Close
நவம்பர் 22, 2024 5:52 மணி

கலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள் (ஆகஸ்ட்30)

தமிழ்நாடு

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நினைவு நாள் இன்று

கலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள் (30 ஆகஸ்ட் 1957)

நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் ஆகிய என்.எஸ்.கே. 1908-ம் ஆண்டு நவம்பர் 9 -இல் சுடலைமுத்து – இசக்கியம்மாள் தம்பதியின் ஏழு குழந்தைகளில், மூன்றாவதாகப் பிறந்தார்.
குடும்ப வறுமையால் நான்காம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு நாடகக் கொட்டகையில் சோடா விற்கும் பணியைச் செய்து, டென்னிஸ் பந்துகளைப் பொறுக்கி, மளிகைக் கடைகளில் பொட்டலம் மடித்து, நாடகக் கொட்டகையில் எடுபுடி வேலை செய்து.., இப்படியாக ஓய்வில்லாமல் உழைத்த என்.எஸ்.கே வின் ஆரம்ப நாட்கள் கடுமையாகவே கழிந்தன.

தனது கடின உழைப்பால் மெல்ல மெல்ல உயர்ந்து, ஒரு கட்டத்தில் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச் சுவை நடிகர் ஆனார். திரையுலகில் கொடிக்கட்டி பறந்தாலும், நாடகத்துறையை இவர் விடவில்லை. என்.எஸ்.கே நடித்த நாடகம் என்றால் மக்கள் மத்தியில் பிரபலம்.

சொந்தமாக நாடக நிறுவனம் நடத்தியதோடு, நலிந்து வந்த நாடக நடிகர்களுக்கு கரம் கொடுத்து, நலிவடைந்த நாடக நிறுவனங்களுக்கு நடித்துக் கொடுத்து அந்தக் கலை அழிந்து விடக்கூடாது என்பதற்காக மெனக்கெட்டவர் நம் கலைவாணர்.

நகைச்சுவை நடிகர்களிலேயே, சொந்த குரலில், அதிக பாடல்களைப் பாடியவர். இவரது படங்களில் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகளுக்கு தானே வசனம் எழுதிக் கொள்ளும் பழக்கம் கொண்டவர். சமூகநீதி, பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, மது அருந்தாமை என சமூக சீர்திருத்த கருத்துக்களை சினிமா மூலம் மக்களிடம் விதைத்தவர். சமகால பிரச்னைகளையும் சரியாகப் புரிந்துகொண்டு சமயோசிதமாக , படங்களில் பயன்படுத்தியவர்.

 தமிழ்த்திரையுலகில், கொடைக்குணம் கொண்ட முதல் பிரபல நடிகர், என்.எஸ். கே தான்.தான் வறுமையிலும், நோயிலும் அவதிப்பட்ட சூழலிலும், தன்னிடம் உதவி தேடி வந்தவர்களுக்கு, தன்னோட சொத்துகள் எல்லாவற்றையும் கொடுத்து வாழ்ந்தவர்.

எம்.ஜி.ஆரின் கொடை குணத்திற்கு, முன்மாதிரியாக இருந்தவர்களில், என்.எஸ். கிருஷ்ணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர் அறிமுகமான “சதிலீலாவதி” படத்தில் தான், இவரும் அறிமுகமானார். என்னை மனிதா பிமானி என்று யாராவது அழைத்தீர்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணமானவர் கலைவாணர் தான்’’ என்று எம்.ஜி.ஆரே குறிப்பிட்டார்.

லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி இரண்டு வருடங்களுக்கு மேல் சிறைவாசம் முடிந்து தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கேவும் சுதந்திரத்துக்கு சில மாதங்கள் முன்பு வெளியே வந்தனர். அந்த கால உச்ச நட்சத்திர கௌரவத்தில் இருந்த பாகவதரால், சிறைவாசத்திற்கு பிறகான திரையுலக வாழ்க்கையில் தொடர்ந்து ஜொலிக்க இயலவில்லை. ஆனால் என்.எஸ்.கே தொடர்ந்து நடித்து, மக்களிடையே மங்காப் புகழுடன் திகழ்ந்தார்.

மதுவின் தீமைகள், மதுவிலக்கு பிரச்சாரம் ஆகியன சார்ந்து “நல்லதம்பி” என்ற படத்தைத் தயாரித்த என் எஸ் கே , இறுதி யில் மதுபோதைப் பிரியராகி, 49 வயதிலேயே உயிரிழந்தது தான் துரதிர்ஷ்டமான சம்பவம். அண்ணா,  இறுதியாகப் பங்கேற்ற நிகழ்ச்சி, என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு விழா என்பதும், என்.எஸ். கே, இறுதியாகப் பங்கேற்ற நிகழ்ச்சி, அண்ணா படத்திறப்பு விழா என்பதும் தற்செயலாக நிகழ்ந்தவை.

கலைக்காகவும், கலைஞர்களுக்காகவும் மட்டுமல்லாமல் மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் வாழ்ந்து மறைந்த மக்களின் கலைஞர்.., கலைவாணர்.

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top