திருவொற்றியூரில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் காவலர் கணபதி (36), வழக்குரைஞர் மதிவாணன் (32) ஆகிய இருவரும்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
எண்ணூர் காவல் நிலையத்தில் நீதிமன்ற பணிகளைக் கவனிக்கும் காவலராக பணியாற்றி வருபவர் கணபதி. மதுரையைச் சேர்ந்த கணபதிக்கு பிரேமலதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மணலி காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார்.
திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மதிவாணன். ஓராண்டு முன்புதான் திருமணமாகியுள்ளது. திருவொற்றியூர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்து வருகிறார். இருவரும் நண்பர்கள் ஆவார்கள். இருவரும் திங்கள்கிழமை இரவு திருவொற்றியூரிலிருந்து மணலி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
சத்தியமூர்த்தி நகர் பக்கிங்காம் கால்வாய் அருகே வந்தபோது மணலியிலிருந்து சென்னைத் துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் கணபதியும், மதிவாணனும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது சடலங்களை யும் மீட்டு உடல் கூராய்வு பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுனர் ராஜூவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.