அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால் நாடு முழுவதும் காங்கிரஸார் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக்கொண்டாடி வருகின்றனர்.
ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த பி.ஆர்.கவாய் அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டிருந்தது.
இந்த தண்டனையை நிறுத்திவைக்க கோரி ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தான் குற்றம் இழைக்காததால் மன்னிப்பு கேட்க முடியாது என ராகுல் காந்தி பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்ப பெயரையே வைத்திருக்கிறார்கள்” என்று சர்ச்சைக்குரிய வகையில் ராகுல்காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து, மோடி சமூகத்தினரை இழிவுப்படுத்தும் விதமாக பேசியதாக கூறி ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அதன்பிறகு அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது வரும் 2024 மக்களவை தேர்தலையொட்டி, 3 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த ராகுல்காந்திக்கு எதிரான இந்த வழக்கை திடீரென கடந்த மார்ச் மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுடன் ஜாமீனும் வழங்கி, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து சூரத் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு காங்கிரஸ் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத பாஜக அரசின் சூழ்ச்சியே இந்த 2 ஆண்டு சிறைத்தண்டனை என்று காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டது. தொடர்ந்து, சிறைத் தண்டனைக்குள்ளானதால் ராகுல் காந்தி தன்னுடைய எம்.பி பதவியையும் இழக்க நேர்ந்தது.
பின்னர், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்தது. இதனைத்தொடர்ந்து, மேல்முறையீட்டு மனுவில் சூரத் அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் (சூரத்) உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார்.
தொடர்ந்து ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை என்ற சூரத் அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது. மேலும், தண்டனையை நிறுத்தி வைக்க உரிய காரணங்கள் இல்லை என்பதால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்த ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார். இதனால் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு தொடர்வதாக கூறப்பட்டது.
எனினும் விடாத ராகுல்காந்தி, 2 ஆண்டுகள் சிறைதண்டனை யை உறுதி செய்த குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், மோடி சமூகம் என்பது இந்திய தண்டனை சட்டத்திற்குள் வரும் வரையறுக்கப்பட்ட சமூகம் இல்லை, தான் கூறியது புகார் தாரரை குறிப்பிடவில்லை, தன்னுடைய கருத்தால் புகார்தாரர் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடவில்லை உள்ளிட்ட 10 காரணங்களை குறிப்பிட்டு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ராகுல்காந்தி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு விசாரித்த விசாரித்த பி.ஆர்.கவாய் அமர்வு ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து இன்று தீர்ப்பளித்துள்ளது. இதைக்கேள்வியுற்ற காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிவருகின்றனர்.