Close
நவம்பர் 23, 2024 2:35 காலை

பிரபஞ்சத்தை அறிய கணிதம் அவசியம்… பேராசிரியர் சிவராமன்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு கேகேசி கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பேசிய கணித்துறை பேராசிரியர் சிவராமன்

பிரபஞ்சத்தை அறிய கணிதம் அவசியம் என்றார்  கணிதப்
பேராசிரியர் சிவராமன்.

இந்திய தேசிய அறிவியல் அகாடமி சார்பில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கி. அவர்கள் மூலம் வருடந்தோறும் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த விழிப்புணர்வு பயிற்சிகள் நடத்தி வருகிறது.

அதன் அடிப்படையில் இவ்விருதினை 2018 -ல் பெற்ற சென்னை வைஷ்ணவ் கல்லூரி கணிதத்துறை இணைப் பேராசிரியர் ஆர்.சிவராமன் கடந்த 24 ஆம் தேதி முதல் 26 -ஆம் தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்களில் பங்கேற்று உரையாற்றினார்.

அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசினர் மகளிர் கலை கல்லூரியில் கணித சிறப்பு பயிற்சி முகாம் கணிதத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் எஸ்.ஞானஜோதி தலைமை  வகித்து தொடக்கி  வைத்தார்.

இதில், கணிதத்துறை இணைப் பேராசிரியர் ஆர்.சிவராமன் பேசியதாவது: பிரபஞ்ச இயக்கம் அனைத்தையும் அறிய கணித கல்வி அறிவு அவசியம். அறிவியலின் அடிப்படை தளம் கணிதமாகும்.மருத்துவம், இயற்கை அறிவியல், அண்டவியல், தொழில்நுட்பம், சூழியல் என எந்த துறைகளை எடுத்துக் கொண்டாலும் அதற்கு கணிதம் தேவைப்படுகிறது.

புதுக்கோட்டை
கணித பயிற்சி முகாமில் பங்கேற்ற கேகேசி கல்லூரி மாணவிகள்

எதிர்கால தொழில்நுட்பங்கள் பலவும் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டே கணிக்க முடிகிறது. காலநிலை மாற்ற சூழலை முன்கூட்டியே அறியவும் கணிதம் பயன்படுகிறது. மனித வாழ்வியலுடன் கணிதம் இணைந்தே உள்ளது. அதை தனியாக பிரிக்க முடியாது.

நம் நாட்டிற்கு இன்னும் அதிக எண்ணிக்கையில் கணித அறிஞர்கள் தேவை. அதற்காக மாணவர்களை ஊக்குவிப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும் என்றார் அவர்.  இதையடுத்து  பல்வேறு கணித மாதிரி பொருட்களைக் கொண்டு மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.  மேலும் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழக இயக்குனர் எஸ்.விஜிகுமார், எஸ்.ஆர் அரங்கநாதன் நூலக நிர்வாகி கோ.சாமிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக கணிதத் துறை தலைவர் ஆர்.ரோகிணி வரவேற்புரை ஆற்றினார். பேராசிரியர்ஆர். பூர்ணிமா நன்றி கூறினார் .இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து புதுக்கோட்டை போஸ் அறிவியல் கழகம் செய்திருந்தது.

இதைப் போல ஓணாங்குடி ஊராட்சி நடுநிலைப்பள்ளி, டி.இ.எல்.சி நடுநிலைப்பள்ளி, கூழையான்விடுதி சவுத் ஸ்ப்ரிங் சர்வதேச பள்ளி, சுப்பராமைய்யர் நடுநிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு நேரில் சென்று கணித விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகளை நடத்தப்பட்டது..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top