Close
செப்டம்பர் 20, 2024 6:57 காலை

பாலக்கட்டை … எங்கள் அரட்டைக்களம் – சில நினைவுகள்… இங்கிலாந்திலிருந்து சங்கர்..

பாலக்கட்டை

திருச்சி... பாலக்கட்டை... சில நினைவுகள்

பாலக்கட்டை எங்கள் அரட்டைக் களம் – சிலநினைவுகள்.

பெரிய பிரச்னைகள் இருந்து மனது பாரமாக இருக்கும் போது, நண்பர்களிடம் மனம் விட்டு பேசி சிரித்து மகிழ்ந்தால் மனசே நொடிப்பொழுதில் இலகுவாகிவிடும். படிக்கிற காலத்தில் அப்படி எதுவும் பெரிதாக பிரச்னைகள் இருந்ததில்லை. ஆனால் அரட்டை அடித்து சிரித்து பொழுதுப்போக்க ஒரு இடம் எங்களுக்காக இருந்தது. அது தான் இந்த பாலக்கட்டை .

திருச்சி பாரத மிகுமின் தொழிற்சாலை குடியிருப்பு வளாகத்தில் ஈ செக்டர் பகுதியில் (தொழிற்சாலை கழிவுகள் இறுதியாக சென்றடையும் ஆயில் குளத்தருகே) அமைந்திருக்கிறது இந்த பாலக்கட்டை. இந்த முறை விடுமுறையில் அந்த வழியாக சென்று, ஒரு சில நிமிடங்கள் நின்று வந்தேன். கடந்து வந்த பின்னரும் பள்ளி கல்லூரிப் பருவத்து நினைவலைகள் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தன.

ஒவ்வொரு மாலைப் பொழுதுகளிலும் நண்பர்கள் குழு, ஒன்றாக கூடுவது இந்த பாலக்கட்டையில் தான். என்ன வேலை இருந்தாலும் தினமும் குறிப்பிட்ட நேரத்தில், நான், பாக்யா, டெரிக், மார்டின், லியோ, பாலா மற்றும் பிரபா என அனைவரும் ஒன்று கூடிவிடுவோம்.

அவரவரின் அன்றைய அலுவல்களை கணக்கில் கொண்டு, கூடுகிற எண்ணிக்கையில் ஒன்றிரண்டு கூடும் அல்லது குறையும். அவ்வப்போது சில தோழமைகள் விருந்தினராக
கலந்துக் கொள்வதுண்டு. மெல்ல மெல்ல உரையாடல் தொடங்கி ஏதாவது ஒரு தலைப்பில் விவாதம் தொடங்கி, வாக்குவாதம் சூடுபிடிக்க தொடங்கும்.

பெரும்பாலும் கலை, இலக்கியம், அரசியல் இவைகளை உள்ளடக்கியது என்றாலும் பயணங்கள், பொழுதுபோக்குகள், கொண்டாட்டங்கள், செயல்பாடுகள், காதலி, காதலியின் தோழி என வாழ்க்கையின் எல்லாசுவாரஸ்யமான நல்ல விஷயங்களும் சுவையாய் பகிர்ந்துக் கொள்வது தான் பிரதானமாக இருக்கும்.

விவாதிக்கப்படும் தலைப்பிற்கான தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ.., கட்டாயம் சிரிப்பொலியும் கலகலப்பும் நிறைந்து இருக்கும். அரட்டை அடித்து அடைந்த அதே மகிழ்ச்சி, அடுத்த நாளும் தொடரும்.
ஒவ்வொரு சுதந்திர, குடியரசு, ஆங்கில, தமிழ் புத்தாண்டு, பொங்கல், கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நாட்களில் இந்த பாலக்கட்டைக்கு வெள்ளையடித்து, அதில் நாங்கள் கைப்பட எழுதி வைத்த வாழ்த்து செய்திகளை காணவில்லை இன்று. இருந்தும் அழிந்து போன அந்த வாசகங்கள், மனக் கண் முன் வந்து சிறிது நேரம் மண்டியிட்டு போனது.

