புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் வரும் ஜூலை 14 ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை 48 -ஆம் ஆண்டு கம்பன் விழா 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை நகர்மன்றத்தில்(டவுன்ஹால்) ஜூலை 14 -ஆம் தேதி மாலை நடைபெறும் தொடக்க விழாவுக்கு, அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் பொறுப்பாட்சியர் ராஜன் கே. நடராஜன் தலைமை வகிக்கிறார். மும்பை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். தமிழ்ச்செல்வன் விழாவை தொடங்கி வைத்துப் பேசுகிறார்.
தொடர்ந்து, கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் தலைமையில் ‘கம்பன் யார்’ என்ற தலைப்பில் சுழலும் சொல்லரங்கம் நடைபெறுகிறது.
சனிக்கிழமை (ஜூலை 15) மாலை 5.30 மணிக்கு, ‘கவிச்சக்கரவர்த்தி கம்பர்’ என்ற திரைப்படம் திரையிடப் படுகிறது. தொடர்ந்து, இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கு கம்பன் மாமணி என்ற விருது வழங்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அரங்க மகாதேவன், ஆர். சுரேஷ்குமார் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) இரவு 8 மணிக்கு மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தலைமையில் நடைபெறும் நிகழ்வில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உரையாற்றுகிறார். மாநிலங்களவை திமுக உறுப்பிநப் எம்.எம். அப்துல்லா உள்ளிட்டோர் கலந்கு கொள்கின்றனர்.
திங்கள்கிழமை (ஜூலை 17) மாலை 5.30 மணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் உரையாற்றுகிறார்.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) மாலை 5.30 மணிக்கு ‘கம்பன் எனும் இசைப்புலவன்’ என்ற தலைப்பில் ராஜபாளையம் உமாசங்கர் இசை உரை நிகழ்த்துகிறார்.
புதன்கிழமை (ஜூலை 19) மாலை எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா தலைமையில் ‘கம்பனில் காத்திருப்பதே சுகம்’ என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறுகிறது.
தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் ‘சிறியன சிந்தியாதான்’ என்ற தலைப்பில் மருத்துவர் ஜெய ராஜமூர்த்தி பேசுகிறார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ -க்கள் வை. முத்து ராஜா, எம். சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
வியாழக்கிழமை (ஜூலை 20) மாலை ‘கம்பனில் சிறுபாத்திரங் கள்’ என்ற தலைப்பில் கவிஞர் ரமா ராமநாதன் தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தலைமையில் ‘கம்பன் காப்பி யத்தில் மிகுதியும் காணப்பெறுவது வள்ளுவத்தின் வழியா சிலம்பின் வழியா’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில், பேரா. கு. ஞானசம்பந்தன் நடுவராகக் கொண்ட பட்டிமன்றம் நடைபெறுகிறது.
வெள்ளிக்கிழமை (ஜூலை 21) மாலை நடைபெறும் மாணவர் அரங்குக்கு பாரதி கல்விக் குழுமத் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகிக்கிறார். தொடர்ந்து பேராசிரியர் எம். ராமச்சந்திரன் தலைமையில் வழக்காடு மன்றம் நடை பெறுகிறது.
சனிக்கிழமை (ஜூலை 22) மாலை புலவர் ரெ. சண்முக வடிவேலு தலைமையில் ‘சந்திப்பு வளையம்’ நிகழ்ச்சி திண்டுக்கல் தொழிலதிபர் க. ரெத்தினம் தலைமையில் நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினராக திருச்சி மக்களவை உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் பேசுகிறார். திருவாரூர் புலவர் ரெ. சண்முகவடிவேல் தலைமையில் சந்திக்காதோர் சந்திப்பு எனும் தலைப்பில் சந்திப்பு வளையம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) நடைபெறும் நிறைவு விழாவுக்கு, திலகவதியார் திருவருள் ஆதீனம் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் தலைமை வகிக்கிறார். பேசுகிறார். தொடர்ந்து கோவை பாலாம்பிகாவின் கலைக்கோயில் நாட்டியப்பள்ளி மாணவிகளில் பரத நாட்டியம் நடைபெறுகிறது.
இதையடுத்து, திருச்சி முன்னாள் மேயர் ராணி சாருபாலா தொண்டைமான் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா சிறப்பு விருந்தினராகவும், முதன்மை விருந்தினராக மாவட்ட முதன்மை நீதிபதி ஜி. நாராயணன், மாவட்ட எஸ்பி. வந்திதா பாண்டே,
நகராட்சி ஆணையர்(பொ) எஸ். சித்ரா, முதன்மை கல்வி அலுவலர் மா. மஞ்சுளா, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தி.அனிதா ஆகியோர் முன்னிலையில், பாரதிபாஸ்கர் நடுவராக இருந்து நடத்தும் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கம்பன் கழகத் தலைவர் ச. ராமச்சந்திரன், செயலர் ரா. சம்பத்குமார் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.