தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் திமுக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர் என்றார் முன்னாள் அமைச்சர் கருப்பணன் பேசினார்.
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திங்களூர் நால் ரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக., மாணவரணி செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணைத்தலைவர் உமா மகேஸ்வரன் வரவேற்றார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், கிழக்கு மாவட்ட செயலாளர் கருப்பணன் பேசியதாவது: ஜெயலலிதா ஆட்சியில் ஆடு மாடு வழங்கும் திட்டம், இலவச வேட்டி சேலை திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மக்களுக்கு பல சலுகைகளும் வழங்கப்பட்டன.
ஜெயலலிதா ஆட்சியில் அளவில்லாத தொழிற்சாலைகளை கொண்டு வந்ததால், தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகம் உருவாக்கப்பட்டது. இதனால் பீகார், உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தொழிலாளர்கள் இங்கு வந்து வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதற்கு காரணம் ஜெயலலிதா. ஜெயலலிதா இல்லை என்றால், நாம் வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை செய்யும் நிலை உருவாகி இருக்கும். ஜெயலலிதா வழியில் வந்த எடப்பாடியார் தமிழகம் முன்னேற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அடிப்படை வசதிகளை உருவாக்கி கொடுத்தார்.
பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டம் காரணமாக குடிநீர் பிரச்னை களும், விவசாயிகளுக்கான தண்ணீர் பிரச்னைகளை தீர்த்துள்ளார். கருணாநிதி ஊழல் செய்ததால் தான் ஆட்சி கவிழ்ந்தது, மின்சாரம் இல்லாததால் தான் ஆட்சி கவிழ்ந்தது என்பார்கள்.
எடப்பாடி பழனிசாமியின் நான்கு ஆண்டு ஆட்சியில் எந்த தவறும் நடைபெறவில்லை. ஏன் அப்படிப்பட்ட ஆட்சியை இழந்தோம் என மக்கள் வருத்தப்படுகின்றனர். திமுக. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் திமுக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எம்பி. தேர்தலுடன் எம்எம்ஏ தேர்தலும் நடைபெற உள்ளது. அப்பொழுது எடப்பாடி தான் மீண்டும் முதலமைச்சராவார். தமிழகத்தில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட வேண்டும் என்றால், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும், என்றார் கே.சி. கருப்பணன்.
கூட்டத்தில் அமைப்பு செயலாளர் சிவசாமி, எம்எல்ஏ., ஜெயக்குமார், பெருந்துறை ஒன்றிய செயலாளர்கள் விஜயன், அருள்ஜோதி செல்வராஜ், வைகை தம்பி என்கிற ரஞ்சித்ராஜ், முன்னாள் எம்எல்ஏ.,க்கள் பழனிசாமி, பொன்னுதுரை, பொன்னுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக., மாணவரணி சார்பில் நடந்த வீரவணக்க நாள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், கிழக்கு மாவட்ட செயலாளர் கருப்பணன் பேசினார். அருகில் எம்எல்ஏ., ஜெயக்குமார், மாணவரணி செயலாளர் மணிகண்டன் , ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன் உள்ளனர்