Close
நவம்பர் 22, 2024 5:30 மணி

வாழ்த்தைக் கட்டாயப்படுத்திப் பெற இயலாது…பள்ளிக்கான மாநில மேடை. கருத்து..

தமிழ்நாடு

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை. அறிக்கை

வாழ்த்தைக் கட்டாயப்படுத்திப் பெற இயலாது என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை. கருத்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்ட அறிக்கை: கட்டைவிரலை வெட்டியது மட்டுமல்லாது, கட்டைவிரலை இழந்தவன், தானே முன்வந்து காணிக்கையாகத்தான் கட்டைவிரலைத் தந்தான் என்று அவன் வழித்தோன்றல்களை நம்பவைத்தார்கள்.

உண்மையை உணர்ந்து கொண்ட ஏகலைவன் வழித் தோன்றல்கள் மனம் புண்பட்டு வேதனையில் துடிக்கிறோம். யாரும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.சம்புகன் தலை வெட்டப்பட்டது. சம்புகனின் வழித் தோன்றல் கள் மனம் புண்பட்டு வேதனையில் துடிக்கிறோம். யாரும் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை.

கற்றுத் தந்தவரின் சாதியில் / வர்ணத்தில் தான் பிறக்கவில் லை என்பதற்காக கற்றக் கொண்ட வித்தையை உரிய நேரத்தில் தனக்குப் பயன்படாமல் போனதால் கர்ணனின் உயிர் போனது. கர்ணனின் வழித் தோன்றல்கள் மனம் புண் பட்டு வேதனையில் துடிக்கிறோம். யாரும் ‌அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

கொல்லப்பட்ட ஒருவர் தானே தன் வாயால் என் இறப்பை மகிழ்ச்சியாய்க் கொண்டாடுங்கள்  என்று சொன்னதாக அனைவரையும் நம்பவைத்து ஒரு விழா நாகரீக உலகில் நடக்குமாம். அதற்கு ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர் வாழ்த்துச் சொல்ல வேண்டுமாம். அவ்வாறு வாழ்த்துச் சொல்லவில்லை என்றால் மனம் புண்படுகிறதாம்.

வாழ்த்துச் சொல்லாதவர்கள் விரோதிகளாம். அறிவியல் வளர்ந்து, மனிதச் சிந்தனை எவ்வளவோ மேம்பட்டிருந்தும், இன்னும் பக்குவமடையாதவர்கள் பிதற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.வாழ்த்துச் சொல்வது இயல்பாக சுய விருப்பத் தின் பேரில் இருக்க வேண்டும். வாழ்த்தைக் கட்டாயப்படுத் திப் பெற இயலாது.

அண்ணன் தம்பி உறவில், அண்ணனின் ஒரு செயல் பிடிக்கவில்லை என்றால் தம்பி அத்தகைய செயலுக்கு வாழ்த்துச் சொல்லாமல் இருக்கலாம். அதனால் அண்ணனுக் குத் தம்பி பகைவன் ஆகிடுவினா? “எனக்கு வாழ்த்துச் சொல்லவில்லை. அதனால் நீ என் விரோதி” என்று அண்ணன் சொன்னால், ஊரும் உறவும் ஏற்றுக் கொள்ளுமா? உனது செயல் உன் தம்பிக்கு உடன்பாடில்லை.

அதனால் உன் குறிப்பிட்ட செயலை உன் தம்பி வாழ்த்த வில்லை. அதனால் அவனைப் பகைவனாக் கருதக் கூடாது என்று எடுத்துக் கூற மாட்டார்களா? ஒரு விழாவிற்கு வாழ்த்துச் சொல்லவில்லை என்றால் அவர் பகைவர் என்று சித்தரிப்பது பாசிசத்தின் தொடக்கம்.

ஜெர்மனியும், இத்தாலியும் நாசிசத்தாலும் பாசிசத்தாலும் பட்ட துயரத்தை வரலாற்றில் அறிகிறோம். இந்தியாவில் அத்தகைய சிந்தனைப் போக்கை அனுமதிக்க இயலாது.

எனக்கு இந்தி தெரியாது என்று உரத்த குரலில் சொல்வதைப் போல,நான் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்ல மாட்டேன் என்று உரத்த குரலில் சொல்வோம்.தன்மானம், சுயமரியாதை இல்லாத வாழ்க்கையை எந்த மனிதரும் விருப்ப மாட்டார்.

நான் எனது கண்ணியத்துடன் வாழ விரும்புகிறேன். எனக்கு உடன்பாடில்லாத விழாவிற்கு நான் வாழ்த்துச் சொல்லமாட் டேன். வாழ்த்துச் சொல்லுங்கள் என்றோ அல்லது வாழ்த்துச் சொல்லக் கூடாது என்றோ யாரும் யாரையும் கட்டாயப்படுத்த இயலாது.வாழ்த்தாதவர்களைப் பகைவர்கள் என்று சித்தரிக்க முற்படு வதை மனித சமூகம் அனுமதிக்க இயலாது என தெரிவித்துள்ளார் அவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top