Close
செப்டம்பர் 20, 2024 7:35 காலை

சென்னை சூப்பர் கிங்ஸ் செல்ல மகன் தோனி…!

இங்கிலாந்திலிருந்து சங்கர்

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி

சென்னை என் இரண்டாவது இல்லம் என்று அன்புடன் கூறிய சென்னை சூப்பர் கிங்ஸ் செல்ல மகன் தோனி..

தமிழ் மக்கள் மனதைக் கவர்ந்த விளையாட்டு வீரர்.  ரமணா படத்தில் ஒரு அருமையான வசனம் வரும் “தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு சீக்கிரம் யாரு மேலயும் அன்பு வச்சிட மாட்டாங்க. அப்படி வச்சிட்டா சாகுற வரைக்கும் அந்த அன்பு மாறாது. சொந்த மாநிலம் ஜார்கண்டாக இருந்தாலும், தமிழ் நாட்டு மக்கள் மனசுல தோனிக்குன்னு ஒரு தனி இடம் இருக்கு.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அவர்களும் அவர்களோடு நெருங்கியவர்களும் சேர்ந்து விளையாடியதுதான் கிரிக்கெட். அது என்றுமே பெருநகர தனவான்களின் விளையாட்டாகவே இருந்து வந்தது. அவர்கள் இந்த நாட்டை விட்டு அகன்ற பிறகும் அது அப்படியே தொடர்ந்தது.

கபில்தேவ் தலைமையிலான அணி 1983 -ல் உலகக் கோப்பை யை வென்ற பிறகுதான் அது நடுத்தர, கீழ் நடுத்தர வகுப்பு மக்களின் கவனத்தைப் பெறத் தொடங்கியது. அதன் பிறகான உலகமயமாக்கம்.

தொலைக்காட்சிகள், தொடர் விளம்பரத்துக்கான தேவை ஆகியவை கிரிக்கெட்டை இன்னும் பல வீடுகளுக்கு எடுத்துச் சென்றது. ஆனாலும் அதிலே விளையாடுவோர் மற்றும் ஆளுமை செலுத்துவோர் உயர் நடுத்தர வர்க்கத்தினராகவே இருந்தனர். சிறு நகரங்கள், கிராமங்களிலிருந்து விளையாட்டு வீரர்கள் வருவதற்கான எந்த வாய்ப்பும் இருக்கவில்லை.

அதிலும் ஒரு அணியின் தலைவர் வருவது சாத்தியமே இல்லை என்பதாக இருந்தது. இத்தகைய குழப்பங்களுக்கு நடுவே எளிய பின்னணியிலிருந்து வந்து விஸ்வரூபம் எடுத்தவர் தோனி .

“தலைவன் பிறப்பதில்லை, காலமும் சூழலும் சிந்தனைக ளுமே தலைவர்களை உருவாக்குகின்றன” என்ற சொற்தொடர் மகேந்திரசிங் தோனிக்குப் பொருந்தும். சாமானிய இந்தியர் களுக்கு சபலத்தை ஏற்படுத்தவல்ல மத்திய அரசுப் பணியை உதறிவிட்டு, மட்டை பந்தை தூக்கிக் கொண்டு மைதானத் துக்கு ஓடி வந்தார். அந்த நொடியில் இருந்து இந்திய துடுப் பாட்டத்தில் துடிப்பான இரணியனாக உருவாகத் தொடங் கினார் தோனி.

வரலாறு எல்லா சாதனை மனிதர்களையும் ஒரு வரியில் நினைவு கொள்ளும், சிலருக்கு பக்கங்களை வழங்கும், வெகு சிலருக்கு மட்டுமே.அத்தியாயங்களை ஒதுக்கும். கிரிக்கெட் வரலாறு, தோனிக்கு அத்தியாயங்களை ஒதுக்கித் தந்தது. கிரிக்கெட் வரலாறு எம்.எஸ். தோனிக்கு முன் – பின் என்றானது.

சாதுர்யமான இலக்குக் கவனிப்பாளராக ஆடும் திறன், அசர வைக்கும் உடல் தகுதி, பிரமாதமாக ஆட்டத்தை முடித்து வெற்றியை அமர்க்களமாக அடைய வைக்கும் திறமை..,
இவை எல்லாவற்றிற்கும் மேலே பல அற்புதமான குணங்கள் தோனியிடம் இருப்பது நாமறிந்ததே.

முதலில் குறிப்பிட வேண்டியது அவரின் அசாத்திய பொறுமை. களத்தில் எந்த நிலையிலும், பதறாது அமைதி காக்கும் அரிய பண்பு. ஆட்டம் யாருக்கு சாதகமாக போய்க் கொண்டிருந் தாலும், மனம் தளராமல், வியக்கத் தக்க உறுதியுடன் விளையாடுவது. பல சமயங்களில், இந்த நம்பிக்கையான அணுகுமுறை , பல தோல்வியின் உடும்புப் பிடியிலிருந்து, வெற்றிக்கனியை அநாயாசமாக பறித்துத் தந்திருக்கிறது.

தான் அணித் தலைவராக இருந்த போதும், அணிக்காக ஆடும் ஆட்டக்காரராக ஆடும்போதும், ஆட்டத்தை நுணுக்கமாகக் கவனித்து, கணித்து, நல்ல அறிவுரைகளை, உத்திகளை அணித் தலைவருக்கு அவ்வப்போது கொடுத்து, அணியின் வெற்றிக்கு வழி வகுப்பது அவரது பண்பு.

போட்டிகளில், அது ஐந்து நாள் ஆட்டமாக இருந்தாலும், ஒரு நாள் ஆட்டமாக இருந்தாலும், குச்சிகளுக்கு பின்னால் நின்று, பந்து வீச்சாளர்களுக்கு குறிப்பறிந்து கொடுக்கும் அறிவுரை ஆலோசனைகள் அநேகமாக பயனுள்ளதாக மிகவும் உதவியது என்று தோனியுடன் விளையாடிய எல்லா ஆட்டக்காரர்களும் மனமார்ந்து, மகிழ்வுடன் பாராட்டி உள்ளனர்.

அணியின் வருங்கால வளர்ச்சிக்காக, மற்றும் எல்லா தொடர்களிலும், எல்லா நாடுகளிலும், அணி தொடர்ந்து வெற்றிக் கொடி நாட்டுவதற்காக, திறமையுள்ள இளம் வீரர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை நன்கு ஊக்குவித்து சிறந்த விளையாட்டு வீரரர்களாக உருவாக்கியது.

அணி வெற்றி பெறும் சமயங்களில் தன்னை முன்நிறுத்திக் கொள்ளாமல், மற்றவர்களை முன்னிலைப் படுத்தி, தான் ஒரு ஓரமாக நிற்பது, அதுவே தோல்வியாக இருந்தால், முழு பொறுப்பையும் தன் மீதே சுமத்திக் கொள்வது, தன்னைப் பற்றி எப்படி விமர்சனங்கள் வந்தாலும், கோபப்பட்டு பதிலடி கொடுக்காமல், மிகவும் கவுரவமாக நடப்பது, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் போது தெளிவாகப் புன்னகையுடன், கண்ணியமாக பேசுவது, பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுடன் பணிவோடு, கனிவோடு, இனிமையாக நடந்து கொள்வது..எல்லாவற்றிற்கும் மேலாக, சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஆடுவது..’தல’ தல தான்.

— இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top