Close
நவம்பர் 22, 2024 4:04 காலை

மாவட்டத் திட்டமிடும் குழுத் தேர்தல்: திமுக உறுப்பினர்கள் 12 பேரும் வெற்றி

புதுக்கோட்டை

மாவட்டத் திட்டமிடும் குழுத் தேர்தல்- 12 திமுக உறுப்பினர்களும் வெற்றி

மாவட்டத் திட்டமிடும் குழுத் தேர்தல் போட்டியிட்ட  12 திமுக உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத் திட்டமிடும் குழுவுக்கு 12 பேரைத் தேர்வு செய்யும் தேர்தலில், திமுக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்டத் திட்டமிடும் குழுவில் உள்ள 12 இடங்களில், 2 இடங்கள் நகராட்சி மற்றும் பேரூராட்சி களுக்கானது. மீதமுள்ள 10 இடங்கள் மாவட்ட ஊராட்சிக் குழுவுக்கானது.
நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கான இரு இடங்களுக்கு புதுக்கோட்டை நகர்மன்ற 9 -ஆவது வார்டு திமுக உறுப்பினர் டி. செந்தாமரை பாலு, பொன்னமராவதி பேரூராட்சி 3-ஆவது வார்டு உறுப்பினர் கா. புவனேஸ்வரி ஆகியோர் மட்டுமே வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இதனால் இவர்கள் இருவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 10 இடங்கள் மாவட்ட ஊராட்சிக் குழுவில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும். இவர்களில் திமுக தரப்பில் 10 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக உறுப்பினர்கள் 3 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இதனால், வாக்குப்பதிவு உறுதியாகி, ஏற்கெனவே அறிவிக்கப் பட்டிருந்தபடி, மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கியது. மாவட்ட ஊராட்சிக் குழுவின் உறுப்பினர்கள் 22 பேரும் வாக்களித்தனர். பிற்பகல் 3 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில், திமுக தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்த  செ. உஷா, சு. கலைவாணி, மே. சரிதா, த. சாந்தி , த. செல்வம், கா. பாக்கியலட்சுமி, க. ராமகிருஷ்ணன், கா. ராமநாதன், செ. ராஜேஸ்வரி, நா. ஸ்டாலின் ஆகிய 10 பேருக்கும் 15 வாக்குகளும், அதிமுக வேட்பாளர்கள் இ.எஸ். ராஜேந்திரன், ஆர்.கே. சிவசாமி, சோ. பாண்டியன் ஆகிய 3 பேருக்கும் தலா 7 வாக்குகளும் பதிவாகியிருந்தன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top