சென்னை திருவொற்றியூர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று பொதுமக்களிடம் ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்யும் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 30 கருவிகளை திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தது.
தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை வழங்கும் சேவை கடந்த ஓராண்டுக்கும் மேலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில் நகர்ப்புர சுகாதார மையங்கள் மூலமாக வீதிவீதியாகச் சென்று பொதுமக்களிடம் பரிசோத னை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு உதவியாக ரூ.1 லட்சம் மதிப்புள்ள ரத்த அழுத்தத்தை அளவிடும் 30 நவீன உபகரணங்களை திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை முன் வந்தது.
இதனையடுத்து செவ்வாய்க்கிழமை சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, மண்டல அலுவலர் நவேந்திரன் ஆகியோர் முன்னிலையில் உதவி சுகாதார அலுவலர் டாக்டர் லீனாவிடம் மருத்துவமனை நிர்வாகி சுந்தரராஜன் ஒப்படைத்தார். இக்கருவிகள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்து நோயாளிகளைக் கண்டறிய உதவும் என மண்டலக் குழு தலைவர் தனியரசு தெரிவித்தார்.