Close
மே 20, 2024 5:41 மணி

புத்தகம் அறிவோம்… சிதறு தேங்காய்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

தென்கச்சி கோ. சுவாமிநாதன், ஒருவர் கோபத்தை கையாண்ட விதத்தைத் சொல்வார்.ஒரு விமான நிலைய வாசலில் விமானத்தில் பயணம் செய்ய விருப்பவர் ஒரு போர்ட்டரை சப்தம் போட்டு கோபமாகத் திட்டிக்கொண்டிருப்பார்.

திட்டியவர் போனபின், இதைப்பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், போர்ட்டரிடம் ” என்னப்பா உன்னை கோபமாக இவ்வளவு திட்ட விட்டு போகிறார். நீ அதற்கு கொஞ்சம்கூட கோபம் காட்டவில்லையே ஏன்?” என்பார். அதற்கு போர்ட்டர் சொன்னார் “ஏன் கோபப்பட வேண்டும். அவர் போவது சிங்கப்பூருக்கு; லக்கேஜ் போவது லண்டனுக்கு” என்று சொல்லிவிட்டு ஒன்றும் நடவாததுபோல் போவார்” என்று.

இது போல் துன்பம், துயரம், விரக்தி, ஏமாற்றம், கவலை, எவ்வளவு இருந்தும் போதாமை, என்று 36 உருவகக்கதைகளை, நிகழ்வுகளை இறையன்பு “சிதறு தேங்காய்” புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். குமுதம் வார இதழில் எழுதப்பட்டதன் தொகுப்பு இது.

ஒவ்வொரு கதையின் தலைப்பிலும் ஒரு செய்தியைச் சொல்லி விட்டு பின்னர் அது தொடர்புடைய ஒரு நிகழ்வை சுவை பட நமக்குத் தருகிறார். உதாரணத்திற்கு “வறுமை செம்மை ” என்ற கட்டுரையில்…”நரிக்குறவர்கள் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு அன்பு? என்று என் நண்பர் ஒருவர் கேட்டார். அவர் நான் எழுதிய ‘நரிப்பல்’ என்கிற சிறுகதைத் தொகுப்பை வாசித்த பிறகுதான் அப்படி கேட்கிறார் என்று ஊகித்துக்கொண்டேன்.

“அவர்கள் வங்கிகளிடம் வாங்கும் கடனை ஒழுங்காக திருப்பித் தருகிறவர்கள். “வறுமையிலும் செம்மை” எனக்கு சரஸ்வானி கிராமத்தை ஞாபகப்படுத்துகிறது என்றேன்.”சரஸ் வானியில் என்ன நடந்தது?” என்றார் அவர்.

“நாடோடி எழுதிய உண்மைச் சம்பவம் அது” .சரஸ்வானி என்னும் கிராமத்திற்கு வெளியிலிருந்து பெரியவர் ஒருவர் போவார். வெயிலில் வந்ததால் கடுமையான தாகம். சுற்றும் முற்றும் பார்ப்பார். ஒரு வயலில் கிணற்றையும் அதன் அருகில் ஒர் இளைஞன் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்ததையும் பார்த்தார்.

அவனிடம் சென்று தண்ணீர் கேட்பார். அவனும் இவருக்கு தண்ணீர் இறைத்துக் கையில் ஊற்றுவான். தண்ணீர் இளநீர் போல் சுவையாக இருந்தது.தாகம் தீர்ந்தபின் கேட்பார்” தண்ணீர் சுவையாக இருக்கிறதே. சமீபத்தில் வெட்டியதா?” என்று. அதற்கு அந்த இளைஞர் ” போன ஆண்டு வெட்டியது. இந்தத் தண்ணீரைக் குடிப்பவர்கள் எல்லாம் சுவையாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்” என்றான்.”ஏன் ருசியாக இருக்கிறது என்று உனக்குத் தெரியாதா?””நான் இதுவரை குடித்துப் பார்த்ததில்லை.””என்னவேடிக்கையாக இருக்கிறது? வயலும் கிணறும் உன்னுடையது தானே?”

ஆமாம். நான் குடிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்தக் கிணறை வெட்டுவதற்கு ஒருவரிடம் கடன் வாங்கினேன்.அந்தக் கடனை அடைக்கும்வரை இந்தத் தண்ணீரை குடிப்பதில்லை என்று சங்கல்பம் செய்து கொண்டேன். முக்கால்வாசிக்கடன் முடிந்துவிட்டது இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது “என்றான் அவன்.

பெரியவருக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை. ‘இந்த காலத்தி லும் இப்படி இருக்கிறார்களே’ என்று நினைத்துக் கொண்டார்.
அது போலதான் நானும். பெரிய பணக்கார்கள் வாங்கிய கடனை ஒழுங்காகக் கட்டாத போது, பெறுகிற சிறுகடன் தொகையை மாதா மாதம் தவறாமல் நரிக்குறவர்கள் கட்டுவதைப் பார்த்திருக்கிறேன். நம்பகமானவர்கள் மீது அன்பு ஏற்படுவது இயற்கை தானே!

‘அப்படியா’ என்று அதைக்கேட்ட நண்பர் இனிமேல் நானும் அவர்களிடம் பாசமாக இருப்பேன்’ என்று நடையைக் கட்டினார்.(பக்.21-23).குமுதம் பு(து)த்தகம் வெளியீடு,
044 – 2642 6124.

# சா. விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top