அமர்ந்து அரட்டை அடித்த பாலக்கட்டை விரிசல் விட்டு வெளிரி நிற்கிறது. எந்த எதிர்ப்பார்ப்புமின்றி சேர்ந்த நட்பில், சில எதிர்பாராத எதிர்பார்ப்புகளால் சின்ன சிராய்ப்புகள் விழுந்த போதிலும் இன்று வரை விரிசல் விழவேயில்லை. பேசி பேசி தீர்த்த நண்பர்கள் தற்போது அடிக்கடி பேசிக்கொள்வ தில்லை. பேசாவிடினும் பேசிக்கொண்டதை நினைவில் கொள்வதும் நெருங்கிய நேசம் தான்.

நம்மைக் கேட்பதற்கும் ஆறுதல் படுத்துவதற்கும் ஒரு சுறுசுறுப்பான வட்டம், நம்மை சுற்றி இருக்கிறது என்கிற பலம் பூசிய பொழுதுகள் அவை. உணர்வுகள் மூலம் நாம் பேசும் போது, நம் பிரச்னைகளின் வீரியம் மெல்ல வீரிய மிழக்க தான் செய்கிறது. இதை அந்த பருவத்தில் நாங்கள் பகிர்ந்துக்கொண்ட போது, சொந்தமில்லையென்றாலும் சொந்தமாகி போன உணர்தல் அது.

ஒரு நல்ல நண்பருக்கு நம் விருப்பு வெறுப்புகள் தெரியும், எந்த சூழ்நிலையில் என்ன சொல்வது என்று தெரியும். சில நேரங்களில் அவர்கள் எதுவும் சொல்லவோ எதுவும் செய்யவோ தேவையில்லை… அவர்கள் முன்னிலையில் இருப்பது ஒரு ஆறுதல். ஒரு நல்ல நட்பு பெரிய வசதியான போர்வை போன்றது, நாம் வசதியாகவும் பாதுகாப் பாகவும் உணர, அதற்குள் நம்மை சுற்றிக் கொள்ளமுடியும்.

நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் நண்பர்கள் இருப்பது முக்கியம். நம்முடைய புத்திசாலித்தனம், நம்பிக்கைகள், வாழ்வியல் நெறிகள் மற்றும் உணர்வுகள் அதிக அளவில் வளர்ச்சி கொண்டிருப்பதால், நாம் வயதாகும்போது நண்பர்களை உருவாக்குவது மற்றும் தக்கவைப்பது கடினமாக இருக்கலாம்.

நம் வாழ்நாள் முழுவதும் பல நண்பர்களை உருவாக்க முயற்சிக்கிறோம். நாம் குழந்தைகளாக இருந்தபோது, ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நண்பரை உருவாக்கியது போல் தோன்றியது. வயதாக வயதாக, நண்பர்களை இன்னும் கொஞ்சம் கவனத்துடன் தேர்வு செய்கிறோமோ என தோன்றுகிறது.

ஒவ்வொரு மாலை சந்திப்பிற்கு பிறகு, இரவில் கலைந்து வீட்டிற்கு செல்கிற போது, அன்றைய நாள் நிறைவாக முடிந்தது போன்று உணர்ந்த அதே உணர்வை, பல வருடங்களுக்கு பிறகு இம்முறை பாலக்கட்டையை பார்த்து விட்டு போன அன்றிரவும் அப்படியே என்னால் உணரமுடிந்தது.

கூடவே நண்பர்களை மையப்படுத்தி வெளிவந்த ஆரம்பப் படமான ‘பாலைவனச்சோலை’யும் வாணி ஜெயராமின் குரலில் குழைந்து வரும் ‘மேகமே… மேகமே… பாடலும் நினைவில் வந்து காதுகளில் ரீங்காரமிட்டது.

.இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top