காக்கசூரா என்பவர் தான் நம்ம எல்லாரும் விரும்பி சாப்பிடறோமே, அந்த மைசூர் பாக்கினை கண்டுபிடிச்சவர். இவர் மைசூர் அரண்மனையில் சமையல்காரரா இருந்திருக்கார். சாப்பிட்டு முடிச்சதுமே, இனிப்பு சாப்பிடுறத மன்னர் வழக்கமா வச்சிருந்திருக்கார். அன்னைக்குன்னு பார்த்து இனிப்பு தீர்ந்து போகவே, நம்ம காக்கசூரா என்ன பண்ணினார் தெரியுமா..? கடலைமாவு, சர்க்கரை, நெய் எல்லாத்தையும் சேர்த்து அவசரம் அவசரமா கிண்டி, பாகு காய்ச்சி ஒரு இனிப்பு மாதிரி செஞ்சி மன்னர் கிட்ட கொண்டு போய் கொடுத்திருக்கார். அதுக்குள்ள அது கெட்டியா போய்டுச்சு.
மன்னர் என்ன சொல்ல போறாரோன்னு பயந்துகிட்டே இருந்த காக்கசூராவுக்கு ஒரே ஆச்சர்யம். மன்னர் அந்த இனிப்பு சாப்பிட்டதும் அவருக்கு ரொம்ப பிடிச்சி போய், இது பேரு என்னன்னு, காக்கசூராகிட்ட கேட்க, அவரும் அவசரத்துக்கு ‘நளபாக்’ னு சொல்லி வச்சிட்டார். அரண்மனை ஆஸ்தான இனிப்பாவே மாறிப்போன அந்த ‘நளபாக்’, மைசூர் அரண்மனையில கண்டுபிடிக்கப்பட்டதால பின் நாட்கள்ல ‘மைசூர்பாக்’ னு பெயர் மாறிடுச்சு.
அவ்வளவுதான் இந்த மைசூர் பாக்கோட வரலாறு.
ஆனா பிற்காலத்தில நம்ம ஆளுங்க இது என்னடா இவ்வளவு சுவையான இனிப்பா இருந்தாலும் கடிக்க இவ்வளவு அழுத்தமா இருக்குன்னு சொல்லிட்டு, அதுல நெய் கொஞ்சம் அதிகமா சேர்த்து ‘நெய் மைசூர் பா’ செஞ்சாங்க.
இந்த மைசூர் பாக்குக்கும், நெய் மைசூர் பாவுக்கும் என்ன வித்தியாசம்னா மைசூர் பாக்கு கடிக்க கொஞ்சம் அழுத்தமா சின்ன சின்ன துவாரங்களோட இருக்கும். நெய் அதிகமா சேர்க்க மாட்டாங்க.
ஆனா இந்த ‘மைசூர் பா’ நெய் அதிகமா சேர்க்கிறதால ரொம்ப மென்மையா, சாப்பிட ரொம்ப ஈஸியா இருக்கும். பெரும்பாலும் குழந்தைங்க இந்த ‘நெய் மைசூர் பா’ வைத்தான் விரும்பி சாப்பிடுவாங்க. ஆனா இந்த பாரம்பரிய மைசூர் பாக்கோட சுவை ரொம்ப அலாதியா இருக்கும்.
உங்களுக்கு ‘மைசூர் பாக்கு’ பிடிக்குமா? இல்லை ‘நெய் மைசூர் பா’ பிடிக்குமா? சரி வாங்க இந்த பாரம்பரிய ‘மைசூர் பாக்கு’ வீட்லயே எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கடலை மாவு : 1 கப்
ரிபைண்ட் ஆயில் : 1 கப்
சர்க்கரை : 1 1/2 கப்
தண்ணீர் : 3/4 கப்
நெய் : 1 டே. ஸ்பூன்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில எண்ணெய் மற்றும் கடலை மாவு இரண்டையும் சேர்த்து, நல்லா கட்டியில்லாம கலந்துக்கோங்க. அடி கனமான பாத்திரத்தை அடுப்பில வச்சு சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நல்லா கிளறிகிட்டே இருங்க.
ஒரு கம்பி பதம் வந்ததும் கரைச்சு வச்சிருக்க கடலைமாவு கரைசலை சேர்த்து கைவிடாம கிளறிக்கிட்டே இருங்க. மாவு கரைசல் வெந்து சுருண்டு வரும் போது நெய் சேர்த்து கீழே இறக்கி எண்ணெய் தடவிய தட்டில ஊத்திடுங்க.
சூடு ஆறினதும் துண்டு போட முடியாது. அதனால மிதமான சூடு இருக்கும் போதே கட் பண்ணி துண்டுகளா போட்டுடுங்க. சரியான முறையில செஞ்ச மைசூர் பாக்கு மேல மஞ்சள், ப்ரவுன், டார்க் ப்ரவுன் கலர்னு பார்க்கவே அழகா இருக்கும். சுவைக்கும் குறைவிருக்காது.
மஞ்சள் நிற பகுதி மிருதுவாகவும், ப்ரவுன் கொஞ்சம் கெட்டியாகவும் டார்க் ப்ரவுன் இன்னும் கொஞ்சம் அழுத்தமாவும் இருக்கும். வெட்டியெடுக்கப்பட்ட மைசூர் பாக்கு தேன் கூடு போல சின்ன சின்ன துவாரங்களை கொண்டிருக்கும்.
இப்படி சரியான முறையில் செய்த மைசூர் பாக்கு சாப்பிட கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும். திகட்டாது. மைசூர்பாக் செய்ய தரமான மற்றும் புதுசா அரைச்ச கடலைமாவு பயன்படுத்துங்க.
மைசூர்பாக் கிளறும் போது குறைவான தீயில் வச்சு கிளறணும். தீ அதிகமா வச்சா, அடி பிடிச்சுடும் இல்லாட்டி மைசூர்பாக் ரொம்ப கெட்டியாகிடும். அவ்வளவு தான் சுவையான பாரம்பரிய மைசூர் பாக் தயார்…. இந்த தீபாவளிக்கு வீட்ல செஞ்சி அசத்துங்க.
பக்கத்து வீட்டு பாமா அக்காவுக்கும் மைசூர் பாக் செய்யறதை சொல்லிக்குடுங்க.