மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் பிறந்த நாள் கடந்த வாரம் கொண்டாடப்பட்டது.
தமிழ் திரை உலகத்தின் முதல் உச்ச நட்சத்திரம் என்று கருதப்படும் தியாகராஜ பாகவதர் உயிர் வாழ்ந்ததே 49 ஆண்டுகள்தான். அதில் அவர் திரைப்படங்களில் நடித்த 1936 முதல் அவர் மறைவிற்குப் பின் 1960-ல் வெளியான அவரது “சிவகாமி” என்ற படம் வரை 24 ஆண்டுகள். இத்தனை ஆண்டுகளில் அவர் நடித்தது மொத்தமே 14 படங்கள்தான்.
திரையுலகின் முடிசூடா மன்னராக அவர் ஒளி வீசியது 1937 முதல் 1944 வரை மட்டுமே. ஆனால் இந்த ஆண்டுகளில் 6 படங்களுமே மகத்தான வெற்றிப்படங்கள். 1937-ல் வெளியான “சிந்தாமணி” திரை அரங்குகளில் தொடர்ந்து ஓராண்டும், 1944-ல் வெளி வந்த “ஹரிதாஸ்” தொடர்ச்சியாக மூன்று தீபாவளிகளுக்கும் ஓடி சாதனை படைத்த திரைப்படங்கள்.
தியாகராஜ பாகவதருக்கு, குழந்தைப் பருவத்திலிருந்தே படிப்பில் கவனம் செல்லவில்லை. பாட்டில்தான் முழு கவனமும் சென்றது. இதையறிந்த பாகவதரின் தந்தை கிருஷ்ணமூர்த்தி ஆச்சாரி, கர்நாடக இசைக் கலைஞரான பொன்னு ஐயங்காரிடம், பாகவதரைச் சேர்த்து கர்நாடகஇசை கற்கச் செய்தார்.
பாகவதர், தம் திறமையால், குருமெச்சும் சீடனாக விரைவிலேயே தேர்ச்சியடைந்தார். பிறகு, நாடகம் மீதான ஆர்வம் காரணமாக, திருவையாறு சென்ற பாகவதர், அங்கு ராமசாமி பத்தரிடம் ஓராண்டுகாலம் நாடகப் பாடல்களை நன்கு கற்றார். நடிப்பும், பாட்டும் நன்றாக வந்ததால், ஹரிச்சந்திரா நாடகத்தில், லோகிதாசனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாட்டிலும், நடிப்பிலும் தியாகராஜ பாகவதர் அசத்தினார்.
இதனால் நாடக வாய்ப்புகள், பாகவதருக்கு குவிந்தன. எஸ்.டி.சுப்புலட்சுமி என்பவருடன் இணைந்து இவர் நடித்த சில நாடகங்கள், வெற்றிபெற்றன. அவற்றுள் ஒன்று “பவளக்கொடி” என்பதாகும்.
பவளக்கொடி என்ற பெயரிலேயே தயாரான படம், 1934ஆம் ஆண்டில் வெளியாகி அமோக வெற்றியடைந்தது. தியாகராஜ பாகவதர், திரையுலக நட்சத்திரமாக மிளிர ஆரம்பித்தார். 1935ஆம் ஆண்டில், பாகவதரின் இரண்டாவது படமான நவீன சாரங்கதாரா வெளியாகி வெற்றிபெற்றது. அதன் பின் பாகவதரின் திரையுலக வாழ்வு ஏறுமுகமானது.
அந்த கால கட்டங்களில் பாகவதர் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுமே அவர்களது முக பாவம், உடல் மொழி, வசன உச்சரிப்பு ஆகிய திறமைகளை விட, அவர்களது குரல்வளம், பாடும் திறன் இவற்றுக்காகவே பெரிதும் போற்றப் பட்டார்கள். பாகவதரின் மாபெரும் புகழ் அவரது குரலுக்கும் இசைக்குமாகவே இருந்தது.
உயர்விலும் தாழ்விலும் உச்சத்தை தொட்ட பாகவதர், தமிழ் திரைப் பட வரலாற்றில் ஒரு சகாப்தம்!
இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