Close
நவம்பர் 22, 2024 9:58 காலை

அலமாரியிலிருந்து புத்தகம்.. வீரயுக நாயகன் வேள்பாரி..

இங்கிலாந்திலிருந்து சங்கர்

அலமாரியிலிருந்து... சு.வெங்கடேசனின்.. வேள்பாரி

நவீன தமிழ்கதை மரபில் தடம் பதித்த எழுத்துகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். உலக சினிமா, உலக இலக்கியம் என நம்மை திசைத்திருப்பிய காலத்தை மெல்ல மெல்ல மலையேறசெய்து, நம் சொந்த இலக்கியங்களை உலக அரங்கில் பேசவைக்கிற முயற்சியை தோழர் சு.வெங்கடேசன் போன்ற ஆளுமைகள் வேள்பாரி போன்ற வடிவில் சப்தமில்லாமல் செய்து கொண்டிருக்கின்றனர்.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில்இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம் தான்வேள்பாரியின் கதை என்கிற போது, அதை உடனேபடிக்க வேண்டும் என்கிற ஒரு துடிப்பு உள்ளுக்குள் உருவாகதான் செய்கிறது.

மூவேந்தர்களின் ஆசை, பொறாமை, சுயநலம் எத்தனை குலங்களை அழித்துள்ளதோ அத்தனையும் தாயுள்ளத்துடன் அரவணைத்து பறம்பின் ஓர் அங்கமாய் ஏற்று வாழ்வு வழங்கியவனை, மூவேந்தர்களும் சேர்ந்து அழிக்க செய்த நயவஞ்சக சூழ்ச்சியும் அவர்களிட மிருந்து பாரி எவ்வாறு தம் மக்களை தற்காத்தான் என்பதற்கான பாரியின் நீண்டநெடிய வரலாறே இந்த வேள்பாரி.

தமிழரின் ஈராயிரம் ஆண்டுகாலம் பழமை வாய்ந்த வரலாறுகளையும், பண்டைத் தமிழரின் அக, புற வாழ்வையும் விரிவாக எடுத்துரைக்கின்றது இந்த படைப்பு.’முல்லைக்கு தேர் ஈந்தான் பாரி’ என்பதை தாண்டி பாரி பற்றிய பல செய்திகள் கொட்டி கிடக்கின்றன இந்த படைப்பில்.

இயற்கை தாயே அரண் அமைத்து கொடுத்த பச்சைமலை தொடர்களில் வாழ்ந்து வந்த பதினான்கு வேளிர் குடிகள் உட்பட, குரல்வளை நசுக்கப்பட்ட பல குடிகளின் தலைவன் தான் வீரயுக நாயகன் வேள்பாரி. மாட மாளிகைகளையும், அழகிய மாடங்களை உடைய நகரங்கள் தான் பெரும்பாலான புதினங்களின் கதைக்களமாக இருந்திருக்கின்றன.

அதனின்று முற்றிலும் வேறுபட்டு, மலையை கதைக்களமாக கொண்டுள்ளது வேள்பாரி. பெரும்பாலான கதைகள் மற்றும் திரைப்படங்கள் கதாநாயகனை சுற்றியே சுழலும். கதாநாயகன் என்றாலே அவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். கதாநாயகன் எப்பொழுதுமே வலிமை வாய்ந்தவனாக சித்தரிக்கப்பட்டு இருப்பான். வேள்பாரி அப்படியாக காட்டப்படவில்லை.

பாரிக்கு ஒரு சில தனித்திறமைகள் இருக்கும். அதே போல அங்குள்ள அனைத்து வீரனுக்கும் ஒவ்வொரு தனித்தன்மைகள் இருக்கும். அதை கையாள தெரிந்து பறம்பை வழிநடத்தும் தலைவனாக, மிகைப்படுத்தப்பட்ட கதாநாயகத்தனதுடன் வேள்பாரியை காட்டாமல் இயல்பாக இருப்பது, கதை நடைக்கு வலிமை சேர்க்கிறது. எழுத்தாளர் எதையுமே மிகைப்படுத்திக் கூறிவிடவில்லை. அலங்கார வார்த்தைகளும் இல்லை.

பாரியை விட‌ வலிமை வாய்ந்த மூவேந்தர்கள், அவனுடைய செல்வத்திற்காகவும் அவனுடைய புகழுக்காகவும் பரம்பை முற்றுகையிடும் போதும், அசராமல் இருக்கும் அவனுடைய துணிவு, பாரி வீழப்போகிறானோ என ஐயமுற செய்கிறது நம்மை.

அடுத்த நிமிடம் ஒளித்து‌ வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம். மூவேந்தர்களுடைய தாக்குதல் திறனும், யுக்திகளும் இதயத்துடிப்பை கேட்க செய்யும், மறுநொடியில் எதிரிகளு டைய பலத்தையே அவர்களை அழிக்கும் ஆயுதமாக பயன்படுத்தி ஓட வைப்பான் பாரி.

அவன் கதையின் நாயகன் .. அப்படித்தான் காட்சிப்படுத்த பட்டிருப்பான் என்று நினைத்தால் அதுதான் இல்லை. பாரி ஒரு பக்கம் தாக்க, மறுபக்கம் பரம்பின் வீரர்களும் இதே யுக்தியை கையாண்டு எதிரிகளை வீழ்த்துவார்கள். ஓர் சிறந்த தலைவன் அவனுக்கு கீழுளுள்ள அனைவரையும் தலைவனாக பார்ப்பான்.

