புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மணமக்களுக்கு திருமணங்களை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் நடத்தி வைத்தனர்.
புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற திருமணங்களை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி , சுற்றுச் சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் இன்று (04.12.2022) நடத்தி வைத்தார்கள்.
2022-23 ஆம் ஆண்டு சட்டமன்ற பேரவையின் வரவு செலவு கூட்டத்தொடர் மானிய கோரிக்கை விவாதத்தின்போது, தமிழகமுதல்வர் அறிவுறுத்தலின்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 மணமக்கள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 மணமக்களுக்கு திருக்கோயில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவினத்தை திருக்கோயில்களே ஏற்கும் என்று அறிவித்திருந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் ஆகிய 2 திருக்கோயில்களில் 3 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
அதன்படி புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் 2 மணமக்களுக்கு நடைபெற்ற திருமணத்தை அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, .சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் நடத்தி வைத்து, மணமக்களுக்கு அரசின் சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்கள்.
பின்னர் சட்ட அமைச்சர் ரகுபதி பேசியதாவது;
ஏழை, எளிய குடும்பங்களின் வாழ்வாதாரம் முன்னேரும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருக்கோயில்களில் ஏழை, எளிய குடும்பங் களை சார்ந்த மணமக்களுக்கு திருமணங்கள் நடத்தி வைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
தமிழக அரசு ஆலயப் பணியின் புரட்சியாக திருக்கோயில் கள் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் திருக்கோயில்களில் அமைந்துள்ள குளங்கள் சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
திருக்கோயில்களுக்கு வருகைத் தரும் பக்தர்களின் வசதிக்காக அன்னதான திட்டத்தின்கீழ், அறுசுவை உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்டதற்கிணங்க, இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 மணமக்களுக்கு அரசின் சீர்வரிசைப் பொருட்களுடன் வெகுவிமர்சையாக திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.
இன்றையதினம் திருமணங்கள் நடைபெற்ற அனைத்து மணமக்களும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் எஸ்.ரகுபதிதெரிவித்தார்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பேசியதாவது:
ஏழை, எளிய குடும்பங்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில் பொருளாதாரத்தின் காரணமாக திருமணம் செய்ய இயலாத மணமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருமணங்கள் நடத்தி வைக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற திருமணத்தில் ரூ.10,000 மதிப்பிலான 2 கிராம் திருமாங்கல்யம், ரூ.3,000 மதிப்பிலான மணமக்களுக்கான ஆடைகளும், ரூ.2,000 மதிப்பில் திருமணத்தில் பங்கேற்பவர்களுக்கு உணவுகளும், ரூ.1,000 மதிப்பில் மாலைகளும், ரூ.3,000 மதிப்பில் பாத்திர வகைகளும், ரூ.1,000 இதர செலவுகளும் என ஆகமொத்தம் ரூ.20,000 மதிப்பீட்டில் ஒவ்வொரு மணமக்களுக்கும் அரசின் மூலம் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கி திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன.
எனவே மணமக்கள் அனைவரும் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை பயன்படுத்தி நலமுடன் வாழ வாழ்த்துகளை தெரிவிப்பதாக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) தி. அனிதா, அறங்காவல் குழுத் தலைவர் செந்தில்குமார், செயல் அலுவலர் முத்துராமன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்;