Close
மே 20, 2024 9:21 மணி

கடும் எதிர்ப்பால் ஆளுநரின் வருகையை ரத்துசெய்த புதுக்கோட்டை கம்பன் கழகம்..

புதுக்கோட்டை

கம்பன் விழாவுக்கு ஆளுநர் ரவியை அழைத்தற்கு சிபிஎம் கண்டனம்

அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் பலத்த எதிர்ப்பால் ஆளுநரின் வருகையை ரத்து செய்து வேறு அழைப்பிதழை வெயியிட்டது புதுக்கோட்டை கம்பன்கழகம்.

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48-ஆம் ஆண்டு விழா வருகின்ற 14.07.2023 முதல் 23.07.2023 வரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறுவதாக சில தினங்களுக்கு முன்பாக அழைப்பிதழ் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் அமெரிக்க முன்னாள் துணை அமைச்சர் ராஜன் நடராஜன, மாநில அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், திருச்சி சிவா, எம்.பி, சு.திருநாவுக்கரசர் எம்.பி, தொல்.திருமாவளவன் எம்.பி, எம்.எம்.அப்துல்லா எம்.பி, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ.. எம்.சின்னத்துரை எம்.எல்.ஏ, வை.முத்துராஜா எம்.எல்.ஏ, உள்பட பலரும் வேறு வேறு நாட்களில் கலந்து கொள்வதாக அழைப்பிதழில் உள்ளது. இதில் நிறைவு நாளான 23-ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என.ரவி கலந்துகொள்வதாகவும் அழைப்பிதழில் இடம்பெற்றது.

அரசியல் சட்டத்திற்கு எதிராக ஆளுநரின் அடாவடி நடவடிக்கைகளை திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. முதலமைச்சர் உள்ளிட்ட தமிழ்நாடு அரசாங்கமே ஆளுநரின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்து வருகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை கம்பன்கழக விழாவிற்கு ஆளுநரை அழைத்திருப்பது பல்வேறு தரப்பிலிருந்து கடுமையான கண்டனக் குரல்கள் எழுந்தது. ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக்கொடி போராட்டமும் பெரிய அளவில் நடத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில்தான், கடும் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் ஆளுநரின் பெயரை நீக்கிவிட்டு வேறு அழைப்பிதழை புதுக்கோட்டை கம்பன் கழகத்தினர் வெளியிட்டுள்ளனர்.

சிபிஎம் கண்டனம்: இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதும், பிறகு மூக்குடைபடுவதும் வழக்கமாகிவிட்டது. மும்மொழித்திட்டம், புதிய கல்விக்கொள்கை, சனாதனம், கால்டுவெல், திராவிடம், மார்க்ஸ், வள்ளலார், ஸ்டெர்லைட், கூடங்குளம் என அவர் பேசிய சர்ச்சைப் பேச்சுகளால் தமிழகத்தில் சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் அளவிற்கு கொந்தளிப்பான சூழல் உருவாகியது.

இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் அரசியலமைப்புச் சட்டத்தையே காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியை விட்டு நீக்கிய விவகாரம் பெரும் சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அதிமுக, பிஜேபி-யைத்தவிர அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஆளுநரை எதிர்த்து போராட்டங்களை நடத்திவரும் நிலையில், புதுக்கோட்டை கம்பன் கழகம் வேண்டுமென்றே ஆளுநரை அழைத்து அரசுக்கு சவால் விடுவது போல் செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இலக்கியத் திருவிழா என்கிற அடிப்படையில் புதுக்கோட்டை கம்பன் கழக விழாக்களில் அனைத்துத்தரப்பினரும் கடந்த காலங்களில் பங்கேற்று வந்துள்ளனர். பல இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் அந்த மேடையில் பேசியுள்ளனர். இப்படி அனைத்துப் பகுதியினரும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு விழாவில் கடும் விமர்சனத்துக்கு உள்ளான ஆளுநரை விழாவிற்கு அழைத்திருப்பதையே கம்பன் கழகத்தினர் தவிர்த்து இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top