Close
நவம்பர் 22, 2024 10:43 காலை

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி- தமிழ் எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது

மதுரை

சாகித்ய அகாடமி விருது பெற்ற காலா பாணி நாவல் எழுத்தாளர் மு. ராஜேந்திரன்

காலா பாணி நாவலை எழுதிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்யஅகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது காளையார்கோவில் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நாவல்.

சிவங்கையை ஆண்ட வேலு நாசியாரின் தளபதிகளான மருது சகோதரர்கள் 1801 -ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிராக போர் பிரகடனம் செய்தனர். இதனால் ஆவேசமடைந்த ஆங்கிலேயர் , ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி மருது சகோதரர்களுக்கு எதிராக போர் தொடுத்தனர்.

150 நாட்கள் போர் நடந்தும் மருது சகோதரர்களை ஆங்கிலேயரால்  பிடிக்க முடியவில்லை. சரணடையாவிட்டால் அவர்கள் ஆசையாய் அழகு மிளிரக் கட்டிய காளையார்கோவில் கோபுரத்தை தகர்க்க போவதாக பீரங்கிகளை நிறுத்தினர். இதையடுத்து சரணடைந்த மருது சகோதரர்கள் திருப்பத்தூரில் வைத்து துக்கிலிடப்பட்டனர்.

அவர்களது வாரிசுகள் பெரிய உடையணர், துரைசாமி மற்றும் 72 வீரர்களை ஆங்கிலேயர் மலேசியாவில் உள்ள  பினாங்கு தீவுக்கு நாடு கடத்தி சித்ரவதை செய்தனர். இந்த சம்பவம் தான் காளையார்கோவில் போர்.

காளையார்கோவில் போரைப் பற்றி ‘1801’ என்ற தலைப்பில் நாவல் எழுதிய மு.ராஜேந்திரன், அப்போரில் அடைந்த தோல்வியால் விளைந்த துயரங்களையும் தண்டனையையும் குறித்து ‘காலா பாணி’ என்ற தனது அடுத்த நாவலை எழுதியிருக்கிறார்.

காலா பாணி நூலின் ஆசிரியரான மு.ராஜேந்திரன். ஐ.ஏ.எஸ் அதிகாரி. மதுரை மாவட்டம், வடகரை கிராமத்தில் பிறந்த இவர், திருக்குறள் பற்றி ஆய்வு செய்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

வரலாறு பாடத்தை முதன்மைப் பாடமாக கொண்டு ஐ.ஏ.எஸ் தேர்வை எழுதி தேர்ச்சிபெற்ற அவர்,  சென்ற 2008 -ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்தார். அப்போது, கவுத்தி வேடியப்பன் மலையில் இரும்புத்தாது வெட்டி எடுக்க ஜிண்டால் நிறுவனம் உரிமம் கோரியது குறித்து மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி உரிமம் தரக்கூடாது என அரசுக்கு பரிந்துரை அனுப்பினார்.

அவரின் மினட்ஸ் என்ற கூட்ட அறிக்கை அடிப்படையில் ஜிண்டால் நிறுவனத்துக்கு உரிமம் தர உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. கவுத்தி வேடியப்பன் மலையோர மக்களுக்கு நிம்மதியை தந்தவர்தான்  சாகித்ய அகாடமி விருது பெற்ற  ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மு.ராஜேந்திரன்.

சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுள்ள மு. ராஜேந்திரனுக்கு சிவகங்கை ஓவர்சுபிள்ளை வழித்தோன்றல்கள், பிரான்மலை அருணாசல சுவாமி வழித்தோன்றல்கள், ஆ.தெக்கூர் ராமச்சந்திரனார் வழித்தோன்றல்கள் மற்றும் திருப்பத்தூர் வாழ் மாமன்னர் மருதுபாண்டியர் வழித்தோன்றல்கள் தங்கள்  வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும்  தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top