Close
நவம்பர் 23, 2024 9:53 காலை

பிரிட்டன் ராணியின் பிளாட்டின ஜூப்ளி விழா.. ஓர் பார்வை.. 

இங்கிலாந்து ராணி

இங்கிலாந்து ராணி

பிரிட்டன் ராணியின் பிளாட்டின ஜூப்ளி விழா.. ஓர் பார்வை.. 

ஜூப்ளி என்பது மன்னராட்சியில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் ஆட்சியின் மகிமை சார்ந்த கொண்டாட்டமாகும்.  ஒவ்வொரு ஆண்டும் வழமையாக நடக்கும் கொண்டாட்டங்களை விட, ஆட்சிக்காலத்தில் நடந்த குறிப்பிட தக்க நிகழ்வுகளை குறித்து, அதனை விமரிசையாக நாடு முழுவதும் அரசு விழாவாக கொண்டாடப்படுவது இதன் சிறப்பு. ஒவ்வொரு ஜூப்ளிக்கும் ஒரு பெயர் உண்டு, குறிப்பிட்ட காலஅளவை கணக்கில் கொண்டு பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

வெள்ளி விழா: 25 ஆண்டுகள்.
மாணிக்க விழா : 40 ஆண்டுகள்.
பொன்விழா: 50 ஆண்டுகள்.
வைர விழா: 60 ஆண்டுகள்.
நீலமாணிக்க விழா : 65 ஆண்டுகள்.
வெண் தங்க விழா : 70 ஆண்டுகள்.

பல நிகழ்வுகள் பிரிட்டிஷ் ராயல் குடும்பத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. திருமண ஆண்டு அல்லது பிறந்தநாள் என பொதுமக்கள் சேர்ந்து கொண்டாடும் நிகழ்வுடன், ராஜ பரம்பரையில் ஜூப்ளிகள் என்று அழைக்கப்படும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் என்பது ராஜா மற்றும் ராணி
பதவி ஏற்கப்பட்டது, முடிசூடிக்கொண்டது -இவற்றை உள்ளடக்கிய கொண்டாட்டம் ஆகும்.

மன்னர் ஜார்ஜ் VI 1952 பிப்ரவரி 6 அன்று இறந்தார். 25 வயதாக இருந்த அவரது மகள் இளவரசி எலிசபெத் அப்போது, இளவரசர் பிலிப்புடன் கென்யாவில் அரசு முறை சுற்றுப் பயணத்தில் இருந்தார். தந்தையின் மரண செய்தி எலிசபெத்திடம் தெரிவிக்கப்பட்டது, அவர் உடனடியாக இங்கிலாந்துக்கு ராணியாகத் திரும்பினார், இருப்பினும் அவருக்கு 2 ஜூன் 1953 வரை முடி சூட்டப்படவில்லை.

பிரிட்டிஷ் வரலாற்றில் வேறு எந்த வேறு மன்னர்களும், ராணிகளும் இவரை போன்று அதிக காலம் வாழ்ந்ததுமில்லை, அரியணையில் ஆட்சிப்பொறுப்பில் இருந்ததுமில்லை.
பிரிட்டனில் மன்னராட்சி முடிவு பெற்று மக்களாட்சி நடைபெற்றாலும், இங்கிலாந்து பிரதமர்களை தேர்வு செய்வதில் ராணியின் பங்கு மிக முக்கியமானதாகும். இரண்டாம் உலகப் போரின் நாயகன் வின்ஸ்டன் சர்ச்சில் உள்பட 14 இங்கிலாந்து பிரதமர்களின் காலகட்டங்களில் அரசியாக பொறுப்பு வகித்துள்ளார்.
இங்கிலாந்து வரலாற்றில் இதற்கு முன்பு விக்டோரியா மகாராணி 63 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த நிலையில், அதனை கடந்து 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்து இரண்டாம் எலிசபெத், இந்த வரலாற்று சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணி இரண்டாம் எலிசபெத் 2002 -இல் தனது பொன் விழாவையும், 2012 -இல் தனது வைர விழாவையும் கொண்டாடினார். 2022 -ஆம் ஆண்டில், வெண் தங்க விழாவைக் கொண்டாடும் முதல் பிரிட்டிஷ் ராணி என்ற பெருமையை தற்போது பெறுகிறார்.

அவரது மாட்சிமையின் 70 ஆண்டுகால ஆட்சியைக் குறிக்கும் வகையில், பிளாட்டினம் ஜூப்ளியாக, ராயல் அரண்மனை கொண்டாடி வருகிறது. ஜூன் 2 முதல் 5 வரை ஐக்கிய ராச்சியத்தில் உள்ளவர்களுக்கு நான்கு நாட்கள், வார இறுதி நாட்களுடன் சேர்த்து விடுமுறை. அரச குடும்ப அணிவகுப்பு உட்பட பல சிறப்பு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

அரச குடும்ப உறுப்பினர்கள், 1,400 வீரர்கள், 200 குதிரைகள் மற்றும் 400 இசைக்கலைஞர்கள் பங்கேற்பார்கள். அணிவகுப்பு பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து புறப்பட்டு,மிகவும் பிரபலமான லண்டன் தெருக்கள் வழியாக செல்லும். ஜூன் 4 சனிக்கிழமையன்று, அரண்மனையில் தி பிளாட்டினம் பார்ட்டி என்ற நேரலை இசை நிகழ்ச்சி நடைபெறும், இதில் ஏராளமான பிரபலங்கள்
கலந்து கொள்வார்கள். ஜூன் 5 ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் உள்ள மக்கள் தெருவோர விருந்துகளை நடத்தவும், தங்கள் அண்டை வீட்டாருடன் வெளியில் அமர்ந்து மதிய உணவு சாப்பிடவும் செய்வார்கள்.
இங்கிலாந்து ராணியின் 70 ஆண்டுகால ஆட்சியைக் கௌரவிக்கும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் மரங்களை நட வேண்டும் என இளவரசர் சார்லஸ் கேட்டுக் கொண்டுள்ளார். ஜூப்ளியைக் குறிக்கும் வகையில் 70 புராதன வனப்பகுதிகளையும், 70 மரங்களையும் பாதுகாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

ராணி தன் வார்த்தைகளுக்கு உண்மையாக இருந்திருக்கிறார், அவருடைய விசுவாசமும் சேவையும் நாட்டு மக்களுக்கு தளராத நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அவர் எங்கு சென்றாலும், அனைவராலும் நேசிக்கப்படுகிற ஒரு ஆளுமையாகவே இன்றுவரை இருந்து வருகிறார். யாரை வாழ்த்தினாலும் அவரது மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொடுத்த வண்ணமே இருந்திருக்கிறார்.

பிரிட்டிஷ் மகாராணியே! உங்கள் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு மிக்க நன்றி. வெண் தங்க விழா வாழ்த்துகள்.வரும் ஆண்டுகளில் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன். you are very treasured!

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top