Close
நவம்பர் 22, 2024 11:39 காலை

சிறந்த சுகாதாரக் கட்டமைப்புகள் கொண்ட மாவட்டங்களில் ஒன்றாக சேலம்

சேலம் மாவட்டத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில், வணக்கத்திற்குரிய சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (08.03.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் அனைத்து விதமான மருத்துவச் சேவைகளும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு சிறப்பானத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் 2-வது சுற்று சுகாதாரப் பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 39,12,314 ஆகும். சேலம் மாநகர பகுதியில் மட்டும் சுமார் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 1 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 12 அரசு மருத்துவமனைகள், 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், 52 சித்த மருத்துவ மையங்களும், 6 ஓமியோபதி மருத்துவ மையங்களும் செயல்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டம் சிறந்த சுகாதாரக் கட்டமைப்புகளைக் கொண்ட மாவட்டமாகத் திகழ்கிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சேலம் மாநகர பகுதியில் 32 நகர்புர சுகாதார நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்பொழுது பணிகள் நிறைவுபெற்று, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. மேலும், முதலுதவி சிகிச்சை, அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவச் சேவைகளும் கிடைக்கும் வகையில் மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு சிறப்பான மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு சராசரியாக 970 உள் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ஒரு நாளைக்கு சராசரியாக 67 மகப்பேறுகளும் நடைபெறுகின்றன. புற நோயாளிகளாக ஒரு நாளைக்கு 3000 முதல் 4000 நபர்கள் சிகிச்சைப் பெற்று செல்கின்றனர். மாவட்டத்தில் நடைபெறும் மகப்பேறுகளில் 52.3 சதவிகிதம் அரசு மருத்துவமனைகள் மூலமாக நடைபெறுகிறது.

குறிப்பாக, தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் உலக வங்கியின் நிதி உதவியுடன், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் ஓர் செயல்பாடாக ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் சுகாதாரப் பேரவை நடைபெற்று வருகின்றது. 2021-2022 – ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் சுகாதாரப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் முதல் சுற்றாக 2021-2022 ஆம் ஆண்டு மாவட்ட சுகாதாரப் பேரவை கடந்த 12.08.2021 அன்று நடைபெற்றது. இப்பேரவையில் மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும், அனைத்துத் துறை அலுவலர்களும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களும், தன்னார்வலர் தொண்டு நிறுவனர்களும், மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதனை ஒருங்கிணைப்புக்குழு பரிசீலித்து எடுக்கப்பட்ட 17 சுகாதார திட்ட அறிக்கைகள் மாநில சுகாதாரப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 30.03.2022 அன்று நடைபெற்ற மாநில சுகாதாரப் பேரவையில் சேலம் மாவட்டத்திற்கு ரூ.95கோடி மதிப்பீட்டில் ஏற்காடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக் கூடம் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டு, தற்போது கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாண்டில் வட்டார சுகாதாரப் பேரவையில் விவாதிக்கப்பட்ட திட்டங்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது. சேலம் மாநகராட்சியின் சார்பில் 3 தீர்மானங்களும், மருத்துவக் கல்வித்துறை சார்பில் 2 தீர்மானங்களும், மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் சார்பில் 19 தீர்மானங்களும், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் 194 தீர்மானங்களும், காசநோய் பிரிவின் சார்பில் 2 தீர்மானங்களும், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவின் சார்பில் 20 தீர்மானங்களும், சித்த மருத்துவப் பிரிவின் சார்பில் 5 தீர்மானங்களும் என மொத்தம் 245 தீர்மானங்கள் திட்ட அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு, இன்றைய தினம் மாவட்ட அளவிலான 2-வது சுற்று சுகாதாரப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தத் திட்ட அறிக்கைகள் ஆராயப்பட்டு, மாநில சுகாதாரப் பேரவைக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்கள்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை, சித்த மருத்துவப் பிரிவு, மக்களைத் தேடி மருத்துவம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு, காசநோய் பிரிவு உள்ளிட்ட துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top