Close
நவம்பர் 24, 2024 11:18 மணி

புத்தகம் அறிவோம்… கொடை விளக்கு…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- கொடை விளக்கு

செட்டிநாடு “என்று சொன்னால் இருவர் நினைவுக்கு வருவார்கள். ஒருவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கண்ட  அண்ணாமலைச் செட்டியார். இரண்டாமவர் அழகப்பா பல்கலைக்கழகம் தோன்றக் காரணமாயிருந்த வள்ளல் அழகப்பா செட்டியார்.

இருவரும் தமிழகத்தின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர்கள்.அழகப்பா செட்டியார் பெயர் முன் “வள்ளல்” என்ற வார்த்தை தொக்கி நிற்கும். எல்லோரும் அவரை வள்ளல் அழகப்பா செட்டியார் என்றுதான் அழைப்பார்கள்.

வெறும் 48 ஆண்டுகளே வாழ்ந்த (06.04.1909-05-04.1957) அழகப்பர் வழங்கிய கொடைகள் ஏராளம். “பணம் சேர்க்கின்ற ஒரு வழியே பலருக்குத் தெரியும். சேர்த்த பணத்தை எல்லார்க்கும் பகுத்துக் கொடுக்கின்ற மறுவழி ஒருவர்க்கும் தெரியாது. இரு வழியும் தெரிந்தவர் அழகப்பா “என்று ராஜாஜியால் பாராட்டுப் பெற்றவர் அழகப்பர். (பக்.12).

வள்ளல் அழகப்பா செட்டியாரின் பெருமைகளை, கொடைத்தன்மையை, வாழ்வியல் நெறியை செய்யுள் வடிவில், தமிழ்செம்மல், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர், அமரர் வ.சுப.மாணிக்கம் அவர்கள் யாத்த நூல்தான் இந்த” கொடை விளக்கு.”

வள்ளல் அழகப்பரின் மறைவில், “மக்கள் புலம்பல்” என்று தொடங்கி,அழகப்பர் கொடைச் சிறப்பு,அழகப்பர் கொடைகள்,அழகப்பர் வாழ்வியல், அழகப்பர் பெருமைகள்,
அழகப்பர் அறிவுரை,அழகப்பர் கனவுகள்,அழகப்பர் வாழ்த்து, உலகக் கடன் என்று ஒன்பது தலைப்புகளில் செய்யுள் வடிக்கப்பட்டுள்ளது.

பாரத ரத்தினங்கள் ராஜாஜி , நேரு, டாக்டர் ராதாகிருஷ்ணன், சர் சி.வி.ராமன், மோ.விசுவேசரய்யா ஆகியோர் வள்ளல் அழகப்பாவை பாராட்டியதை,” பாரத ரத்தினங்கள் பாராட்டுஞ் செந்தமிழா” என்று குறிப்பிடுகிறார் வ.சுப.. அழகப்பர் கொடைகள் என்று ஒரு நீண்ட பட்டியலை 12 பக்கங்களுக்கு விரித்திருக்கிறார் வ.சுப.

அழகப்பா கல்லூரி, அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, அழகப்பா பொறியியற் கல்லூரி, அழகப்பா மகளிர் கல்லூரி, அழகப்பா பல் தொழிற் கல்லூரி, அழகப்பா உடற்பயிற்சிக் கல்லூரி, அழகப்பா நகர் பல்தொழிற் கல்லூரி, அழகப்பா பல்தொழில் நுணுக்கக் கல்லூரி (சென்னை) மற்றும் மாண்டிசோரிப்பள்ளி தொடங்கியது.

மின்வேதியல் ஆராய்ச்சிக் கழகம் கொண்டு வந்தது மற்றும் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் அழகப்பர் செய்த எண்ணிலடங்கா கொடைகள் யாவற்றையும் ஒன்றுவிடாமல் பட்டியலிட்டிருக்கிறார் வ.சுப.

64 பக்கமே உள்ள இந்த நூலின் மூலம் வள்ளல் அழகப்பா செட்டியாரை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
கோவிலூர் மடத்தைச் சேர்ந்த கலாசேத்திர பப்ளிகேஷன்ஸ் இந்த நூலை வெளியிட்டுள்ளது. 04565-236846.

# பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top