Close
செப்டம்பர் 20, 2024 7:02 காலை

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு தடை நீங்கியதை புதுக்கோட்டையில் கொண்டாடிய திமுக கூட்டணி கட்சியினர்

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை  ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு இயற்றிய அவரச சட்டம் செல்லும் என்றும் உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு  அதிரடி தீர்ப்பு வழங்கியதை  வரவேற்று தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை பகுதியில் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றவை. இதுதவிர சில மாவட்டங்களில் கோவில் விழாக்களையொட்டியும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது.

தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருந்து வரும் நிலையில், இந்த போட்டிகளின்போது காளைகள் துன்புறுத்தப் படுவதாக கூறி விலங்குகள் நல அமைப்பான பீட்டா வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதனை அடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப் பட்டதை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் 2017 -ஆம் ஆண்டு இளைஞர்கள் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் நடத்த போராட்டமானது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.

அந்த பேராட்டத்தை அடுத்து, அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வந்தார். இந்த சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து 2017ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு சட்டம் என்ற பெயரில் நிரந்தரச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜல்லிகட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

ஜல்லிக்கட்டு மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது. அதேபோல, காளைகளுக்கும் உடல்ரீதியாக கடுமையான தாக்கங்களை விளைவிக்கிறது. காளைகள் ஜல்லிக்கட்டில் ஓட விரும்புவது இல்லை, அவை கட்டாயப்படுத்தப்படுகின்றன.

எனவே, இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு கடந்த 5 ஆண்டு களாக கள ஆய்வு செய்து சேகரித்து கொடுத்துள்ள தரவுகள், ஆதாரங்கள், அறிக்கைகளை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஜல்லிக்கட்டு என்பது ஒரு கொடூரமான விளையாட்டு” என்று பீட்டா அமைப்பு தனது வாதத்தை முன்வைத்தது.

இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23 – ஆம் தேதி விசாரிக்க தொடங்கியது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட அரசியல் சாசன அமர்வு, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 12- ஆம் தேதி ஒத்தி வைத்தது.

இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.வி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று வழங்கியது.

விதிகளை மீறவில்லை:அப்போது வழக்கு தொடர்பாக தீர்ப்பினை வாசித்த நீதிபதிகள், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை. ஜல்லிகட்டு போட்டிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன.  தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் அரசியல் சாசன பிரிவு 14 மற்றும் 21 ஆகிய அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட எந்த விதிமுறைகளையும் மீறவில்லை சட்ட விதிகளுக்கு உள்பட்டே உருவாக்கப்பட்டுள்ளது.

ஜல்லிகட்டினை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த பிறகு நீதிமன்றம் அதில் தலையிட முடியாது. ஜல்லிக்கட்டு பாரம்பரியம், கலாசாரத்தோடு ஒன்றிணைந்தது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாசாரத்தோடு ஒன்றிணைந்தது என தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஜல்லிகட்டை அனுமதிக்கும் தமிழ்நாட்டு அரசின் அவசர சட்டம் செல்லும். ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம் என்றாலும் கூட விளையாட்டின்போது நேரும் துன்புறுத்தல்களைத் தவிர்க்க உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்துடன் தீர்ப்பு:இந்த வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்தை வழங்கினர். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது போன்ற அமர்வுகளில் ஒருசில நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்குவது வழக்கம்.

ஆனால் ஜல்லிக்கட்டு தீர்ப்பில் 5 நீதிபதிகளும் ஒரே கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக் கதாகும்.

இந்த தீர்ப்பு வெளியானதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட உள்பட தமிழகம் முழுவதும் மக்கள் இனிப்புகள் வழங்கி பட்டாசு  வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

புதுக்கோட்டையில்  திமுக மற்றும் சிபிஎம் -எம்எல்ஏ -க்கள் கொண்டாட்டம்

திமுக சார்பில் மாவட்ட செயலாளர் கே.கே. செல்லப்பாண் டியன் தலைமையில் எம்எல்ஏ -க்கள் மருத்துவர் வை. முத்துராஜா  மற்றும் எம். சின்னத்துரை, நகர திமுக செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் புதிய பேருந்து நிலையம் முன்பு அலங்கரிக்கப்பட்ட காளைகளை ஊர்வலமாக அழைத்துச் சென்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

புதுகை காளைமாட்டு சிலையில் அதிமுகவினர் கொண்டாட்டம்..

புதுக்கோட்டை
காளைமாட்டு சிலை அருகே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

நகரச்செயலர்கள் க.பாஸ்கர், எஸ்ஏஎஸ். சேட்(எ) அப்துல்ரகுமான் ஆகியோர் தலைமையில் மாவட்ட வர்த்தகர் அணி துணைத்தலைவர் அப்பு(எ) கனகசபை, நிர்வாகிகள் க. மாரிமுத்து,  ஜீவாசெல்வராஜ், புரு. கிருஷ்ணகுமார், பாரத், கணேசன் உள்பட திரளானோர் பங்கேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top