தான் இல்லாத போதும் தனது மக்கள் சரியான திசையை தேர்ந்தெடுத்து செல்லும் முடிவெடுக்கும் திறனை வளர்ப்பான். அப்படியான குணாதிசயங்களைக் கொண்ட தன்னிகரற்ற தலைவன் தான் வேள்பாரி.

சமவெளியில் போரிட்டு பழக்கப்படாத தனது சின்னஞ்சிறு படையை, பன்மடங்கு பலம் வாய்ந்த மூவேந்தர்களின் படையை எதிர்த்து சமவெளியில் இறக்கி, எண்ணிக்கையால் மட்டுமே வலிமையான படையாகி விட முடியாது என்பதை, போர்க்களம் புகாமலே நிகழ்த்தி காட்டியவன் வேள்பாரி. போருக்கு வகுக்கப்படும் வியூகங்களும் அதை வீழ்த்த கையாளப்படும் யுக்திகளும் அபாரம்.

சாதாரணமாக கதாநாயகன் உட்பட இரண்டு அல்லது மூன்று கதாபாத்திரங்கள் தான் மனதில் பதியும். வேள்பாரியின் ஒவ்வொரு வீரனும் நம் மனதிற்குள் லாவகமாக உட்புகுவார் கள்.

மகாபாரதத்தில் அபிமன்யுவை கொல்வதை போன்று இந்த கதையிலும் மனதை உறைய வைக்கும் கொலைகள் நடக்கிறது. வாசித்து முடித்த அன்றிரவில், கனவில் கூட ஒவ்வொரு காட்சியும் தெரிவது போல் இருந்தது. ஒரு திரைப்படத்தை பார்ப்பது போல. நேரில் கண் பட பார்த்து வந்த ஒரு பரவசத்தை கொடுக்கிறது.

தலையானங்கானத்து போர், வெண்ணிப் பறந்தலை போர், வாகைப் பறந்தலை போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களை கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற, மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும், அதற்கு பின்பும் நிகழாத வீர சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கபடுகிறது. அதன் பிறகு
வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்து விடலாம் என மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர்.

பாண்டியன் என்றால் உழவன் ! சோழன் என்றால் வளவன் !
சேரன் என்றால் மலையன் ! பாரி என்றால்? – ஒரு கேள்வி எழுந்த அடுத்த வினாடியே”எந்த ஆதிக்கத்திற்கும் எதிரான வன்” என்பதாக ஒரு ஒட்டு மொத்த குரல் வரலாற்றில் ஒலிக்கிறது.

சங்க காலத்தில் இருந்த பழக்கவழக்கங்களை, மன்னர்களது ஆட்சிமுறை, போர் உத்தி ஆகியவற்றை இந்த படைப்பு பேசும் விதம், நூலுக்கு சுவை கூட்டுகிறது. தமிழ்நாட்டின் வாழ்வா தாரச் சிக்கல்களை சங்க காலத்து மனிதர்களும் மன்னர் களும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை நூலாசிரியர் தனது யூகமாக சொல்லி இருந்தாலும், சுவாரசியமாக தான் உள்ளன.

காடு, மூவேந்தர்கள், போர், வானியல், கப்பல் போக்குவரத்து, வேளிர் குடி மக்களின் வீரம், அறிவு, ஒற்றுமை, தலைமைக்கு கட்டுப்படுதல், அவர்களின் காதல், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒரு குறுநில மன்னனை பற்றிய அறிமுகமும், நட்புக்கு இலக்கணமாக சொல்லப்படுகிற கபிலரின் பெருமையும்,
பறம்பு மலையின் இயற்கையும், அதில் சொல்லப்பட்ட போர் முறையும், பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காமல், அதன் வேரை கெட்டியாக கட்டி பிடித்து கடமையாற்றிய குடிமக்களை.., இப்படி அறவழிப்பட்ட ஒரு சிந்தனையின் அடையாளமாக திகழ்ந்த நம் தமிழ் சமூகத்தின் வாழ்வியலை சொல்வது எப்பேர்ப்பட்ட கலை. கைதேர்ந்த கலையாக சு. வெ அவர்களுக்கு சுலபமாக வாய்த்திருக்கிறது.

காட்டை பற்றி, அதன் விலங்கினங்களை பற்றிய பெரிய தகவல் களஞ்சியத்தை பாரியின் வீரத்தோடும் பறம்பு மக்களின் வாழ்க்கையோடு தூவி அலங்கரித்திருக்கிறார். மணியம்செல்வன் வரைந்துள்ள நேர்த்தியான ஓவியங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. மணியனின் செல்வனாச்சே. தூரிகை எழுத்தாளரின் தூவலுக்கு ஈடுகொடுத்து இயங்கி இருக்கிறது.

சமகாலத்தில் ஒரு படைப்பு இத்துணை தீவிர வாசகர்களை யும், இத்தகைய கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தி இருப்பது, ஒரு பிரமிக்கத்தக்க நிகழ்வாக பார்க்கிறேன்.இயல்பான மனிதனின் வாழ்க்கை முறையை சொல்லி, இயற்கையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை, அழகுற சொல்லி முடித்திருக்கிறது இப்படைப்பு. இயற்கையை நேசிக்கும் ஒவ்வொருவரும் வாசித்து முடித்தவுடன் பறம்பை விட்டு வெளியேற முடியாமல் சிக்கித் தவிப்பார்கள். அந்த தவிப்பில் இருந்து மீளாமல்..

… இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top