவணங்களும், அரிய புகைப்படங்களும், பிரசுரமாகாத பிரபல அறிஞர்களின் கையெழுத்து கடிதங்களும் உள்ளன. 1920 முதல் 2010 வரை வெளியான தமிழ் இலக்கிய சிற்றிதழ்கள் மிக அதிக அளவில் உள்ளன.
இந்நூலகம் அரிய முதல் பதிப்புகளைக் கொண்டுள்ள இந்தியாவிலுள்ள பெரிய தனியார் நூலகங்களில் ஒன்றாகும். இந்த நூலகத்தை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவி டோரதியுடன் இணைந்து நடத்தி வருகிறார்
ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியின் தந்தையார் பாதுகாத்து வைத்திருக்கும் படி கொடுக்கப்பட்ட 100 நூல்களுடன் இந்த நூலகம் தொடங்கியது. அரிய நூல்களின் மதிப்பை உணர்ந்த ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி பல இடங்களுக்குச் சென்று அரிய நூல்களைச் சேகரித்தார். இவரது மனைவி டோரதியும் இணைந்து நூற் சேகரிப்பில் ஈடுபட்டு இந்த நூலகத்தை உலகப் புகழ் பெறச்செய்து பாதுகாத்து பராமரித்து வருகின்றனர்.
இத்தம்பதியருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தங்களது வாரிசுகளுடன் ஒரு மகள் நியூசிலாந்திலும், மருத்துவரான மற்றொரு மகள் சென்னையிலும் வசித்து வருகின்றனர். திருமணநாள் காணும் கிருஷ்ணமூர்த்தி-டோரதி தம்பதியருக்கு புதுக்கோட்டை வாசகர் பேரவை செயலர் சா. விஸ்வநாதன், நிர்வாகி மு. ராமுக்கண்ணு, மருத்துவர் எஸ். ராமதாஸ் உள்ளிட்ட சான்றோர்கள் பலரும் சென்னையில் உள்ள இருவருக்கும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.