Close
செப்டம்பர் 20, 2024 12:38 மணி

புத்தகம் அறிவோம்… திரு.வி.க..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

“திரு.வி.க. அவர்களின் கை ஒரு காலத்தில் இளமை விருந்து எழுதியது; பெண்ணின் பெருமை தீட்டியது; காந்தியடிகளும் மனித வாழ்க்கையும் பற்றி விளக்கியது. முடியும் காதலும், சீர்திருத்தமும் பற்றி வரைந்தது. முருகன் அருள் வேட்டல்கள் முதல் கிருஸ்து அருள் வேட்டல் வரையில் பல அரிய பாடல் களை இயற்றியது.

அவர் மேடையில் பேசிய பேச்சுகளும் இவ்வாறே பல திறத்தன. தமிழ் இலக்கிய மேடைகள்; சீர்திருத்த கூட்டங்கள், அரசியல் மாநாடு, தொழிற்சங்கங்கள், இளைஞர் மன்றங்கள், சமயக்கழகங்கள் முதலிய பலவும் அவருடைய செந்தமிழ்ச் சொற்பொழிவு களால் சிறப்புப் பெற்றன.

தனிமனிதர் பற்பலர் அவருடைய நல்லெண்ணத்தாலும், நல்லுதவியாலும் திருந்தினர்; உயர்ந்தனர். குடும்பங்கள் மிகப்பல அன்புரைகளாலும் அறிவுரைகளாலும் நல்வாழ்வு பெற்று நலிவு நீங்கின. ஆகவே தொண்டு என்பது தனி மனிதர் முதல் நாடு வரையில் எவ்வளவு பரந்து அறிய முடியுமோ அவ்வவ்வளவும் பரப்பாக அமைந்த பெருவாழ்வு திரு.வி.க. வின் பொது வாழ்வு” பக்.18.

“மு.வ.”என்று தமிழுலகம் அறிந்த மு.வரதராசன் அவர்கள் எழுதிய 4 வாழ்க்கை வரலாற்று நூல்களில் ஒன்று திரு.வி.க. மற்ற மூன்று அறிஞர் பெர்னாட்ஷா,காந்தியண்ணல்,கவிஞர் தாகூர்.

மு.வ.வின், திரு.வி.க. அவரின் வாழ்க்கை வரலாற்றை பிறப்பு முதல் மறைவு வரை ஆண்டு வாரியாக விவரிக்கும் நூல் அல்ல. அவருடைய உயரிய குணங்களை, எழுத்தாற்றலை, சொல்வன்மையை, தேசத் தொண்டை, தொழிற்சங்க செயல்பாட்டை, அறவழி வாழ்க்கையைச் செப்பும் நூல் .

“திரு.வி.க. என்றால் மறக்க முடியாது மூன்று தனிப்பண்புகள் உண்டு. அது, தூய்மை, எளிமை, பொதுமை.

தூய்மை: புறத்திலும் அகத்திலும்; எழுதும் தமிழிலும் எண்ணும் எண்ணத்திலும், உடுக்கும் உடையிலும், உரைக்கும் உரையிலும்; செய்யும் கடைமையிலும், செல்லும் நெறியிலும்.

எளிமை:காண்பதற்கும் கேட்பதற்கும்; அணுகுவதற்கும் அழைப்பதற்கும்; உபசரிப்பதற்கும், உதவி பெறுவதற்கும்; குறைகூறுவதற்கும், குறை சொல்வதற்கும்.

பொதுமை: காந்தியடிகள் போல் பல கட்சியின் உள்ளத்தைக் கவரும் அரசியல் பொதுமை; மார்க்ஸ் போல பல மக்களையும் ஒன்றுபடுத்த விழையும் பொருளியல் பொதுமை; இராமலிங்க அடிகள் போல் பல சமய நெறிகளிலும் அடிப்படை ஒன்றைக்காணும் சன்மார்க்க பொதுமை; திருவவள்ளுவர் போல் எக்காலத்திற்கும் இன்றிமையாத உண்மைகளை உணர்ந்து தெளியும் வாழ்வியல் பொதுமை.”பக்.20.

இப்படி திரு.வி.க வின் ஒவ்வொரு சிறப்பு இயல்புகள் பற்றியும் எழுதுகிறார் மு.வ. இந்த நூலில். நூலில் உள்ள 13 அத்தியாயங்களின் தலைப்பை…தமிழகத் தந்தை,வாழ்க்கை,
வளர்ச்சி,தொண்டு,விடுதலைப் போர்,அரசியல்,
நினைவாற்றல்,தமிழ் நடை,செய்யுள் தொண்டு,தமக்கென வாழாமை,பெண்ணின் பெருமை, அஞ்சாநெஞ்சம்,கருத்தின் ஒளி,வானம்பாடி,கடவுள் நெறி -பார்த்தாலே மேற்கண்ட வரிகள் விளங்கும்.

மு.வ.அவ்வப்போது பல்வேறு இதழ்களில் திரு.வி.க. பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு திரு.வி.க.. பதிவின் முதலில் உள்ளது திரு.வி.க.வின் மறைவிற்குப் பிறகு எழுதிய கட்டுரையில் உள்ளது.144 பக்கம் உள்ள இந்த நூலை பாரி நிலையம் வெளியிட்டுள்ளது.044-25270795.

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top