புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் சார்பில், நகரும் காய் மற்றும் கனிகள் விற்பனை வண்டியினை, பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (29.08.2022) வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
அதில் குறிப்பாக தோட்டக்கலைத்துறையின் மூலமாக அறுவடைக்கு பின் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு தாங்கள் உற்பத்தி செய்த காய்கறி மற்றும் கனிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் உழவர்சந்தை உள்ளிட்டவைகள் மூலமாக விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் 2021-22 -ஆம் ஆண்டின் கீழ், காய்கறி மற்றும் பழங்களை அறுவடைக்கு பின் விற்பனை செய்யும் பொருட்டு, அதனை சந்தைப்படுத்துவதை ஊக்கப்படுத்தவும், பழ மற்றும் காய்கறி வியாபாரிகள் பயன்பெறும் வகையில் தலா ரூ.15,000 அரசு மானியம் மற்றும் விவசாயி பங்கு தொகை ரூ.15,000 உடன் ரூ.30,000 மதிப்பில் என மொத்தம் 6 பயனாளிகளுக்கு ரூ.1,80,000 மதிப்புடைய நகரும் காய் மற்றும் கனிகள் விற்பனை வண்டியினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.
மேலும் நகரும் காய் மற்றும் கனிகள் விற்பனை வண்டியின் மூலமாக தேவையுள்ள பகுதிகளுக்கு எடுத்துச்சென்று காய்கறி மற்றும் கனிகளை விற்பனை செய்வதற்கும் இதன்மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான காய்கறி மற்றும் கனிகள் கிடைப்பதற்கும் வழிவகை செய்த தமிழக அரசிற்கு பயனாளிகள் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, துணை இயக்குநர் (தோட்டக்கலை) குருமணி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.