Close
மே 20, 2024 5:50 மணி

கைவிரல்களுக்கும் ஞாபகசக்திக்கும் எண்ணிக்கை போர்த்தந்திரங்கள் போன்ற சூட்சுமங்கள் நிறைந்த பல்லாங்குழி விளையாட்டு

இங்கிலாந்திலிருந்து சங்கர்

பல்லாங்குழி

தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளில் சில இன்றைய நாளில் இந்த தலைமுறை பிள்ளைகளால் விளையாடப்படுவதில்லை. மேற்கத்திய விளையாட்டுகளும், கணினி சார்ந்த விளையாட்டுகளும் இளைய தலைமுறையிடத்தில் ஆக்கிரமித்து விட்டதை கண்கூடாக காண்கிறோம். எங்கள் பிள்ளைகளும் இதற்குவிதிவிலக்கல்ல.

அயலகத்தில் பிறந்து வளர்கிற அவர்களுக்கு நம் கலை, பாரம்பரியம், பண்பாட்டு விழுமியங்களை எடுத்து சொல்கிற பொறுப்பு நமக்கு இருக்கிறது.சில வருடங்களுக்கு முன் திருச்சியிலிருந்து மரத்தாலான பல்லாங்குழி சாதனத்தை வாங்கி வந்தேன்.பித்தளை சில்வர் உலோகத்தால் செய்யப்பட்டு விற்பனைக்கு இருந்தாலும், மரத்தால் செய்யப்பட்ட பல்லாங்குழி மீது தான் நம் ஈர்ப்பு இருந்தது.

பெயர்காரணம்:இரு வரிசைகளில் ஏழு குழிகள் இருக்கும். இரு வரிசையிலும் சேர்த்து பதினான்கு குழிகள் இருப்பதால் பதினான்கு குழி விளையாட்டு என்பதை பன்னாங்குழி என அழைத்தனர். பின்னர் பல்லாங்குழி என அழைக்கப்பட்டது. பொதுவாக புளியங்கோட்டையை வைத்தோ அல்லது ஏதாவது பெரிய விதைகளையோ அல்லது சோளி (சோவி)களையோ ஆடுபொருளாக வைத்து இவ்விளையாட்டு ஆடப்படுகிறது.

பல்லாங்குழி விளையாட்டு முறையை சுருக்கமாக பார்ப்போம்:

பல்லாங்குழி ஆட்டத்தில் குழிக்கு ஐந்து காய்களாக ஆளுக்கு ஏழு குழிகளாக ஆட்டம் தொடங்குகிறது.தன்னுடைய காய்களை எடுத்து, ஒருவர் ஆட்டம் தொடங்குகிறபொழுது முதன்முறையாக சமத்தன்மை குலைகின்றது.எடுத்தாடுபவர் குழியில் காய்கள் இழப்புக்கு உள்ளாகின்றன.

சுற்றிக் காய்களை இட்டு வந்து ஒரு வெற்றுக்குழியினைத் துடைத்து அடுத்து முதலில் இட்ட ஐந்து காய்களுக்குப் பதிலாக நிறையக் காய்கள் கிடைக்கின்றன.

ஒரு வெற்றுக் குழியில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு காயினையும் இட்டு வரும்போது அது நாலாகப் பெருகிய உடன் அதனைப் பசு என்ற பெயரில் அந்தக் குழிக்குரியவர் எடுத்துக் கொள்கிறார்.இதன் விளைவாக ஆட்டத் தொடக்கத்தில் இருந்த ஐந்து காய்கள் மீண்டும் ஒரு குழிக்கு ஒரு போதும் திரும்பக் கிட்டுவதே இல்லை.

காய்களை இழந்தவர் (எடுத்துக் காட்டாக 15 காய்கள் குறைவாகக் கிடைத்தன என்றால்) தன்னுடைய பகுதியில் மூன்று குழிகளைக் காலியாக (தக்கம்) விட்டு விட்டு ஆட்டத்தைத் தொடர வேண்டும். 5 காய்க்கு பதில் 4 காய்கள் இருந்தால் அதை புள்ளை குழி என்று காய்களை இழந்தவர் வைத்திருப்பார். அந்த குழியில் அவர் மட்டும் காய் இடுவார். அந்தக் குழியில் எதிரி (வென்றவர்) காய்களைப் போட மாட்டார்.

ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப் போகிறபோது அவர் கையில் எஞ்சியிருக்கிற காய்கள் ஒரு குழிக்குரிய ஐந்து கூட இல்லாமல் நாலாக இருந்தால் ஆட்டம் முடிவு பெறும்.

சிறு வயதில் என் சகோதர சகோதரிகள் மற்றும் அக்கம்பக்கத்து வீட்டு நண்பர்களோடு அமைதியாக வீட்டிலேயே விளையாட அனுமதிக்கப்பட்ட விளையாட்டு இது. பரமபதம், தாயம் போன்ற விளையாட்டு வகையில் இதுவும் ஒரு ஆட்டம்.

எண்களை சரியாக கூறவும் , கண் மற்றும், கணிக்கும் திறன்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆட்டம். வெயிலோ, மழையோ குளிரோ…..இதை தடை செய்ய முடியாது. ஐந்து வயதுக்கு மேல் எல்லா வயதினரும் சேர்ந்து விளையாடலாம். அதிகபட்ச தேவை இன்னொருவர் மற்றும் இரண்டடி நிலம். இந்த விளையாட்டு அந்த காலத்தில், குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல் பெரியவர்களுக்கும் நல்ல பொழுது போக்காக இருந்தது.இதனால் அனைவருடனும் நல்ல உறவு இருந்தது.

கைவிரல்களுக்கும் ஞாபகசக்திக்கும் எண்ணிக்கை போர்த்தந்திரங்கள் போல் விளையாட்டு சூட்சுமங்கள் நிறைந்தது இந்த பல்லாங்குழி விளையாட்டு. நம் முன்னோர்களின் அத்தனை உருவாக்கங்களும் ஞானமேயன்றி வேறில்லை.

இங்கிலாந்தில் வாழ்ந்தாலும் அவ்வப்போது பிள்ளைகளுடன் இதுப்போன்ற விளையாட்டுகளை விளையாடுவதால் இழந்த அந்த இனிமையான பொழுதுகளை மீட்டெடுத்தெடுத்தது போன்ற துள்ளல்.

இணைப்பு காணொளியில்:எனது மகன் சூர்யா, நண்பரின் மகன் வினுஜன் மற்றும் மகள் விஷ்ணுஜா.

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top