மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் சுழற்சிமுறை இல்லாமல் தொடர்ச்சியாக வேலை வழங்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்து போராட்டம் நடைபெற்றது.
‘வேலை கொடு, வாழவிடு’ என்கிற முழகத்தை முன்வைத்து மாநிலந்தழுவிய அளவில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களி டமும் அக்டோபர் 17 அன்று மனுக்கொடுத்து போராட்டம் நடத்துவது என அண்மையில் நடைபெற்ற ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாடு அறைகூவல் விடுத்தது.
அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் பி.சுசீலா, தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி, பொருளாளர் ஜெ.வைகைராணி, துணைத் தலைவர் டி.சலோமி, துணைச் செயலாளர் ஆர்.கவிதா உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக கோரிக்கைகள் அடங்கிய சுமார் 200 மனுக்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் மாதர் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.
அந்த மனுவில் நூறுநாள் வேலைத்திட்டதில் சுழற்சி முறை இல்லாமல் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும். காலை 7.00 மணிக்கே வேலைக்கு வரவேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்தி 9.00 மணிக்கு மாற்ற வேண்டும். இத்திட்டத்தை பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் எழைகளுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும். முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டைகளை முன்னுரிமை உள்ள குடும்ப அட்டைகளாக மாற்றித்தர வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர், விதவை உதவித் தொகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.