மாணவர்கள் தங்கள் படிப்பில் திட்டமிடவில்லை என்றால் தேர்வில் வெற்றிபெறுவது கடினமே..ஒரு பாடத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற திட்டமிடல் இல்லை யெனில் ஒரு காரியத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கும் பயிற்சி இல்லாமல் போகும். இன்றைய வேலையை இன்றே செய்ய வேண்டும் என்ற திட்டம் இல்லாவிடில் நாளை, நாளை மறுநாள் என்று காரியம் தள்ளிக்கொண்டே போகும்.
இன்று நடந்த பாடத்தை இன்றே படிக்கும் பழக்கம் இல்லையெனில் ஆண்டின் இறுதியில் பாடங்களின் சுமை அதிகரித்து தேர்வில் மதிப்பெண் குறையவோ அல்லது தோல்வி அடையவோ வாய்ப்புள்ளது. பக்.9.
“வெல்லப்போவது நீ தான்”, பேராசிரியர் அ.முகம்மது அப்துல்காதர் அவர்களின் , பள்ளி, கல்லூரி மாணவர்களுக் கான நூல் இது என்றாலும் போட்டித் தேர்வு எழுதுபவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய நூலும்கூட.
பேராசிரியர், ஒரு கல்லூரியின் முதல்வர் என்பதால் மாணவர்களை தினந்தோறும் சந்திக்கும் வாய்ப்பு பெற்றவர். அதனால் அவர் இன்றைய மாணவர்களின் நிலையறிந்து, அவர்களை நெறிப்படுத்துவது அவசியம் என்ற நிலையில் இந்த நூலை எழுதியிருக்கிறார்.
தேர்வு மட்டுமல்ல தேர்வுக்குப் பிறகு தேவைப்படும் விஷயங்களையும் தெளிவுற எழுதியிருக்கிறார். 24 தலைப்புகளில் உள்ளது இந்த நூல். தலைப்புகளே செய்தியை சொல்கிறது.
*திட்டமிட்டு படித்தால் தேர்வில் வெற்றி நிச்சயம்.
கவனிக்கும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்.
*உயர்ந்த இலக்கை தீர்மானியுங்கள்.
*என்ன படிப்பது? எங்கு படிப்பது?’
*கல்லூரி பருவத்தில் தடம் மாறும் மாணவர்கள்.
*நேர்முகத் தேர்வு, செய்யவேண்டியவை… செய்யக்கூடாதவை.
*ஆர்வமே வெற்றியின் தூண்டுகோல்.
*கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படுங்கள்.
*உயர்ந்த லட்சியம் உங்களை உன்னத மானவர்களாக ஆக்கும்.
*ஆசிரியப்பணி மகத்தானது.
இந்த நூலை ஆசிரியர்கள் வாங்கிப் படித்தால் நல்ல மாணவர்கள் உருவாவார்கள். மாணவர்கள் வாசித்தால் தேர்வில் வெற்றிபெறவும், நல்ல எதிர்காலத்தைத் தீர்மானிக்கவும் உதவும்.போட்டித் தேர்வாளர்கள் வாசித்தால் வேலை கிடைக்கும்.
சமூக ஆர்வலர்கள் இந்த நல்ல நூலை பள்ளி மாணவர்களுக்கு வாங்கி பரிசளிக்கலாம்.இந்து தமிழ் திசை வெளியீடு. விலை ரூ 130.
# சா.விஸ்வநாதன்-வாசர் பேரவை- புதுக்கோட்டை #