Close
ஏப்ரல் 10, 2025 10:19 மணி

புத்தகம் அறிவோம்… ஞாலம் போற்றும் பாலம் அய்யா..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்.. பாலம் கலியாணசுந்தரம்

“பாலம்”கலியாணசுந்தரம் உலகறிந்த சாதாரண மனிதர். “உதவுவோருக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் இடையே இணைப்புப் பாலமாக ” செயல்படும் ‘பாலம்’ அமைப்பை நிருவி , சமூகப் பணியாற்றி வருவதால் தற்போது ” பாலம் கலியாணசுந்தரம்” என்று அழைக்கப்படுகிறார்.

10.5.1940 -ல் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் கீழ கருவேலங்குளம் கிராமத்தில் பிறந்த ஐயா கலியாணசுந்தரம், திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள அருள்மிகு குமரகுருபர சுவாமிகள் கல்லூரியில் 35 ஆண்டுகள் நூலகராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1953ல் தனது 14 வயதில் பிறர்க்கு உதவும் பணியைத் தொடங்கியவர் இன்றும் தொடர்கிறார்.

திருமணம் செய்துகொள்ளாமல் தான் சம்பாதித்த யாவற்றையும் தானமாகக் கொடுத்துவிட்டு, தன் பாட்டிற்கு உணவு விடுதியில் ‘சர்வராக’ வேலை பார்த்தவர். இவருடைய வாழ்க்கையை மாற்றியதில் மூவருக்கு பங்குண்டு;அவர்கள் தமிழ்வாணன், காமராஜர் , ஆனந்தவிகடன் முன்னாள் ஆசிரியர் பாலசுப்பிர மணியன் ஆவர். இயல்பாகவே இவருக்கு கீச்சுக்குரல். பெண் பேசுவது போன்று இருக்கும். அதனால் பலரின் கேலிக்குள்ளாகிய இவர் 12 வயதில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த சூழலில் தமிழ்வாணனைச் சந்தித்திருக்கிறார்.

அப்போது “தம்பி ஒரு மனிதன் வாழ்க்கை என்பது அவன் எப்படிப் பேசுகிறான் என்பதைப் பொறுத்ததல்ல. அவனைப் பற்றி மற்றவர்கள் எப்படிப் பேசுகிறார்கள் என்பதைப் பொருத்த தாகும். எதைக் குறைவாக நினைத்துக் கொள்கிறா யோ அதையே நிறைவா நினைத்துக்கொள்ளேன்.

உலகின் மாபெரும் இசைஞானி பீத்தோவானுக்கு காது கேட்காது. உலகையே வியக்க வைத்த ஹெலன் கெல்லருக்கு கண், காது, வாய் ஊனமுற்றவர். உலகையே ஆட்டிவைத்த ஹிட்லர் குள்ளமானவர். ‘பாரடைஸ் லாஸ்ட்’ கவிதை மூலம் பலரையும் திரும்ப வைத்த மில்டன் பார்வையற்றவர்.

இவர்களெல்லாம் உலகில் சாதனை நிகழ்த்தவில்லையா? உன் குரலைப் பற்றிக்கவலைப்படக்கூடாது. உன்னைப் பற்றி உலகமே பேச உள்ளது… (என்ன ஒரு தீர்க்கதரிசனம்) என்று பேசி, அவரை தற்கொலைக்கு போவதிலிருந்து தடுத்து, உலகிற்கு ஒரு மாபெரும் கொடையாளரைத் தந்த பெருமை கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணனையே சாரும்.

1963 சீனப்போரின்போது மாணவராயிருந்த பாலம் ஐயா தான் அணிந்திருந்த நகைகளையெல்லாம் போர் நிவாரண நிதிக்கு காமராஜரிடம் வழங்கிய போது அவரை மேடையேற்றி. அருகில் நாற்காலி போட்டு அமரவைத்து பெருமைபடுத்தி யிருக்கிறார் காமராஜர்.

அதைக் செய்தியாக்க காமராஜர் வேண்டுகோளை ஏற்று ஆனந்தவிகடன் ஆசிரியரைச் சந்திக்க, “இது உனது பெற்றோர்கள் உனக்குத் தந்ததை நீ கொடுப்பது பெரிதல்ல. ஆனால் உன் சம்பாத்தியத்தில் கொடுப்பது தான் பெரிது. அதைச் செய். செய்தி போடுகிறேன் என்று சொல்ல. அதுவே தான் சம்பாதித்ததையெல்லாம் தானமாகக் கொடுக்க வித்திட்டது.

பின்னர் ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் வந்த செய்தியைப் பார்த்து ரஜினிகாந்த் மனைவி இவரை அப்பாவாக தத்தெடுத் துக்கொண்டதும், அவர்கள் தந்த சௌகர்யம் தனக்கு ஒவ்வாததால் பின்னர் சாதாரண இல்லத்திற்கு வந்திருக் கிறார்.

இவருக்கு கல்லூரி ஆசிரியர் ஆகவேண்டும் என்பதுதான் லட்சியம். ஆனால் ‘உன் குரல் ஆசிரியப் பணிக்கு சரியாக வராது. குறைவாகப் பேசும் நூலகர் பணிக்கு போ’ என்று சொல்லி அந்தப் பணிக்கு அழைத்துச் சென்றவர் மதுரை தியாகராஜர் கல்லூரியில் பணியாற்றிய நூலகர் திருமலை முத்துசாமி அவர்கள்.
35 ஆண்டுகள் வேலை பார்த்து கிடைத்த ஊதியம் ரூ 30,00,000 குடும்பத்தில் தன் பங்கிற்கு கிடைத்த ரூ. 50,00,000 மதிப்புடைய சொத்துக்கள், ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர் என்ற அமெரிக்க விருதுக்கு கிடைத்த 30 கோடி யாவற்றையும் மக்கள் சேவைக்கே வழங்கியுள்ளார்கள்.

இப்படி பல்வேறு அறிய செய்திகள் தாங்கியுள்ள “ஞாலம் போற்றும் பாலம் ஐயா” நூல் திருச்சியில் வழங்கறிஞராக பணியாற்றும் சீ.ஜெயராமன் எழுதியது. இது இவரின் முதல் நூல். பாலம் ஐயா வாழ்க்கை வரலாற்றைத் தாங்கிய முதல்நூல். பாலம் ஐயா வோடு நெருங்கிப் பழகியவர். களப்பயணம் செய்து தகவல்களைத் திரட்டியே இந்த நூலை எழுதியிருக்கிறார். இப்படி ஒரு நூலைத் தந்தற்காக அவருக்கு நன்றி சொல்லவேண்டும்.

என்றும் இன்பமுடன் வாழ பாலம் ஐயா சொல்வது,
1.பணத்தின் மீது பேராசை கொள்ளாதிருத்தல்.
2.பத்தில் ஒன்றை தானம் செய்தல்.
3.தினமும் ஓர் உயிர்க்கு நன்மை செய்தல். இதை மனதில் இருத்திச் செயல்பட்டால் என்றும் இன்பமுடன் வாழலாம். வெளியீடு:ஜெயகீதா அச்சகம்,திருச்சி.

…பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top