கணித மேதை சீனிவாச ராமானுஜன் நினைவு நாளில்..
ஈரோட்டில் பிறந்து, கும்பகோணத்தில் படித்து, தேர்வில் தோற்று, தற்கொலைக்கு முயன்று சென்னைக்கு வந்து படாத பட்டு தமிழகத்தில் வளர்ந்து, சில காலங்கள் லண்டனில் வாழ்ந்து பின் தமிழகத்திலேயே தனது 33 வது வயதில் ஹெப்பாடிக் அமீபியாசிஸ் தொற்றினால் ஈரல் சிதைந்து இறந்து போனவர்.
ஒரு வகையில் சாதாரண நடுத்தர வாழ்க்கை வாழ்ந்தவர் தான் ராமானுஜர். சிலாகிக்கும் வகையில் வாழ்ந்தவர் அல்ல வாழ்க்கையில்! கிட்டத்தட்ட நடுத்தர வர்கத்தினர் பலரும் கடந்து வந்த பாதை தான். ஆனால் கணிதத்தில் அவரின் சில கணக்குகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது.
அவரும் தேர்வுக்கு பயந்திருக்கிறார்! தோல்வியுற்று இருக்கிறார், கலெக்டரிடம் போய் இரண்டு வேளை உணவிற்கும், கணிதம் எழுத காகிதத்திற்காகவும் வேண்டுகோள் வைத்திருக்கிறார். பல அறிவியல் மேதைகள் போல வெள்ளி கரண்டியோடு பிறந்தவரல்ல. போராட்டமே வாழ்க்கையாய் இருந்திருக்கிறது.
குழந்தை மேதையாக தனது12 வயதிலேயே கணிதப்புலியாக இருந்திருக்கிறார். அப்பா ஜவுளிக்கடை குமாஸ்தா அம்மா கோவிலில் பாட்டுப்பாடி சின்னச் சின்ன வேலைகள் செய்து சொற்ப வருமானத்தில். அவரது குடும்பம் இப்படியாக தான் இருந்தது.
இந்த கணித மேதையையும் ஒரு புத்தகம் தான் மாற்றியிருக் கிறது. புத்தகத்தின் பெயர் – ஜி எஸ் கார் எழுதிய ஏ சினாப்ஸிஸ் ஆஃப் எலிமெண்டரி ரிசல்ட்ஸ் இன் பியூர் அண்ட் அப்லைட் மேத்தமேட்டிக்ஸ். இந்த புத்தகத்தில் ஆயிரக்கணக்கான தேற்றங்கள் இருந்திருக்கிறது. அவற்றில் சில எந்த ஆதாரமும் அற்றதாக, சுருக்கமாக இருந்திருக்கிறது.
ராமானுஜம் மேற்கொண்ட தீர்வுகள் அதை தீர்க்கும் விதத்தில் இன்னும் பலப்படுத்தியிருக்கிறது அவரை. தனது 15 வது வயதில் இதை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிட தக்கது. கணிதத்தில் அதீத ஆர்வமாய் இருந்ததால் மற்ற பாடங்களில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சோபிக்க முடியாமல் இடைநிலை தேர்வில் தோல்வியுற்றார்.
கணிதத்தில் மேதையாக இருந்த போதிலும், ராமானுஜன் தனது வாழ்க்கையில் ஒரு நல்ல தொடக்கத்தை கொண்டிருக்கவில்லை. அவர் 1904 இல் கல்லூரிக்கான உதவித்தொகை பெற்றார், ஆனால் அவர் கணிதம் அல்லாத பாடங்களில் தோல்வியுற்றதால் அதை பெற முடியாமல் போனது.
இந்த மேதையின் ஆயிரக்கணக்கான தேற்றங்களும், முடிவிலியும் இன்றைக்கும் அறிவியல் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. இவரை கொண்டாடியவர் களில் பேராசிரியர். ஹார்டி முக்கியமானவர். இவரின் இழப்பு மற்ற யாவரையும் விட இவரை உலுக்கியிருக்கிறது.
