Close
நவம்பர் 22, 2024 5:54 காலை

புத்தகம் அறிவோம்… கல்விச் சிந்தனைகள்-மகாத்மா காந்தி

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- கல்வி சிந்தனை

“கல்விச் சிந்தனைகள்-மகாத்மா காந்தி” என்ற இந்த நூல் சென்னையில் உள்ள காந்தி கல்வி நிலையத்தின் தலைவரும், புதுடெல்லி மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தின் செயலரும், “சர்வோதயம் பேசுகிறது” இதழின் ஆசிரியருமான சிறந்த காந்தியவாதியுமாகிய அ.அண்ணாமலை  தொகுத்த, மகாத்மா காந்தி பல்வேறு சமயங்களில் கல்வி குறித்து அவர் பேசிய, எழுதிய கருத்துகளின் தொகுப்பு இது.

பாரதி புத்தகாலயத்தின் ஒரு அங்கமான’ புக்ஸ் ஃபார் சில்ரன்’, இளையோர்களுக்காக இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து இந்த நூலை வெளியிட்டுள்ளது. 48 கட்டுரைகள் இந்த நூலில் உள்ளது. பெரும்பாலான கட்டுரைகள் ஹரிஜன், யங் இந்தியா, நவஜீவன் பத்திரிக்கையில் எழுதியவைகள்.

மேலும் காந்தியடிகள், பல்வேறு இடங்களில் ஆற்றிய உரைகளும் சேர்க்கப்பட்டுள்ளது. கல்வியாளர் ச.மாடசாமி எழுதிய ‘ காந்தியின் வகுப்பறை,’ என்ற கட்டுரையில் ‘குறைவான புத்தகம், சிறந்த கல்வி’ என்பது காந்தியின் கோட்பாடு என்று குறிப்பிடுவதோடு, மாணவன்தான் வசிக்கும் சூழலைவிட்டு விலகித் தனித்துப்போகாத கல்வி, உடல் உழைப்போடு கூடிய கல்வி, புத்தகச் சுமையற்ற கல்வி, குழுவாய் இணைந்து கற்கும் கல்வி, செயல்பாடுகள் நிறைந்த கல்வி, கைத்தொழில் பயிற்றுவிக்கும் கல்வி, மாணவர்களின் பன்முகத் திறனுக்கு மதிப்பளிக்கும் கல்வி (பக்.13) என்று காந்தியக் கல்வியின் அடிப்படைகளை பட்டியலிடுகிறார்.

நூல் தொகுப்பாளர் அண்ணாமலை  காந்தியின் கல்விச் சிந்தனைகளைப் பற்றி’ கற்பதும் கற்பிப்பதும் இனிமையான அனுபவமாக இருக்க வேண்டும்’ என்ற தலைப்பிலான அவரின் கட்டுரையில், ‘உடல், உள்ளம், ஆன்மா, மூன்றும் ஒருசேர வளரும் வாய்ப்பை நம்முடைய கல்வித்திட்டம் ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல ஆரம்பக் கல்வி நிச்சயமாக தாய்மொழி மூலமாகத் தான் இருக்க வேண்டும். ஆங்கில வழிக்கல்வி நம் அடிப்படையானதை சமூகக் கட்டுமானங்களை தகர்த்து எறிந்துவிடும் என்பதை அன்றே நமக்கு எச்சரித்தார்.

ஆங்கில வழிக்கல்வி என்னவெல்லாம் செய்யும் என்பதை இப்போது நாம் நிதர்சனமாகக் காண்கிறோம். அதேபோல ஆசிரியர்கள், தங்களுடைய ஆளுமையால் மாணவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக வாழ்ந்து தங்களுடைய பணியை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பினார்’ (பக்.17) என்று காந்தியின் கல்விச் சிந்தனைகளின் அப்படைகளைக் குறிப்பிடுகிறார். ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்று இது.

…பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top