Close
நவம்பர் 22, 2024 1:26 காலை

எல்டிடிஇ அமைப்புக்கு பால்ரஸ் கடத்திய வழக்கில் 6 பேருக்கு புதுகை நீதிமன்றம் சிறை தண்டனை

புதுக்கோட்டை

விடுதலைப்புலிகளுக்கு பால்ரஸ் கடத்திய வழக்கில் 6 பேருக்கு சிறை தண்டனை விதித்து புதுகை நீதிமன்றம் தீர்ப்பு

இலங்கை விடுதலைப் புலிகளுக்கு வெடிபொருள் தயாரிக்க 4.5 டன் பால்ரஸ் குண்டுகளை சேகரித்து இலங்கைக்கு கடத்த முயன்றதாக கியூ பிரிவு போலீஸார் தொடர்ந்த வழக்கில், இலங்கைத் தமிழர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு தலா ஒரு வருடம்  சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
கடந்த 2007ஆம் ஆண்டு திருச்சியை மையமாகக் கொண்டு இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் இலங்கையைச் சேர்ந்தவர்கள், சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 4.5 டன் பால்ரஸ் குண்டுகள், ரூ. 10 லட்சம் ரொக்கம், இரு சக்கர வாகனங்கள், படகு, கஞ்சா போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு ஏற்கெனவே தண்டனை விதிக்கப்பட்டது, இருவரின் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன, ஒருவர் உயிரிழந்துவிட்டார். இவ்வாறான நிலையில், 11 பேர் மீதான வழக்கு மட்டும் புதுக்கோட்டையிலுள்ள அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அரசுத் தரப்பில் வழக்குரைஞர் செந்தில்குமார் ஆஜரானார். வழக்கு விசாரணையின் நிறைவில் நீதிபதி ஏ.கே. பாபுலால் வெள்ளிக்கிழமை மாலை தீர்ப்பளித்தார். குற்றம்சாட்டப்பட்ட 6 பேரின் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.
இலங்கையைச் சேர்ந்த ரத்தினசிங்கம் மகன் அருள்சீலனுக்கு (46) ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதம், சென்னையைச் சேர்ந்த பரமசிவன் மகன் சுகுமாறனுக்கு (42) ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதம், சென்னையைச் சேர்ந்த தாமோதரன் மகன் சுகுமாருக்கு (52) ஒராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதம்,
சிவகங்கையைச் சேர்ந்த காளிமுத்து மகன் ஜெயராமன் (46) என்பவருக்கு 5 மாத சிறைத் தண்டனையும் 1500 ரூபாய் அபராதம், மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பாலமுருகனுக்கு (40) ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும், புதுக்கோட்டையில் பிறந்து பெரம்பலூரில் வசித்து வந்த துரைராஜன் மகன் ரமேஷ்குமாருக்கு ஒரு வருட சிறை தண்டனையும்  ரூ. 900 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top