Close
நவம்பர் 25, 2024 6:15 காலை

உலகையே அச்சுறுத்தி வரும் காலநிலை மாற்றம்  வரலாற்றில் புதிதாக ஏற்பட்டது அல்ல

சென்னை

வன பாதுகாவலர் ஹேமலதா

உலகையே அச்சுறுத்தி வரும் காலநிலை மாற்றம்  வரலாற்றில் புதிதாக ஏற்பட்டது அல்ல என  வன பாதுகாவலர் எஸ் .ஹேமலதா தெரிவித்தார்.
திருவொற்றியூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் சிந்தனை சாரல் 63- ஆவது மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை திருவொற்றியூர் கிளை நூலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத்தின் கௌரவ தலைவர் தொழிலதிபர் ஜி. வரதராஜன் தலைமை வகித்தார்.  இதில் ‘காடு எனும் வரம்’ நூலாசிரியரும், திருநெல்வேலி மாவட்ட உதவி வன அலுவலருமான எஸ். ஹேமலதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது ஹேமலதா பேசியதாவது:  காலநிலை மாற்றம் பிரச்சனை என்பது தற்போது காலநிலை அவசரம் என்ற அளவிற்கு கொள்கை மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் குறித்து தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காலநிலை மாற்றம் என்பது வரலாற்றில் புதிதல்ல.  பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பனிப்பாறைகள் உருகுவதும் வெப்பநிலை அதிகரிப்பதமாக தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் 18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில் புரட்சி காரணமாக உலகம் முழுவதும் படிப்படியாக வெப்பநிலை அபாய அளவில் உயரத் தொடங்கியது.
இப்பிரச்னைக்கு புதை படிம எரிபொருள்களை அதிக அளவில் பயன்படுத்துவது தான் முக்கிய காரணமாக உள்ளது. நாம் பயன்படுத்தும் பல்வேறு அபாயகரமான வாயுக்களால் பூமியை அரண் போல் பாதுகாத்து வரும் ஓசோன் மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுவதாலும் வெப்பநிலை உயர்கிறது.
பருவ காலங்களில் மாற்றம்:  பூமியின் இயல்பான வெப்பநிலையை விட சுமார் 1.10 டிகிரி செல்சியஸ் வெப்பம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால்தான் வழக்கமான பருவ நிலைகளில் மாற்றங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சோலார் சுழற்சி,  நீர் சுழற்சியில் பாதிப்புகள் ஏற்பட்டு வறட்சி, புயல்,  வெள்ளம் போன்றவை அடிக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. காட்டுத் தீ சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்ந்து வருகின்றன. பவள பாறைகளில் பாதிப்பு ஏற்படுகிறது .
என்ன செய்ய வேண்டும்?: காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளால் மனிதர்கள் மட்டுமல்ல, வனவிலங்குகள்,  கடல்வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஜீவராசிகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன . ஆனால் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதில் மனிதர்கள் தான் முக்கிய பங்கு வைக்கின்றனர் .
இப்பிரச்சினை குறித்து வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் தொடர்ச்சியாக கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன தொடக்கத்தில் இப்பிரச்சனை குறித்து முழுமையாக விழிப்புணர்வு ஏற்படாத நிலையில் தற்போது உலகெங்கிலும் அனைத்து நாடுகளும் இப் பிரச்சனையை ஊர்ந்து கூர்ந்து நோக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் அடுத்த 2100 -ஆம் ஆண்டுக்குள் 4.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரலாம் என கடைப்பிடிக்கப்பட்டுள்ளது   ஏற்கெனவே என்ன வெப்ப நிலையில் பூமி இருந்ததோ அதே நிலைக்கு மீண்டும் கொண்டு செல்வது என அனைத்து நாடுகளும் 2050 ம் ஆண்டுக்குள் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்படும் இந்தியா போன்ற வளரும் நாடுகள்  குறிப்பிட்ட காலத்தை நீடித்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. எல்லா பிரச்சனைகளையும் விட காலநிலை மாற்றம் பிரச்னை அடுத்து வரும் ஆண்டுகளில் முக்கிய இடத்தை வகிக்கும் வெப்பநிலை உயர்வதை தடுக்க புதை படிம  எரிபொருள்களை பயன்படுத்துவதை படிப்படியாக குறைக்க வேண்டும் .
சூரிய ஒளி காற்றாலை மூலம் தயாரிக்கப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிக அளவில் பயன்படுத்திய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அலையாத்தி காடுகளை பாதுகாக்க வேண்டும்.சதுப்பு நிலங்களை அதன் சூழ்நிலையில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்.
குறைவான தேவையில் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திட ஒவ்வொரு தனி மனிதரும் உறுதி ஏற்க வேண்டும்.  அவ்வாறு செய்யும்போது நுகர்வு கலாசாரம் குறைந்து  காலநிலை மாற்றத்தில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்த முடியும் என்றார் ஹேமலதா.
நிகழ்ச்சியில் வாசகர் வட்ட நிர்வாகிகள் என். துரைராஜ், கே. சுப்பிரமணி , எம்.மதியழகன், தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top