Close
ஏப்ரல் 27, 2024 7:18 மணி

ஞானபீட விருதாளர் அகிலனின் நூற்றாண்டு நிறைவு விழா…

புதுக்கோட்டை

எழுத்தாளர் அகிலன் பிறந்த பெருங்களூரில் நடைபெற்ற வாசகர் பேரவை- வரலாற்றுப் பேரவை சார்பில் நடைபெற்ற நூற்றாண்டு விழா

தமிழில் முதலில் ஞானபீட விருது பெற்ற அகிலன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா அவரின் பிறந்த ஊரான பெருங்களூர் அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் வை.ரவி தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அகிலனின் மகள்  அங்கையற்கண்ணி அவரது குடும்பத்தினர் மற்றும் அகிலனின் மகன் சிவகுருநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் புலவர் மதிவாணன் பேசியதாவது: பொதுவாக எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லாத சூழல் நிலவி வருகிறது. ஆனால் அகிலன் அப்படியல்ல. அவரின் எழுத்தும் வாழ்க்கையும் ஒன்றே. அவரின் எழுத்தில் ஒரு நேர்மை இருக்கும். ஆபாசம் கலவாத எழுத்து அவருடையது. சாதிபேதம் பார்க்காத மாமனிதர் அவர்.அவர் பிறந்த மண்ணில் வாழ்வதும், அங்கே உள்ள பள்ளியில் உரையாற்றுவதும் பெருமையான விஷயம். இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் அவரைப் போல உயரவேண்டும் என்றார் அவர்.

வாசகர் பேரவை உறுப்பினர் எஸ். ஆரோக்கியசாமி  பேசியதாவது: தன் எழுத்தின் வழி காந்தியத்தைப் பரப்பியவர் அகிலன்.அவரது வாழ்க்கை எளிமையானது. அவருடைய எழுத்து நேர்மையானது.

தேசபக்தியும், காந்தியக் கொள்கைகளும் அவருடைய நாவல்களில் பரவிக் கிடக்கும். எம்.ஜி.ஆர் போன்றவர்களின் பெரும் மதிப்பைப் பெற்றவர்.அகிலனின் நாவலைப்படமாக்க நேரடியாக அவர் வீட்டிற்கே சென்று அனுமதி வாங்கியவர் எம்.ஜி.ஆர்.

அவருடைய நாவல்களையும், சிறு கதைகளையும் இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும். பாடப் புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பு ஒவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டும்  என்றார் அவர்.

புதுக்கோட்டை
பெருங்களூரில் உள்ள பள்ளியில் நடைபெற்ற அகிலன் நூற்றாண்டு நிறைவு விழா

விழாவில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சிவரஞ்சனி, மற்றும் உறுப்பினர்கள், மன்னர் கல்லூரி மேனாள் வரலாற்றுத் துறைத் தலைவர் நந்தீஸ்வரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், ஆசிரியர்கள், திரளாக மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் அகிலனில் குடும்ப உறுப்பினர்கள் கெளரவிக்கப் பட்டனர். இந்த விழா ஒட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழுடன் நூல்களும் பரிசாக வழங்கப்பட்டது.மேலும் மேல்நிலைத் தேர்விலும், பத்தாம் வகுப்புத்தேர்விலும் முதல் மூன்று மதிப்பெற்ற மாணவிகளும் கெளரவிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை
எழுத்தாளர் அகிலன் நூற்றாண்டு நிறைவுவிழா போட்டிகளில் பரிசு வென்ற மாணவ, மாணவிகள்

போட்டிகளைச் சிறப்பாக நடத்தித் தந்த ஆசிரியைகள் வாசுகி, அருணாதேவி இருவரும் பாராட்டப்பட்டார்கள்.முன்னதாக வரலாற்றுப் பேரவைச் செயலர்மாரிமுத்து வரவேற்புரை யாற்றினார். வாசகர் பேரவைச் செயலர் சா.விஸ்வநாதன் அறிமுவுரை ஆற்றினார். நிறைவாக அகிலன் மகள்  அங்கையர்கண்ணி நன்றி கூறினார்.

1 Comment

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

1 Comment
scroll to top