Close
மே 20, 2024 4:53 மணி

புத்தகம் அறிவோம்… இந்து மத உபாக்கியானம்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவேம்- இந்துமத உபாக்கியானம்

“எல்லோரும் ஏற்கும் தர்மநெறிக்கு நான் எப்போதும் இந்தியாவையே இனம் காட்டுவேன். ஓர் உயர்ந்த லட்சியமிக்க வாழ்வுக்காக மனிதர்கள் கற்க வேண்டிய இலக்கியங்கள், இதிகாசங்கள் எங்கே இருக்கின்றன என்று என்னைக் கேட்டால் இந்தியா இருக்கும் திசையையே என் கைகள் காட்டும்.” என்று ஜெர்மானிய இந்தியவியல் அறிஞர் மாக்ஸ்முல்லர் குறிப்பிடுவார்.

இந்திய தர்மசாஸ்திரங்களில் பெரும்பாலோர் அறிந்தது இரண்டு இதிகாசங்கள் இராமாயணம், மகாபாரதம். இந்தியர்களை இணைக்கும் பாலமாக அது விளங்குகிறது. “இராமாயணம், மகாபாரதம் இரண்டும் வெறும் கற்பனைக் கதையல்ல அவைகள் நமக்கு வாழ்வியல் நெறிகளை போதிக்கும் இலக்கியங்கள்” என்பார் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதத்தில்.

பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம் தூர்தர்ஷனில், 1989-90 -களில் தொடராக ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தபோது முக்கியமான இந்திய நகரங்களில் வழக்கமான போக்குவரத்து நெரிசல் அந்த குறிப்பிட்ட நேரத்தில் குறைந்துவிடும் என்று அன்றைய பத்திரிக்கைச் செய்திகள் சொல்கிறது. பா.ஜ.க. செல்வாக்கு பெருவதற்கு இந்த இரண்டு இதிகாசத் தொடர்கள் ஒரு முக்கிய காரணம் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

ஏ. கிருஷ்ணசாமி எழுதிய “இந்துமத உபாக்கியானம்” என்ற இந்த நூலின் பெயரைப் பார்த்தவுடன் இது இந்து மத தத்துவ விளக்கம் என்று கருத வேண்டாம். மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமைகள், செய்ய வேண்டிய நற்காரியங்கள் இவற்றைக் குறிப்பிட்டு அதற்கேற்ப இராமாயண, மகாபாரத கதைகளை எடுத்துச் சொல்லி சிறுவர் முதல் பெரியவர் வரை எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள கதை நூல்தான் இது.

குடும்பக் கடமைகள்,தரும விஷயம்,அ தர்ம விஷயம்,தர்ம அதர்ம விஷயங்களை அறிவது, மதவிஷயம்,ஆசாரியர்கள் சரிதை என்று ஆறு தலைப்புகளில் இந்நூல் அமைத்துள்ளது.

குடும்பக் கடமைகள் என்ற தலைப்பில் புத்திரர் கடமை,விருந்திடல், மனைவியின் கடமை ,சகோதர பாசம், சகோதர் கடமை என்ற உபதலைப்புகளில் அதற்கேற்ப மகாபாரத, இராமயண கதைகளை தேர்ந்தெடுத்து எழுதியுள்ளார் ஆசிரியர்.

இராமன் வனவாசம் சென்ற நிகழ்வை புத்திரர் கடமையில் ஒன்றாக இந்நூலில் குறிப்பிடப்படுகிறது.வாழ்க்கையில் வெற்றிபெற விடாமுயற்சி அவசியம் என்று சுட்டிக்காட்டி அதற்கேற்ப இராமயணத்திலிருந்தும், பாகவதத்திலிருந்தும் மேற்கோள் கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது.

துன்பம் கண்டு இரங்குதலுக்கு உதாரணமாக , தோல்வியுற்ற இராவணனை கொல்லாமல் “இன்று போய் நாளை வா” என்று சொன்ன இராமனின் செயலை, உதாரணமாகக் காட்டப் படுகிறது. அதேபோல் கோபத்தினால் வரும் கேடு,கர்வத் தால் உண்டாகும் கேடு,மதுபானத்தின் தீங்குகள், எவர் மனத்தை யும் புண்படுத்தலாகாது என்பனவற்றிற்கும் இராமயணத்திலி ருந்தும் மகாபாரதத்திலிருந்து கதைகள் எடுத்தாளப் பட்டிருக்கிறது.

ஒவ்வொரு கதையின் இறுதியில், பெற்றோரைக் காப்பது புத்திரர் கடமை, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்,விருந்துக்கு அழகு விருப்புடன் அளித்தல், தமையன் தந்தைக்கு சமம்; தம்பி பிள்ளைக்கு சமம் என்பன போன்ற நல் வாக்கியங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்துசமயத்திற்கு பெரும் பங்காற்றிய ஸ்ரீமத் சங்கராச்சாரி யார்,ஸ்ரீமத் ராமானுஜாசாரியர், ஸ்ரீமத் மத்வாசாரியர் ஆகியோரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறும் இந்நூலில் உள்ளது.

“நல்ல நூல்களை வெளியிடுவதில் தேர்ந்தவர்கள் அல்லயன்ஸ் கம்பெனியார் ” என்று தீரர் சத்தியமூர்த்தியால் பாராட்டப் பட்ட அல்லயன்ஸ் புத்தக நிறுவனம் 1908 -ல் இந்த நூலை முதலில் பதிப்பித்தது.தொடர்ந்து அதே நிறுவனத்தால் 58 பதிப்புகளை இந்நூல் கண்டுள்ளது. 5 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. 044-2464 1314.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top