Close
செப்டம்பர் 20, 2024 8:33 காலை

செய்தித்தாள் வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதமல்ல… அது ஒரு அறிவாயுதம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பெருமாநாடு சுதர்சன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்திய பத்திரிகைகள் நாள் கருத்தரங்கில் பேசிய வாசகர் பேரவை செயலர் சா. விஸ்வநாதன்

புதுக்கோட்டை, பெருமாநாடு சுதர்சன் கலை அறிவியல் கல்லூரியும், புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து இந்திய பத்திரிக்கை தினத்தை (30.1.2023)   கல்லூரியில் கொண்டாடியது.

நிகழ்வில், கல்லூரி செயலர் சோனா. சிங்காரம் முன்னிலை வகித்தார். தலைவர் ரமா சிங்காரம் தலைமை உரையாற்றி னார். கல்லூரி முதல்வர் முனைவர் எம்.வீரப்பன் , செய்தித் தாள் வாசிப்பதன் அவசியம் பற்றி குறிப்பிட்டு அறிமுகவுரை ஆற்றினார்.

மேனாள் மன்னர் கல்லூரி வரலாற்றுத் துறைத்தலைவரும், வாசகர் பேரவை செயலருமான சா.விஸ்வநாதன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்.. 1780 -ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் நாள் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவரால் பெங்கால் கெஜட் அல்லது கல்கத்தா அட்வர்டைசர் என்ற பத்திரிக்கை தொடங்கப்பட்டது.

இதுவே இந்தியாவின், ஆசியாவின் முதல் அச்சடிக்கப்பட்ட பத்திரிக்கை. அதனால் இந்த நாளை இந்திய பத்திரிக்கைத் தினமாக கொண்டாடுகிறோம். ஜனவரி 30 , ஒரு சிறந்த பத்திரிக்கையாளரான காந்தியின் நினைவு தினம், தியாகிகள் தினம். காந்தி, இந்தியன் ஒபீனியன், ஹரிஜன் போன்ற பத்திரிக்கைகளை, விளம்பரம் இல்லாமல் நடத்தியவர்.

அப்பத்திரிக்கைகளை தனது கருத்துகளை , தம் போராட்ட வியூகங்களையும், வெளியிடும் சாதனங்களாகவும் மக்களை நல்வழிப்படுத்தும் கருவிகளாகவும் செயல்படுத்தியவர். பத்திரிக்கைகள் தங்கள் கடமையை உணரவேண்டும். மக்கள் நலனை வைத்தே செயல்பட வேண்டும் என்றார் காந்தி.

செய்தித்தாள்கள் அரசின் நான்காவது தூண் என்பார்கள். சட்டமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை என்ற மற்ற மூன்று தூண்களையும் நெறிப்படுத்துகிற ஆற்றல் செய்தித்தாள் களுக்கு உண்டு. அதனாலேயே அதை நான்காவது தூண் என்கிறோம்.

செய்தித்தாள் வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதமல்ல. அது ஒரு, அறிவித்தல், அறிவுறுத்துதல், மகிழ்வித்தல் என்ற மூன்று பணிகளைச் செய்யும் அறிவாயுதம். அதை நீங்கள் வாசித் தால், உலகை அறியலாம். அறிவாளியாகலாம். உங்கள் உரிமைகளை அறியலாம். வேலைவாய்ப்புகளைத் தேடிக் கொள்ளலாம்.

தன்னைச் சுற்றி நடப்பதை அறியலாம். தேசத்தின் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களை அறியலாம். கல்லூரியில் படிக்கும் உங்களின் நல்வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிறந்த சாதனம் செய்திதாள்களே. செய்தித்தாள் வாசிப்பின்றி எந்த போட்டித் தேர்விலும் வெற்றிபெற முடியாது.

எனவே செய்தித்தாள் வாசிப்பின் அவசியத்தை உணரச் செய்யவேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த தினம் கொண்டாடப்படுகிறது. உங்களை உயர்த்திக்கொள்ள, வாழ்க்கையில் வெற்றிபெற பத்திரிக்கைகளை வாசியுங்கள் என்றார் சா.விஸ்வநாதன்.
முன்னதாக கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஜெயகௌரி வரவேற்புரையாற்றினார். நிறைவாக தமிழ்த்துறைத் தலைவர் முத்தழகன் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் பேராசியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்களும் பங்கேற்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top