நேர்முகம் கவனம்..என்ற புத்தகத்தை நேற்று வாங்கினேன். நாம் எந்த நேர்காணலுக்கு இனி போகப்போறோம். ஆனால் எத்தனையோ பேர் எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று நேர்முகத் தேர்வில் தோற்றுப் போகிறார்கள் . அவர்களுக்கு பயன்படும் வகையில் அறிமுகப்படுத்தலாம் என்கிற நோக்கில் இதை வாங்கினேன்.
நான் இரண்டு முறை நேர்முகத் தேர்விற்கு (Interview ) போயிருக்கிறேன். முதலாவது நான் எம்.ஃபில் படிப்பதற்காக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்திற்கு 1981-ல் போனது. எழுத்துத் தேர்வு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு போனபோது என்னைக்கேட்ட முதல் கேள்வி “நீ எந்தத் செய்தித்தாளை இன்று படித்தாய்?”
செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருந்ததால் சொன்னேன். அடுத்த அரை மணிநேரமும் அதன் தொடர்ச்சிதான். இப்போதும் மாணவர்களிடம் உரையாடும் போது கேட்கும் முதல் கேள்வி ‘என்ன செய்தித்தாள் வாசித்தீர்கள்?’ என்று. செய்தித்தாள் வாசிப்பு எவ்வளவு அவசியம் என்பதை போட்டித் தேர்வாளர்கள் கூட உணராமல் இருக்கிறார்கள் என்பதே இன்றைய நிதர்சனமான உண்மை.
நேர்முக தேர்வில் வெற்றிபெற்று இடம் கிடைத்தாலும் அங்கு போகாமல் சென்னையிலேயே படித்தேன்.இரண்டாவது நேர்முகத் தேர்வு என் பணி நிமித்தமானது. என்னை கேள்வி கேட்டவர் புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் பேராசிரியர் கோ. தங்கவேலு. தேர்வு பெற்று பணியில் சேர்ந்து ஓய்வும் பெற்றாகிவிட்டது. ஆனால் மாணவர்களுடான உரையாடல் தொடர்கிறது.
“இந்து தமிழ் திசை” ஒரு சிறப்பான பணியைச் செய்கிறது. அது இன்றைய இளைஞர்களுக்கான போட்டித் தேர்வுக்கான நல்ல வழிகாட்டுதல்கள். அந்தவகையில் “நேர்முகம் கவனம்” நூலும் ஒன்று. இந்த நூலை கட்டுரை வடிவில் இல்லாமல் சுவாரஸ்யமான உரையாடல் வடிவில் அமைத்திருக்கிறார் ஆசிரியர் ஜி.எஸ்.எஸ்.
ஒவ்வொரு உரையாடலின் முடிவில் அந்த உரையாடல் குறித்த ‘சில பார்வைகள் – சில ஆலோசனைகள் ‘ என்ற தலைப்பில் விமர்சனம் இருக்கிறது. அதில் சரியான வழிகாட்டுதல் இருக்கிறது. அது மிகவும் பயனுள்ளதாகத் தெரிகிறது. இப்படி நூலில் 29 உரையாடல்கள் விமர்சனங்கள் உள்ளது.
செல்போன் ரீசார்ஜ் செய்ய எவ்வளவோ செலவழிக்கிறோம். 140 ரூபாய்க்கு, வாழ்க்கைக்கு பயன்படும் நூலை வாங்க முடியாதா என்ன?
ஜி.எஸ்.எஸ். என்கிற ஜி.எஸ்.சுப்பிரமணியன் இளைஞர் களுக்கான எழுத்தாளர். “இந்து தமிழின் ” ஆரம்பகாலத்தில், இன்றும் பிரச்னையாக இருக்கும் பல நாடுகளைப் பற்றியும் , புதிதாக வளர்ந்த சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் பற்றியும் அவர் எழுதியக் கட்டுரைகள் எக்காலத்துக்கும் பயன்படும் (அதன் சேகரம் என்னிடம் உள்ளது.)இந்து தமிழ்திசை வெளியீடு. புதுக்கோட்டை சக்ஸஸ் புத்தகக் கடையில் 10% கழிவோடு கிடைக்கும்.
# சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை-புதுக்கோட்டை #