Close
செப்டம்பர் 20, 2024 6:59 காலை

நேரு யுவகேந்திரா சார்பில் ஜெஜெ கல்லூரியில் இளையோர் பாராளுமன்ற கூட்டம்

புதுக்கோட்டை

புதுகை ஜெஜெ கல்லூரியில் நேருயுவகேந்திரா சார்பில் நடந்த இளையோர் பாராளுமன்ற நிகழ்வில் பங்கேற்ற எம்பி அப்துல்லா

இந்திய அரசு, புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் இந்தியாவின் ஜி 20 தலைமைப் பொறுப்பு குறித்த மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன்றம் ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று  நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர்  ஜோயல் பிரபாகர் தலைமை வகித்தார். ஜெ.ஜெ.கல்வி நிறுவனங்கள் குழும செயலாளர்  சுப்பிமணியன் முன்னிலை வகித்தார்.

புதுக்கோட்டை
இளையோர் பாராளுமன்றத்தை தொடக்கி வைத்த சட்ட அமைச்சர் ரகுபதி

தமிழ்நாடு அரசின் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  இளையோர் பாராளுமன்றத்தை துவக்கி வைத்து  பேசுகையில், நம் இளம் தலைமுறையினர் பாராளுமன்ற சட்டமன்ற நிகழ்ச்சிகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் எனவும், அப்போதுதான் நாட்டின் வளர்ச்சியில் தங்களது கடமை மற்றும் பங்குபணி குறித்த சரியான புரிதலைப் பெற முடியும் எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா  பேசுகையில், எந்த ஒரு வன்முறையுமின்றி, மக்கள் தாங்கள் விரும்பும் ஒரு அரசை தங்களுக்காக தாங்களே உருவாக்கிக் கொள்ளும் ஒரு அரிய வாய்ப்பினை மக்களுக்கு வழங்குவதே நமது ஜனநாயகத்தின் பெருமை எனக்குறிப்பிட்டார்.நிகழ்ச்சியில் ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி முதல்வர்  ஜெ. பரசுராமன், ஸ்வார்டு டிரஸ்ட் தலைவர் தெய்வானை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

புதுக்கோட்டை
நிகழ்வில் பங்கேற்ற ஜெஜெ கல்லூரி மாணவர்கள்

தொடர்ந்து நடைபெற்ற இளையோர் பாராளுமன்றத்தில், ஜி 20 நாடுகளுக்கு இந்தியா தலைமையேற்பதின் முக்கியத்துவம், ஒய் 20 எனப்படும் இ;ந்நாடுகளின் இளையோர் கருத்தரங்கம் குறித்த உரைகள், சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டு மற்றும் சுற்றுச் சூழலை பாதிக்காத அன்றாட மனித வாழ்க்கை ஆகிய நான்கு தலைப்புகளின் கீழ் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் சுமார் 40க்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியை பேராசிரியர்கள் முனைவர். எஸ்.ஜே. சதீஷ் ஆரோன் ஜோசப்,  முத்துலெட்சுமி,முனைவர்சி.முத்துக்குமார்  மற்றும் கே.செல்லமுத்து ஆகியோர் நெறிப்படுத்தி வழிகாட்டி நடத்தினர். நிகழ்வில் சுமார் 1100 இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.

மாலையில் நம் மண்ணின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் இளையோர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சிகளை பேரா. முனைவர் எஸ்.ரத்னா தேவி ஒருங்கிணைத்து சிறப்புற நடத்தினார். தொடர்ந்து நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில், மாவட்ட குழந்தைகள் நலக் குழும தலைவர் கே. சதாசிவம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர்  எம்.வீரமுத்து ஆகியோர் கலந்துகொண்டு கருத்தரங்கம் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர்.

முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் இளையோர் செஞ்சிலுவை சங்க மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் முனைவர் தயாநிதி  வரவேற்றார். நிறைவாக நேரு யுவ கேந்திராவின் திட்ட உதவி அலுவலர் ஆர்.நமச்சிவாயம்  நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top