Close
மே 20, 2024 8:14 மணி

ரூ.33 லட்சம் வாடகை நிலுவை: அரசியல் பிரமுகரின் ஐஸ் பேக்டரிக்கு சீல்

சென்னை

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் வாடகை பாக்கியை கட்டாததால் வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்ட ஐஸ் பேக்டரி.

வாடகை பாக்கி ரூ. 33 லட்சம்  செலுத்தாததால் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இயங்கி வந்த அரசியல் பிரமுகரின் ஐஸ் பேக்டரிக்கு வெள்ளிக்கிழமை சென்னை துறைமுக அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை துறைமுக ஆணையத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் காசிமேடு மீன் பிடித் துறைமுகத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஐஸ் பேக்டரிகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு சுமித்ரா ஏஜென்சீஸ் என்ற பெயரில் ஐஸ் பேக்டரி ஒன்று இயங்கி வருகிறது.  இதன் உரிமையாளர் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி என கூறப்படுகிறது.
இந்த நிறுவனம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் துறைமுக நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய வாடகை தொகையை செலுத்தவில்லை. மொத்த வாடகை பாக்கியாக ரூபாய் 38 லட்சம் இருக்கிறது.
வாடகையை வசூலிக்க பலமுறை முயற்சி செய்தும் வாடகை பாக்கியை செலுத்தாததால் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி சுமித்ரா ஏஜென்சி நடத்தி வந்த ஐஸ் பேக்டரிக்கு சீல் வைக்க சென்னை துறைமுக அதிகாரிகள் வந்தனர். இதனையடுத்து மொத்த வாடகை பாக்கியான ரூ. 38 லட்சத்தில் ரூ 5 லட்சம் மட்டும் உடனடியாக சுமித்ரா ஏஜென்சிஸ் நிறுவனம் செலுத்தியது.
மேலும் ஒரு மாதத்திற்குள் மீதமுள்ள ரூ. 33 லட்சம் பாக்கித் தொகையை கட்டி விடுவதாகவும் சுமித்ரா ஏஜென்சிஸ் நிறுவனம் உறுதி அளித்ததையடுத்து அப்போது சீல் வைக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது.
ஆனால் ஏற்கெனவே உறுதி அளித்தபடி கெடு விதிக்கப்பட்ட நாளையும் தாண்டி வாடகை பாக்கி செலுத்தாததால் காசிமேடு மீன்பிடி துறைமுக மேலாண்மை குழு தலைவர் துறை மாணிக்கம் தலைமையில் போலீசார் முன்னிலையில் சுமித்ரா ஏஜென்சிஸ் நடத்தி வந்த ஐஸ் பேக்டரிக்கு வெள்ளிக்கிழமை சீல் வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த சுமித்ரா ஏஜென்சிஸ் நிறுவன மேலாளர் அரசியல் கட்சியின் பிரமுகர்கள், வழக்குரைஞர்கள் அங்கு வந்து சீலை அகற்றவும் வாடகை பாக்கியை செலுத்திட மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த துறைமுக அதிகாரிகள் முழு பாக்கி தொகையையும் செலுத்திய பிறகு சீலை அகற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறி சென்றனர். அரசியல் பிரமுகரின் ஐஸ் பேக்டரிக்கு  சீல் வைத்த சம்பவத்தால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top