(ராமானுஜர் ஹார்டிக்கு எழுதிய கடிதத்தையும் , ஹார்டி ராமானுஜத்திற்கு அனுப்பிய பதில் கடிதத்தின் சாராம்சத்தை பின்னர் தனி பதிவாக தருகிறேன்). ஹார்டியும் ராமானுஜமும் ஒரு வாடகைக்காரில் பயணம் செய்திருக்கிறார்கள். இருவர் நாடி நரம்புகளில் கணிதம் மட்டுமே முறுக்கேறி இருந்ததால் வண்டியின் பதிவு எண் 1729 ஐ பற்றி விவாதிக்கின்றனர். சுவாரஸ்யமற்ற எண் என்று கூறியிருக்கிறார் ஹார்டி. இல்லை இந்த எண்ணிலும் முக்கியத்துவம் இருக்கிறது என அதன் சிறப்பை உணர்த்தியவர் ராமானுஜம் (It is the smallest number expressible as a sum of two cubes in two different ways. That is, 1729 = 1^3 + 12^3 = 9^3 + 10^3.). அதனாலேயே அதற்கு இங்கிலாந்து கணிதவியலாளர் ஹார்டி மற்றும் இந்திய கணிதவியலாளர் ராமானுஜம் நினைவாக 1729: The Magic Of Hardy-Ramanujan Number என்ற பெயர் சூட்டப்பட்டது.
இந்த மேதையின் சொந்த வாழ்க்கை அவ்வளவு சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கவில்லை. மனைவியோடு வாழ்ந்ததென்னவோ சொற்ப காலம் தான். தனிநபராக புகைவண்டி வைத்திருந்த எம்பெருமான் செட்டியார் தான் அவர் நோயுற்றிருந்தபோது, அவருக்காக கடைசி காலத்தில் செட்டியார் பேட்டை என்று அழைக்கப்பட்ட, தற்போதைய சேத்துப்பட்டில் பங்களா கொடுத்து, சமைத்துப்போட ஆட்களையும் நியமித்திருந்தார்.
ராமானுஜத்தின் மனைவியை சீட்டு மாமி என்றே அறிந்து வைத்திருந்தார்கள். பின் தத்தெடுத்த பையனை வளர்த்து படிக்க வைத்து வங்கியில் உத்தியோகம் வாங்கிக்கொடுத்து பாம்பேயில் அவர்களுடன் வாழ்ந்திருக்கிறார். தனது கணவர் அத்தனை அறிவாளி என்று உணர்ந்து இருக்க கூட மாட்டார். மனைவிக்கு எழுதும் கடிதம் கூட அவர் அம்மா வழி சென்றதால் சொல்லிக்கொள்ளும்படியான சுவாரஸ்யம் தாம்பத்ய வாழ்க்கையில் இருந்திருக்க வாய்ப்பில்லை.
இந்தியாவிற்கு வரும் போதே நோயுடன் தான் வந்திருக்கிறார். சாஸ்திரத்தை உடைத்துக் கடல் கடந்து சென்ற குடும்பங்கள் இன்று, பல வெளிநாடுகளில் சுபிட்சமாக இருக்கின்றன. மாறிக்கொண்டிருக்கும் உலகில், காலம் கற்று தந்த பாடம்.
அன்று கடல் கடந்து சென்று திரும்பியவர் என்பதால் அவரின் சொந்தக்காரர்கள் எல்லாம் கைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்பது தான் சோகம். சமூகம் ஒதுக்கி வைத்தா லும் சாஸ்திரத்தை சம்பிரதாயத்தை உடைத்த அந்த கணித நட்சத்திரம் என்றும் நம்மிடையே ஜொலித்து கொண்டு தான் இருப்பார்.
அவர் காலத்தில் கணித உலகில் சிலர் நடை பழகி கொண்டிருந்த பொழுது, அவர் ஒலிம்பிக் பந்தயத்தில் ஓடி கொண்டிருந்தார், சிலர் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் பொழுது அவர் விருதுகளை குவித்து கொண்டிருந்தார். ராமானுஜரின் சாதனைகள் அப்படி. கணித உலகம் ஒரு உண்மையினை ஒப்புக்கொள்கிறது.
அன்றே இந்த நுண்கணிதம் இருந்திருந்தால் ஐன்ஸ்டீனை நெருங்கும் ஆய்வுகளை ராமானுஜர் கொடுத்திருப்பார் என்கிறது. கெப்ளர், கோப்பர்நிக்கஸ், நியூட்டன், ஐன்ஸ்டீன் வரிசையில் இடம் பிடித்த அந்த அதிசயப்பிறவி, அறிவாளி தமிழனின் நினைவு நாளில் அவருக்கு பெரும் அஞ்சலிகள்.
இங்கிலாந்திலிருந்து.. சங்கர் 🎋