Close
நவம்பர் 10, 2024 6:59 காலை

இறையூர் வேங்கைவயல் குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரம்… சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரிக்கை

புதுக்கோட்டை

இறையூர் குடிநீர்த்தொட்டியில் கழிவு கலந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரிக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கை வயலில்
குடிநீர்த் தொட்டியில் மனிக்கழிவு  கலந்த சம்பவத்தை
சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில் வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளியாக காட்ட காவல்துறை முயற்சிப்பதால் வழக்கு விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.பா.பாவாணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.முகமது அஷ்ரப்அலி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள்விடுதலை கட்சியின் பொதுச் செயலாளர் க.சி.விடுதலைக்குமரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம்.

தமிழ்நாடு முன்போக்கு எழுத்தாளர் கலைஞர்களை சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வம், பொருளாளர் கி.ஜெயபாலன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு மற்றும் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் சமூக நீதி கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனுவிவரம்:

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் தலித் குடியிருப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், கடந்த ஜன. 9, 10, 11 ஆகிய தேதிகளில் காவல் கண்காணிப்பாளரின் அழைப்பின்பேரில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 8 பேர் வெள்ளனூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டனர்.

அப்போது, நீங்களே தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவைக் கலந்துவிட்டு பிறர் மீது பழிபோடப் பார்க்கிறீர்களா என்பன போன்ற வார்தைகளால் அவர்களை மிரட்டியுள்ளனர். நீங்களே மனிதக் கழிவைக் கலந்ததாக ஒப்புக்கொண்டால் ரூ.2 லட்சம் பணம், அரசு வேலை போன்ற சலுகைகளை வாங்கித் தருவ தாகக் கூறி ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதாகவும் விசார ணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே,; உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறியாமல் அவர்களை தப்பவிடுடும் நோக்கத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களையே குற்றவாளியாக்கி வழக்கை முடிப்பதற்கு தனிப்படையினர் திட்டமிடுவதாக சந்தேகப் படுகிறோம். காவல்துறையின் இத்தகைய பாரபட்சமான நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, சிபி சிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சட்டமன்றத்தில் இந்தப் பிரச்னை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, குற்றாவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் வசம் இருக்கின்ற காவல்துறையோ பாதிக்கப் பட்டுள்ள பட்டியல் இன மக்களையே இரும்புக்கரம் கொண்டு அடக்குகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர் உண்மையான குற்றவாளிகளை தப்பவிடும் நோக்கில் செயல்படுவதாலேயே சிபிசிஐடியு விசாரணைக்கு உத்தர விடக்கோருகிறோம் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top