எம்.எம்.எஃப். எனப்படும் செயற்கை இழை தயாரிக்க உதவும் வி.எஸ்.எஃப். ரேயான் பஞ்சு குறைந்த விலைக்கு, வெளி நாட்டில் இருந்து கொள்முதல் செய்ய மத்திய அரசு விரைவில் தரச் சான்று வழங்க வலியுறுத்துமாறு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
இதுக்கு குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்புச் செயலாளர் பா.கந்தவேல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக 25 லட்சம் விசைத்தறிகள் மூலம், பல கோடி மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விசைத்தறி மூலம் துணி ரகங்களை உற்பத்தி செய்து அதன் மூலம் வேலை வாய்ப்பினை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் ஒரு கோடிக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஜவுளி துறை சார்பாக பயன் பெற்று வருகின்றன. தமிழகத்தின் காட்டன் உற்பத் திக்கு அடுத்தபடியாக செயற்கை இழை மூலம் உற்பத்தி செய்யப்படும் MAN MADE FIBER ரயான் VSF நூல் மூலம் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் தினமும் ஒரு கோடிக்கு மேற்பட்ட துணிகளை உற்பத்தி செய்து வருகிறார்கள்.
ஒரு நாளைக்கு 1500 மெட்ரிக் டன் மூலப் பொருளான பஞ்சின் மூலம் தமிழகத்தில் 75 க்கு மேற்பட்ட நூல் மில் மூலம் நூலாக 300 டன் மட்டும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டு மீதி அனைத்தும் தமிழகத்திலேயே உபயோகப்படுத்தி வருகிறோம்.
ரேயான் பஞ்சு மூலப்பொருளை பொறுத்தவரை இந்தியாவில் தனிநபர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி விற்பனை செய்து வருகிறார்கள். ஜவுளி துறையினரின் நீண்ட போராட்டத்திற்கு பின் ANTI TUMBING DUTY- வரியை போடாமல் இருக்க DGTR எனப்படும் ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் முறையிட்டு வெளிநாட்டில் இருந்து பஞ்சு கொள்முதல் செய்து கொள்ள லாம் என்று ஆணையை பெறப்பட்டிருந்தது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மூலப்பொருளான பஞ்சு வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு அதன் மூலம் நூல் உலக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
வெளிநாட்டில் கொள்முதல் செய்யப்படும் பஞ்சுக்கும் உள்நாட்டில் கொள்முதல் செய்யப்படும் பஞ்சுக்கும் விலையில் பெரும் வித்தியாசம் இருக்கும்.வெளிநாட்டில் இருந்து பஞ்சு கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று இருந்த சூழ்நிலையில், மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பஞ்சு ரகங்களுக்கும் QCO எனப்படும் QULAITY CONTROL ORDER தரச் சான்றிதழை வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பெற்றால் மட்டுமே இறக்குமதி செய்ய வழிவகை உண்டு என்று தெரியப்படுத்தி யிருந்தார்கள்.
இதற்கு ஜவுளி துறையினர் மத்திய அரசிடம் முறையிட்டு முதற்கட்டமாக பாலிஸ்டர் பஞ்சுக்கு தரச் சான்றிதழ் பெற கால அவகாசம் பெறப்பட்டு மற்றும் காட்டன் பஞ்சிற்கு அடுத்த வருடம் நவம்பர் வரை கால அவகாசம் கொடுத்து மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.
ஆனால் விஸ்கோஸ் ரேயான் பஞ்சுக்கு குறைந்தபட்ச காலம் மட்டுமே அவகாசம் கொடுத்து உடனடியாக அமல்படுத்தி தற்போது இந்தோனேசியா மற்றும் வியட்நாம் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் மூலப்பொருளை இறக்குமதி செய்ய தரச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் செய்துள் ளார்கள். ஆனால் இதுவரை யாருக்கும் தரச் சான்றிதழ் கொடுக்கவில்லை.
இந்தியாவில் தனிநபர் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் பஞ்சின் விலை தற்போது 148 ரூபாய் இல் உள்ளது. ஆனால்உலக அளவில் பஞ்சு விலை தற்போது 134 ரூபாய்க்கு கிடைக்கும் பட்சத்தில் இந்திய நூலை உரிமையாளர்களால் பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளார்கள்.
ஆதலால் முதலமைச்சர் இந்த பிரச்னையில் தலையிட்டு தமிழக நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு ரயான் பஞ்சின் விலை உலக விலைக்கு 134 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வழிவகை செய்து கொடுக்க வலியுறுத்தியும் அல்லது இந்தோனேசியா மற்றும் வியட்நாம் போன்ற வெளிநாட்டு போன்ற நிறுவனங்களுக்கு உடனடியாக மத்திய அரசு QCO தரச் சான்றிதழ் கொடுத்து இறக்குமதி மூலம் குறைந்த விலைக்கு பஞ்சை பெற்றுத்தர வேண்டும்.
அதன் மூலம் நூல் தயாரித்து துணி நெசவு செய்து, சர்வதேச சந்தையின் விலைக்கு ஏற்ப உள்ளூர் சந்தையிலும் வெளிநாட்டு சந்தையிலும் விற்பனை செய்ய வழிவகை ஏற்படுத்தும் என்பதால் தாங்கள் பிரதமருக்கும்,. மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கும் எடுத்துரைக்குமாறு அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
# செய்தி- ஈரோடு மு.ப. நாராயணசுவாமி #