Close
செப்டம்பர் 20, 2024 5:40 காலை

இராணுவத்தில் வேலைவாய்ப்புகள்: சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் வழிகாட்டி கருத்தரங்கம்

புதுக்கோட்டை

:திருமயம்அரசம்பட்டிசண்முகநாதன்பொறியியல்கல்லூரியில்நடைபெற்ற சிறப்பு வேலை வாய்ப்பு வழிகாட்டிநிகழ்ச்சியில்டெல்டாஸ் குவாட்-கமாண்டர்லெப்டினன்ட்ஈசன்உரையாற்றினார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசம்பட்டிசண்முகநாதன்பொறியியல் கல்லூரியில் இந்திய இராணுவத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் தொடர்பான சிறப்பு வழிகாட்டி நிகழ்ச்சி (பிப்-6)  நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் டாக்டர் குழ.முத்துராமு தலைமை வகித்து உரையாற்றினார். இந்நிகழ்வில்,  கப்பற் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற லெப்டினன்ட் டெல்டாஸ் குவாட் கமாண்டர் ஈசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது :

நம்தேசம் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உண்மையான நிஜ ராணுவக் கதாநாயகர்களை மறந்து விட்டு நம் இளைய தலை முறை சினிமா நடிகர்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இது வருந்தத்தக்க ஒன்று.

நம்தேசத்திற்காக நாட்டின் எல்லைப்பகுதியில் உறைபனியிலும், வெயிலிலும், மழையிலும் இரவு பகலாக நின்று தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து நம்தேசத்தைக் காப்பாற்றும் பணியில் உள்ள ராணுவ வீரர்கள்தான் நம்தேசத்தின் உண்மையான ஹீரோக்கள்.  அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அவர்களைக் கொண்டாடுங்கள். அதுதான் நம்தேசத்தின் பெருமை.

மாணவர்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி ஆளுமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆளுமை மிக்க மனிதர்களாக உருவெடுத்தால்தான், மிகப்பெரிய தலைமைத்துவத்தைக் கைகொள்ள முடியும். விளையாட்டு மைதானங்கள் எனபவை வெறும் பொழுது போக்குக்களமல்ல அது ஆளுமையின் விளை நிலம்.

பாடப் புத்தகங்களில் கிடைக்கும் அறிவு 50 சதவீதம் மட்டும்தான். ஆளுமையால் கிடைக்கும் அறிவுதான் உங்களை 100 சதவீதம்உயர்த்தும். ஆளுமை மிக்க மனிதர்கள்தான் நம்தேசத்தின் மிக முக்கியப் பொறுப்புகளில் அமர்ந்துள்ளனர். எனவே ஆளுமை வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.

இராணுவத்தில் பணியாற்றுவது என்பது வெறும் வேலைவாய்ப்பு சார்ந்தது மட்டுமல்ல. அதுமதிப்பும் மரியாதையும்மிக்க தேசப்பணி.  இராணுவத்தில் சேர நினைப்பவர்கள் எந்த கல்லூரியில் படிக்கிறோம், எந்த மொழியில் பயில்கிறோம், எந்தக் குடும்பத்தில் பிறந்தோம், எந்தச்சூழலில் வளர்ந்தோம் என்பது முக்கியமல்ல. இராணுவத்தில் சேரவேண்டும் என்ற குறிக்கோளும் அதற்கான முறைப்படியான பயிற்சிகளும் இருந்தால் போதும். இராணுவத்தில் உயர்அதிகாரிகளாக பொறுப்புகளில் அமர்ந்துவிடலாம்.

நானும் எந்தவொரு பெரிய பின்னணியும் இல்லாத சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். ஆனால் கப்பற் படையில் உயர்ந்த பதவியில் அமரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக திட்டமிட்டேன். உழைத்தேன். அந்த இலக்கை அடைந்தேன். எனவே இலக்கை நிர்ணயம் செய்து கொண்டு பயணிப்பவர்கள் இராணுவத்தின் உயர் பதவியை எளிதில் அடைந்துவிடலாம்.

இன்றுபெண்களுக்கும் இராணுவத்தில் ஏராளமான உயர் பணி வாய்ப்புகள் உள்ளன. அப்படியான உயர் பதவிகளை நம் தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை விவசாயக் குடும்பத்து முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்கள் இன்று அலங்கரித்து வருகின்றனர்.

இந்திய ராணுவத்தில் தேசப்பாதுகாப்புக்காக நம்தமிழக இளைஞர்கள் பலர் சேவையாற்றி வருகின்றனர் எனபது நமக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமை. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும். அதற்காக நாங்கள் வழிகாட்ட எப்போதும் தயாராக இருக்கின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவ, மாணவியர் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலர் டாக்டர் ர.சொர்ணலதா வரவேற்றார். நிறைவாக கல்லூரி வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி உதவி அலுவலர் திவ்யசொப்ணா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top