Close
செப்டம்பர் 20, 2024 3:43 காலை

சிறுமிகள், இளம்பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை

 சிறுமிகள், இளம்பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்த சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பி.சுசிலா வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு அரசு மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்காக மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு நடத்திடங்களை அறிவித்துள்ளதை அனைத்திந்திய ஜனநாயகத்தின் புதுக்கோட்டை மாவட்டக்குழு வரவேற்கிறது. பாராட்டுகிறது.

அதே நேரத்தில் குடும்பத்தில், சமூகத்தில், பொதுவெளியில் சிறுமிகள், இளம்பெண்கள், வயதுமுதிர்ந்த பெண்கள் என அனைவருமே பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். வயது வித்தியாசமின்றி பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

உறவினர்கள், அக்கம்பகத்தினர், காதலர்கள் என்ற போர்வையில் இத்தகை கொடுமைகள் நடைபெறுகின்றன. நகைகளுக்காகவும் பல்வேறு இடங்களில் பெண்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தால் இத்தகைய குற்றங்களுக்காக தண்டனை பெற்று சிறைக்குச் செல்லும் நபர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதில் இருந்து இதன் உண்மையை நாம் புரிந்துகொள்ள முடியும்.

இத்தகைய தண்டனையும்கூட துணிந்து காவல் நிலையத்தில் புகார் செய்த வழக்குகளால் மட்டுமே! காவல் நிலையத்தில் புகார் அளிக்காத இதுபோன்ற குற்றங்கள் மிகவும் கூடுதலாக உள்ளது என்பதே நடைமுறை உண்மை. காவல் நிலையத்தில் கூட சில புகார்கள் கட்டப்பஞ்சாயத்து மூலமாக முடித்து வைக்கப்படுகின்றன என்பதும் கசப்பான உண்மையாக இருக்கிறது.

குலமங்களத்தைச் சேர்ந்த சாவித்ரி காதலித்த நபராலேயே கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி ஆற்றில் வீசியது, கொத்தக்கோட்டையைச் சேர்ந்த கௌரியின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் மாமியார் மற்றும்  உறவினர்களால் அடித்து கொலை செய்தது.

ஏம்பலை சேர்ந்த 7 வயது சிறுமி பக்கத்து வீட்டாரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது. நொடியூரைச் சேர்ந்த வித்யாவை நரபலி கொடுப்பதற்காக கொலை செய்யப்பட்டது.

இடையன்வயலைச் சேர்ந்த சாவித்ரி மாற்று சமூகத்தை சேர்ந்தவரை காதலித்தார் என்பதற்காக உறவினர்களால் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டது. சமீபத்தில் மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி பவித்ராவை காதலை ஏற்காததால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது என புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

இத்தகைய கொடுமைகளை எதிர்த்து ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை மேற்படி புகார்களின் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதில்லை. உறுதியான நடவடிக்கை எடுத்திருந்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்படியான சம்பவங்களை கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

எனவே, தமிழக அரசும், காவல்துறையும் பெண்களுக்கு எதிரான பல்வேறு விதமான வன்கொடுமைகள் நடைபெறுவதை தடுத்து நிறுத்தவும், பணியிடங்களிலும், பொது இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த  உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top