Close
செப்டம்பர் 20, 2024 4:04 காலை

சொத்து பட்டியல்களை அண்ணாமலை வெளியிட்டால் எதிர்கொள்ள அதிமுக தயார்

சென்னை

அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார்

அதிமுகவினர் மீதான  சொத்து பட்டியல்களை பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்டால் அதனை எதிர்கொள்ள எப்போதும் தயாராகவே இருக்கிறோம் என முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்  தெரிவித்தார்.

திருவொற்றியூர் பகுதி அதிமுக சார்பில் சுமார் 18 இடங்களில் பொதுமக்களுக்கான தண்ணீர் பந்தல்கள் திறக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் நடைபெற்றது.  இதில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கலந்து கொண்டு தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார் .

பின்னர் செய்தியாளர்களிடம் டி. ஜெயக்குமார் கூறியது:
திமுகவினரின் ஊழல்களை எதிர்த்து தான் அதிமுக என்ற கட்சியே தொடங்கப்பட்டது. கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்கள் நடத்திவரும் பல்வேறு குடும்பச் சொத்துகள் குறித்து அதிமுக தொடர்ந்து புகார்களைத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளது.

தற்போது திமுகவினருக்கு ரூ.1.34 லட்சம் கோடி சொத்து இருப்பதாக பட்டியல்களை வெளியிட்டுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக ஊழல் சொத்துகளை மீட்டெடுக்க மத்திய அரசு வசம் உள்ள புலனாய்வு, வருமானவரி, அமலாக்கத்துறை உள்ளிட்ட முகமைகள் மூலம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  அதற்கான முறையான செயல்பாடுகளைத் தொடங்க வேண்டும். இதைத்தான் அவரிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு செய்தால் அது பாராட்டுக்குரியது.

அண்ணாமலையின் புகார்களை எதிர்கொள்ளத் தயார்: 
தமிழகத்தை ஆட்சி செய்த அனைத்து கட்சியினரின் சொத்து பட்டியல்களையும் வெளியிடப் போவதாக அவர் பொதுவாகத் தெரிவித்துள்ளதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. தமிழகத்தை ஆட்சி செய்த கட்சி என்ற அடிப்படையில் அதிமுக இருக்கிறது என்றாலும் கூட அவர் நேரடியாக அதிமுகவை குறிப்பிடவில்லை. எனவே அதிமுகவினர் மீது பெயரைக் குறிப்பிட்டு சொத்து பட்டியல்களை வெளியிட்டால் அவற்றை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம்.

எங்களுக்கு எவ்வித பயமும் இல்லை. அதிமுகவை மிரட்டி பார்க்கும் வேலையில் பாஜக ஈடுபட்டால் அதற்கு பணிந்து விட மாட்டோம் ஊழல் செய்தவர்கள் யாரால் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும், யார் தவறு செய்திருந்தாலும் உரிய விசாரணை அமைப்புகள் மூலம் ஊழல் சொத்துக்களை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை என்றார் ஜெயக்குமார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி, மாவட்ட பொருளாளர் பி.ராஜேந்திரன்,  பகுதி செயலாளர் அஜாக்ஸ் பரமசிவம்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top