Close
நவம்பர் 24, 2024 9:13 மணி

மக்கள் தொடர்பு முகாமில் 655 பயனாளிகளுக்கு ரூ.1.55 கோடியில் உதவிகள்

புதுக்கோட்டை

விராலிமலை அருகே அகரப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார், ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டம், அகரப்பட்டி வருவாய் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 655 பயனாளிகளுக்கு ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கோட்டம், விராலிமலை வட்டம், கொடும்பாளூர் சரகம்,அகரப்பட்டி வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா தலைமையில் இன்று (09.08.2023) நடைபெற்றது.

இம்முகாமில் தமிழக அரசு பல்வேறு அரசுத் துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் மக்கள்நலத் திட்டங்கள் குறித்தும் அத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களால் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் இம்முகாமில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, பொது சுகாதாரத்துறை, வேளாண் பொறியியல் துறை வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

அகரப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் வருவாய்த்துறை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 655பயனாளிகளுக்கு ரூ.1,54,70,104  மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா  பேசியதாவது:

பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மாதந்தோறும் ஒரு குக்கிராமத்தை தேர்வு செய்து மக்கள் தொடர்பு முகாம் நடத்திட அறிவுறுத்தி யுள்ளார்கள்.

அதன்படி தமிழக அரசின் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கள் தொடர்பு முகாமில் அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் கண்காட்சிகள் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அறிந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர்.

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்காக முதல்கட்டமாக 7 வட்டங்களில் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

மேலும் மீதமுள்ள 5 வட்டங்களிலும் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.மேலும் பொதுமக்கள் அனைவரும் அளிக்கும் மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரியநடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. மேலும் அரசின் சார்பில் செயல்படுத்தப் படும் திட்டங்களின் கீழ் பயன் பெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெறலாம்.

இம்மனுக்களின் மீது அலுவலர்களால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியரகத்தில் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு பொது மக்களின் கோரிக்கை மனுவின் நிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற முகாம்கள் மூலமாக அரசின் திட்டங்களை அறிந்து கொள்வதுடன் அவற்றின் மூலம் பயன்பெற வேண்டும் என்றார் ஆட்சியர் மெர்சி ரம்யா.

அதனைத் தொடர்ந்து,  இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வனத்துறையின் சார்பில், பசுமை தமிழகம் இயக்கம் மற்றும் தமிழ்நாடு பல்லுயிர் பரவல் (ம) பசுமை யாக்குதல் (ம) காலநிலை மாற்றம் திட்டத்தின்கீழ், 100 மரக் கன்றுகள் நடும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர்  மரக்கன்றுகள் நடும் பணியினை மேற்கொண்டார்.

இந்த மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் காமு.மு.பி.மணி,  இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, தென்னலூர் பழனியப்பன்,

அட்மா கமிட்டி தலைவர் இளங்குமரன், ஒன்றிய குழு உறுப்பினர் மு.பி.ம.சத்தியசீலன்,  வட்டாட்சியர் சதீஸ்குமார், ஊராட்சி மன்றத் தலைவர் தனபாக்கியம்,  உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top