திருவொற்றியூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகாகவி பாரதியாரின் சிலையை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி திறந்து வைத்தார்.
திருவொற்றியூர் மண்டல அலுவலகம் அருகே சண்முகனார் பூங்கா உள்ளது. நகராட்சியாக இருந்தபோது அமைக்கப்பட்ட இப்பூங்காவில் காந்தியடிகள், மகாகவி பாரதியாருக்கு சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் மகாகவி பாரதியாரின் சிலை சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டது. பின்னர் சிலை அமைக்கப்பட்டிருந்த பீடமும் இடிந்து தரைமட்டமாகிவிட்டது.
இதனையடுத்து மீண்டும் பாரதியார் சிலையை அதே இடத்தில் அமைக்க வேண்டும் என பல்வேறு பொதுநல அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில் திருவொற்றியூர் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் புதிய சிலை அமைப்பதற்கான அனுமதி மாநகராட்சி நிர்வாகத்திடம் பெறப்பட்டது.
பின்னர் பாரதியாருக்கு பீடத்துடன் கூடிய மார்பளவு புதிய சிலை பூங்காவில் ஏற்கெனவே இருந்த இடத்தில் மீண்டும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பாரதியார் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி திருவொற்றியூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட டாக்டர் கலாநிதி வீராசாமி மகாகவி பாரதியாரின் சிலையை திறந்து வைத்தார். பின்னர் பாரதியாரின் சிலைக்கு பலரும் மாலை அணிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம், மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, மண்டல அலுவலர் நவேந்திரன், மாமன்ற உறுப்பினர் சரண்யா கலைவாணன், திருவொற்றியூர் நல சங்க நிர்வாகிகள் தொழிலதிபர் ஜி.வரதராஜன், என்.துரைராஜ், குரு.சுப்பிரமணி, எம்.மதியழகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க நிர்வாகி ஆர்.சோலையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.