Close
நவம்பர் 22, 2024 3:14 காலை

போராளிகளின் முகவரி சேகுவேரா…

இங்கிலாந்திலிருந்து சங்கர்

போராளிகளின் முகவரி சேகுவேரா

“எனது வீடு என்பது எனது இரு கால்கள்’’ என்று பயணத்தின் மேல் தீராக் காதல் கொண்ட, உலகையே சுற்றிப் பார்க்க விரும்பும் பயணிகளுக்கான முன்னோடியாக, பயணம் செய்யும் இடத்தின் மண்ணையும் மக்களையும் நேசித்த, தன்னுடைய பயணங்களில் இருந்தே ஒரு போராளியாக உருவெடுத்த சேகுவேரா சே என அன்போடு அழைக்கப் பட்டார்.

ஒரு அரசியல் மாற்றத்தை அடைவதற்கான ஒரு தேர்ந்த முகவராக, கொரில்லா போர்முறையின் மீதான நம்பிக்கை மற்றும் அவரது தலைமையின் மூலம் பல கோடி கணக்கானவர்களின் மனதைக் கொள்ளைக் கொண்ட சேகுவேரா, அபிமானிகளையும், எதிரிகளையும் ஒரே மாதிரியாகக் கவர்ந்த ஆளுமையாகவே இருந்தார்.

சே எனும் அற்புதப் போராளியின் புகழ் அவர் வாழ்ந்த நிலங்களை தாண்டி உலகின் திசையெங்கும் அறியப்பட்ட காரணம் அந்த மகத்தான மனிதரின் வாழ்க்கையும் அதில் படிந்திருக்கும் ரத்தக் கறையுடனான உண்மைகளும் தான். லத்தீன் அமெரிக்கப் புரட்சியில் அமெரிக்க ஏகாதிபத்தியத் தை எதிர்த்து கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவின் தலைமையை உருவாக்க உறுதுணையாக சே ஏந்திய துப்பாக்கியின் தோட்டாக்கள் தான் புரட்சியின் வடிவமாக அவரை உலகிற்கு அடையாளம் காட்டியது.

பள்ளிப்பருவத்தில் ஒரு நாளிதழில் சேகுவேரா பற்றிய துணுக்கை வாசிக்க நேர்ந்தது. சிலரை வாசித்தவுடன் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு வரும் என்பார்களே- அதுப்போலவே இந்த புரட்சியாளன் மீது ஓர் ஈர்ப்பு. அதன் பிறகு இந்த வரலாற்று நாயகனின் வாழ்வை, அவரது போராட்ட வரலாற்றை தேட ஆரம்பித்தேன்.

அவரைப் பற்றிய புத்தகங்கள், மற்றும் ஒளிப்பதிவுகள் என தொடர்ந்த தேடலின் விளைவு அவரை பற்றி ஒரு புத்தகம் எழுத தூண்டியது. இன்று “சே”வை நேசிக்கும் பலரில் நானும் ஒருவன்.

பேசப்பட வேண்டிய புரட்சியாளன்.சேகுவேரா.., சட்டைகள், தொப்பிகள் மற்றும் பிற பொருட்களின் மீது முத்திரையாக குத்தப்பட்டு உலகம் முழுவதும் வலம் வருகிறார். மக்கள் அவரின் அரசியலை புரிந்து கொண்டுதான், ஒரு பதக்க முத்திரையாக, ஆடை அணிகலனாக அணிகிறார்களா என்பது இங்கே கேள்விக்குறி. இயக்கங்கள் சில.., சேகுவேராவை ஒரு ஐ கானாக மட்டுமே பயன்படுத்தி கொண்டு அவர் சொல்லாத அரசியலை பண்ணி கொண்டு இருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது..,

சே குவேரா ஒரு கம்யூனிச மார்க்ஸியவாதி கூடவே முதலாளித்துவ எதிர்ப்புவாதி என்கிற நிலைப்பாட்டை மீறி, ஒரு வியாபார உக்தியில் அவரது பிம்பம் பயன்படுத்தப் படுவது இயல்பை தாண்டிய முரண் நகையாக எனக்கு படுகிறது.

எல்லை என்பது நிலங்களில் தான்… மனங்களில் இல்லை என்பதை தன் வாழ்நாள் முழுவதும் நிரூபித்தவர் சே.

‘வீடு திறந்த வானமாக இருக்கும் … ஒவ்வொரு கொரில்லா போராளியும் ஒரு யோசனையைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல, அந்த யோசனையை யதார்த்தமாக்குவதற்கும் இறக்கத் தயாராக இருக்கிறார்கள்’ என்பதை உறுதி செய்தவர் சேகுவேரா. மரணத்தையும் இன்முகத்தோடு வரவேற்ற மாவீரன். மறுமலர்ச்சியின் மறுஉருவம். புரட்சி வரலாற்றில் என்றும் நினைவில் கொள்ளப்பட வேண்டியவர். சேகுவே ராவின் பிறந்த நாள் 14  ஜூன் 1928.

…இங்கிலாந்திலிருந்து சங்கர்🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top