Close
நவம்பர் 22, 2024 6:18 மணி

நவ.15 -க்குள் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும்: மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின் போது விவசாயிகள் நவ.15 -க்குள் காப்பீடு செய்து பயிர்பாதுகாப்பு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின் போது அதிக மழைப்பொழிவு பெறப்பட்டால் நெற்பயிர் களைப் பாதுகாத்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் சராசரியாக 2 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப் படுகிறது.  இந்நிலையில் சம்பா நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

தற்போது வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கிய நிலையில் விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெற்பயிர் தண்ணீரில் மூழ்குவதைத் தடுத்திட, தாழ்வான பகுதிகளை இனம் கண்டு வயல்களில் தண்ணீரினை வடித்திட விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். வயலில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்து விட வேண்டும்.

வடிகால் வாய்க்கால்கள் தண்ணீர் தேங்காது வடிந்திடும் வகையில் பொதுப்பணித் துறையினரை அணுகி தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைநீரில் மூழ்கியுள்ள பயிர்களை பாதுகாத்திட விவசாயிகள், வயலில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்து விட வேண்டும்.

இளம் பயிர்கள் அதிக நாட்கள் நீரின் தேக்கத்தினால் தழை மற்றும் துத்தநாக சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டு இளமஞ்சள் அல்லது மஞ்சளாக மாறும் பட்சத்தில் தண்ணீரை வடித்தவுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமிட வேண்டும்.

இளம் பயிர்களில் தண்ணீர் தேங்கி அழுகிய நிலை ஏற்பட்டிருந்தால்  இருப்பில் உள்ள நாற்றுக்களை கொண்டு ஊடு நடவு செய்ய வேண்டும் அல்லது அதிக குத்துக்கள் உள்ள நடவு பயிரினை கலைத்து பயிர் இல்லாத இடங்களில் நடவு செய்திட வேண்டும்.

பயிர் தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் தண்ணீர் தேக்கத்தினால் பாதிக்கப்பட்டால் 4 கிலோ டி.ஏ.பி. -யினை 10 லிட்டர் நீரில் முந்தைய நாள் மாலை வேளையில் கரைத்து மறுநாள் வடிகட்டி அதனுடன் 2 கிலோ யூரியாவினை 190 லிட்டர் நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமிட வேண்டும்.

தண்ணீர் தேக்கத்தினால் பயிர் வளர்ச்சி குன்றி காணப் பட்டால்  தண்ணீரை வடித்தவுடன் ஏக்கருக்கு யூரியா 22 கிலோவுடன், ஜிப்சம் 18 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கு 4 கிலோவினை ஒருநாள் இரவு கலந்து வைத்து 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமாக இட வேண்டும்.

நெல் பயிர் அதிக நாட்கள் நீரில் மூழ்கும் பட்சத்தில் நெற்பயிரில் தென்படும் நெல் குருத்து பூச்சி மற்றும் இலை சுருட்டுப்புழுக்களை கட்டுப்படுத்திட கார்டாப், ஹைட்ரோ குளோரைடு 50 சத எஸ்.பி என்ற மருந்து ஏக்கருக்கு 400 கிராம், பச்சை தத்துப்பூச்சி மற்றும் புகையான் ஆகியவற்றை கட்டுப்படுத்திட பிப்ரோனில் 5 சத எஸ்.சி என்ற மருந்து ஏக்கருக்கு 400-600 மி.லி., குலைநோய் மற்றும் இலை உரை கருகல் நோய் கட்டுப்படுத்திட ஏக்கருக்கு கார்பென்டாசிம் 50 சத டபுள்யூ.பி – 200 கிராம் அல்லது டிரைசக்ரோசோல் 75 சத டபுள்யூ.பி – 200 கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
தண்ணீர் தேங்கக் கூடிய தாழ்வான இடங்களில் தண்ணீர் தேக்கத்தினை தாங்கி வளரக்கூடிய இரகங்களான சுவர்ணா சப் 1, சிஆர்.1009 சப் 1 போன்ற இரகங்கள் நடவு செய்திட விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இயற்கை இடர்பாடுகளினால் பயிர் சேதத்தினை ஈடுசெய்திட பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்திடலாம்.  நெற்பயிரை காப்பீடு செய்திட ஏக்கருக்கு பிரீமியமாக ரூபாய் 488.05 யினை 15.11.2022 க்குள் செலுத்தி புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயனடையலாம் என அவர்   தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top