Close
நவம்பர் 22, 2024 3:32 காலை

இந்தியாவில் 82 % மருத்துவர்களுக்கு மன அழுத்தம் உள்ளது: பேராசிரியர் டாக்டர் செல்வகுமார்

தமிழ்நாடு

தேசிய மருத்துவர்  தினத்தையொட்டி திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடிய பெண் மருத்துவர்கள்.

இந்தியாவில் 82 சதவீதம் மருத்துவர்களுக்கு மன அழுத்தம் உள்ளது என்றார் பேராசிரியர் டாக்டர் ஆர். செல்வகுமார்.
இந்தியாவில் 82 சதவீதம் மருத்துவர்களுக்கு மன அழுத்தம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது என சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி தடய அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் ஆர். செல்வகுமார் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தெரிவித்தார்.
இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தேசிய மருத்துவர் தின நிகழ்ச்சி திருவொற்றியூர் சுகம் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்க வடசென்னை மண்டல செயலாளர் டாக்டர்.பி. நெல்லையப்பர் தலைமை வகித்தார்.  சங்க நிர்வாகிகள் டாக்டர் பி.பாலகிருஷ்ணன், டாக்டர் ஏ.பி.மணிமாறன் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி தட.ய அறிவியல் துறை தலைவர் டாக்டர் ஆர்.செல்வகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது டாக்டர் செல்வகுமார் பேசியது:  முன்பெல்லாம் இளநிலை மருத்துவர்கள் தங்கள் தொடக்க காலத்தில் கிராமப்புறங்களில் சில ஆண்டுகள் மருத்துவப்  பணியாற்றுவார்கள்.  அப்போது அங்கு வசிக்கும் கிராம மக்கள் உடல்நல பிரச்னைகளோடு சொந்தப் பிரச்னைகளில் கூட மருத்துவரிடம் ஆலோசனை கேட்கும் அளவுக்கு மருத்துவர்களின் மீது பெரும் நம்பிக்கையை கொண்டிருந்தனர்.
ஆனால் சமீப காலமாக மருத்துவர்களை அச்சுறுத்தி தாக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றனர்.  இதற்குக் காரணம் எல்லா நோய்களையும் எல்லா நேரங்களிலும் மருத்துவர்கள் குணப்படுத்தி விடுவார்கள் என்ற அதீத நம்பிக்கை நோயாளிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் உள்ளது.
இதனால்தான் எதிர்பாராத விதமாக நோயாளிகள்  உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறும் போது மருத்துவர் களை தாக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதனை தவிர்க்க வேண்டும் எனில் நோயாளிகளிடம் நோயின் தாக்கம். குணப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், தனியார் மருத்துவமனை எனில் தோராயமாக செலவாகும் தொகை உள்ளிட்டவைகள் குறித்து நோயாளிடமும்,  அவர்களது உறவினர்களிடமும் தெளிவாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும்.
விசாரணைகளை எதிர்கொள்வதில் தயக்கம் கூடாது:
அசாதாரணமான சூழ்நிலையில் நோயாளிகளுக்கு பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில்,  தன் மீது தவறில்லாத நிலையில் விசாரணைகளை தயக்கமின்றி திறம்பட எதிர்கொள்ள வேண்டும்.
இது போன்ற சம்பவங்களில் பரபரப்பு செய்திகள் வெளியிடுவதை தவிர்த்து உண்மை தன்மை குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் விரிவாக விசாரித்து பத்திரிக்கையாளர்கள் செய்திகளை வெளியிட வேண்டும்.
மருத்துவர்களுக்கும்,பத்திரிக்கையாளர்களுக்கும் போதுமான  தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதே போல் காவல்துறை அதிகாரிகளும் உரிய விசாரணை களை கண்ணியத்துடன் மேற்கொண்டு தேவை ஏற்பட்டால் மட்டுமே அதற்குரிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
82 சதவீதம் பேருக்கு மன அழுத்தம்:
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்தியாவில் 65 சதவீத மருத்துவர்கள் மகிழ்ச்சியாக இல்லை.  82 சதவீத மருத்துவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள் ளனர். 61 சதவீதம் மருத்துவர்கள் தங்களது பிள்ளைகளை மருத்துவர்களாக்க விரும்பவில்லை என்பது போன்ற பல்வேறு உண்மைகள் தெரிய வந்துள்ளன.
ஐந்தரை ஆண்டுகள் தொடர்ச்சியாக மருத்துவ கல்வியை பயின்று எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர்கள் மேல் படிப்புகள் படிக்காமல் மருத்துவப் பணியாற்றுவது என்பது தொடர்ந்து சிக்கலாகி வருகிறது.
நாட்டு மக்கள் நலமாக இருக்க வேண்டும்  எனில் மருத்துவத்துறை நன்றாக இருக்க வேண்டும். கொரோனா பெருந் தொற்று காலத்தில் மருத்துவத்துறை சிறப்பாக இயங்கியதால் தான் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவை பேரழிவிலிருந்து காப்பாற்ற முடிந்தது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
மருத்துவ கவனக்குறைவு என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ளது. எனவே ஓரிரு சம்பவங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு மருத்துவர் களை அவமதிக்காமல் அச்சுறுத்தாமல் அவர்களின் சேவையை அங்கீகரிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றார் செல்வகுமார் .
நிகழ்ச்சியில் சுகம் மருத்துவமனை தலைவர் டி.பி.டி. சத்திய குமார்,  மருத்துவமனை இயக்குனர் ஷீலா சத்தியகுமார்,  மருத்துவர்கள் செல்லமாரியப்பன், கிருபானந்தம், ஆனந்த பார்வதி, அன்புச்செல்வன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top