Close
மே 20, 2024 7:28 மணி

புத்தகம் அறிவோம்… இவர்களைச் சந்தித்தேன்…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

கடந்த 10 ஆம் தேதி “ஞானாலயா” ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்தத் திரைப்பட வெளியீட்டுக் குழுவில் இருந்தவர்களுக்கு ‘அல்லயன்ஸ்’ பதிப்பக உரிமையாளர் அல்லயன்ஸ் சீனிவாசன் ஒரு புத்தகக் கட்டை நினைவுப் பரிசாக வழங்கினார். வீட்டில் வந்து பிரித்துப் பார்த்தால் சோவின் “இவர்களைச் சந்தித்தேன்” 3 தொகுதிகள். வாங்கவேண்டுமென்று நினைத்தது அன்பளிப்பாகவே கிடைத்தது மகிழ்சியாக இருந்தது.

துக்ளக் பத்திரிக்கையோடு எனக்கு தொடக்கம் முதல் கரோனா காலம் வரை இருந்தது. கிட்டதட்ட ஒரு நாற்பதாண்டு கால துக்ளக் இதழ்கள் என்னிடம் உண்டு. சோவின் மறைவிற்கு இரங்கல் கூட்டம் நடத்த நினைத்தபோது, அதை ஏதாவது ஒரு அமைப்பின் சார்பில் நடத்த வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டதுதான் எங்கள் “வாசகர் பேரவை” .

சிலரிடம் அரசியல் தலைவர்கள் பேட்டி கொடுக்கவே தயங்குவார்கள். சோ, பிரித்திஷ் நந்தி, தற்போது கரன் தாபர் போன்றவர்கள் அவர்களில் அடக்கம். பிரதமர் நரேந்திர மோடி கரன் தாபரின் கேள்விகளுக்கு பதிலளிக்க சிரமப்பட்டதுதான் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுப்பதை நிறுத்த காரணம் என்றும் சொல்வார்கள். முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்குக் கூட அந்த பிரச்னை வந்தது.

இவர்களைச் சந்தித்தேன் மூன்று தொகுதிகளும் ஒரு சமகால வரலாற்று ஆவணம். 1970 தொடங்கி 1998 வரையிலான காலகட்டத்தில் இருந்த அனைத்து இந்திய அரசியல் தலைவர்களின் பேட்டிகளும் இதில் உண்டு.

முதல் பேட்டி சோவின் நெருங்கிய நண்பர் ஜெயலலிதா. இறுதிப் பேட்டி சோ வால் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகிய கலைஞர் மு.கருணாநிதி. இந்த பேட்டிகள் யாவும் துக்ளக் பத்திரிக்கையில் வந்தது.  1250 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் மூன்று தொகுதிகள் வழி இந்திய அரசியலின் முக்கிய அம்சங்களை அறிந்து கொள்ளலாம்.

பேட்டி எடுக்கப் போகும் நிருபர்கள் எவ்வளவு தயாரிப்போடு போகவேண்டும், கொடுப்பவர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இதில் உள்ள சந்திப்புகள் மிகச்சிறந்த உதாரணங்கள். பத்திரிக்கையாளர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

சோவிடம் உள்ள சிறந்த குணங்களில் ஒன்று இதுபோன்ற சந்திப்புகளின் போது தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்கின்ற விஷயங்களை பொதுவெளியில் சொல்ல மாட்டார். இன்றைய அரசியல் வாதிகள் கடந்தகால அரசியலை புரிந்துகொள்ள இதை வாசிக்க வேண்டும். அல்லயன்ஸ் பதிப்பகம்,சென்னை.044 24641314.

# சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை-புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top